நெல்லை திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம்… காரணம் என்ன?

அரசியல்

நெல்லை 36 வது வார்டு திமுக கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. 44 உறுப்பினர்களை பெற்றுள்ளது.

மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் பதவி வகித்து வருகிறார். மேயர் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு உருவாகி வருகிறது.

ஒரு கட்டத்தில் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஆணையரிடம் கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்தனர். இந்நிலையில் கட்சித் தலைமை தலையிட்டு கவுன்சிலர்களையும் மேயரையும் சமாதானம் செய்து வைத்தது. ஆனாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

கடந்த மாதம் 7-வது வார்டு கவுன்சிலர் இந்திராமணி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது 36 வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சின்னத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மேயருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “எனது வார்டு பகுதியான கோரிப்பள்ளம், பெரியார் நகர் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்கு பாளை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சரோஜினி நீர்தேக்க தொட்டியின் மூலம் பல ஆண்டுகளாக ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது.

அந்த நடைமுறையை மாநகராட்சி அதிகாரி உயர் சாதி மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து என்னை பழிவாங்கும் நோக்கில் அந்த நடைமுறையை மாற்றி அமைத்ததன் முதல் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனை மாநகராட்சி உயர் அதிகாரி முதல் திமுக சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணைமேயர், என அனைவரிடத்திலும் எடுத்து கூறியும் அதை நிவர்த்தி செய்யவில்லை.

இந்த விவகாரத்தில் சாதி பார்த்து முடிவு எடுத்துள்ளார்கள். இது என் மனதை ஆரம்பம் முதலே பாதித்து வந்தது.

மேலும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகத்தை “விராஜ்” என்ற தனியார் நபரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட நாள் முதல் தமிழக முதல்வருக்கும், அவரின் ஆட்சிக்கும் அவசொல் ஏற்படுகிற விதமாக குடிநீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடைந்து வருகிறது.

வார்டு தொடர்பாக எந்த ஒரு பணியையும் அதிகாரிகளிடம் எடுத்து கூறினாலும் சாதி அடிப்படையில் அதனை கண்டு கொள்வதில்லை.

அண்ணாநகர் பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நிரந்தர தீர்வு இல்லை.

குடிதண்ணீர் வழங்குதல், சுகாதார துாய்மை பணி, மின் விளக்கு பணி, மின்சாரதுறை பணி வார்டு கட்டுமான பணி என அனைத்தும் எங்கள் வார்டில் முடங்கியுள்ளது.

மேலும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினரான எனக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள் அனைவரிடத்திலும், சாதி தலைவிரித்து ஆடுகிறது. இவர்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய முடியவில்லை.

தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் எனது வார்டில் பிரச்சாரம் முதல் பல்வேறு நிலையில் நான் அவமானப் பட்டேன்

எனது 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவியை இன்று முதல் நான் ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Aadujeevitham: ஓடிடி ரிலீஸ் எப்போது?

வெறுப்பு பேச்சு… மோடிக்கு எதிராக 20,000 புகார்கள்: என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்?

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *