சட்டமன்றத்தில் அதிமுக ஆடிய சடுகுடு: வேடிக்கை பார்த்த திமுக!

இரண்டாவது நாளாக அக்டோபர் 18 ஆம் தேதி  கூடிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தின் போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி செய்ததை அடுத்து அவர்களை சபாநாயகர் அவையை விட்டு வெளியேற்றினார் என்பது ஊடகங்கள் எல்லாம் வெளியிட்ட செய்திதான்.

ஆனால் சபாநாயகரின் உத்தரவை மதிக்காமல் அதிமுகவினர் ஒரு வழியாக வெளியே சென்று இன்னொரு வழியாக அவைக்குள்ளே வந்து மீண்டும் சடுகுடு ஆட்டம் ஆடியிருக்கிறார்கள்.

இன்று (அக்டோபர் 18) காலை 9.30 மணியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் வருகை தர ஆரம்பித்தனர்.

சுமார் 9.45 மணியளவில் ஓபிஎஸ் தலைமையில்  அவரது ஆதரவு எம். எல். ஏ. க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மாணிக்கம் ஆகியோர்  அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தனர்.

கொஞ்ச நேரத்தில்  இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸை பார்த்தபடியே உள்ளே வந்து அமர்ந்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் 9.55 மணிக்கு இருக்கைக்கு வந்துவிட்டார். சரியாக  10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்தார்.

அதுவரை  அவைக்குள் வராமல் வெளியே காத்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி  சபாநாயகர் வந்த  அதே நேரத்தில் அவசரமாக உள்ளே வந்தார்.

தனது பக்கத்தில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்திருந்ததால்  டென்ஷனோடு முகத்தைத் திருப்பிக் கொண்டார். 

அவை நடவடிக்கைகளின் தொடக்க நிகழ்வாக கேள்வி நேரம் என்பது ஏற்கனவே அலுவல் ஆய்வுக் குழுவில் திட்டமிடப்பட்டதுதான்.

அதன்படியே  சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரம் தொடங்குகிறது என அறிவித்து  கேள்வி எண் 1 க்கு  பதிலளிக்க  அமைச்சர் துரைமுருகனை பதில் உரையாற்ற அழைத்தார்.

அந்த நேரத்தில் எழுந்து, பேச அனுமதி கேட்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது சபாநாயகர் அப்பாவு, ‘நீங்கள் முதல்வராக இருந்தவர். உங்களுக்கு தெரியாதது  இல்லை.

கேள்வி நேரத்தில் பேச அனுமதி கொடுக்க மாட்டார்கள். நீங்கள் அமருங்கள். கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு பதில் சொல்கிறேன்’  என்று சொல்ல, அதை எடப்பாடி கேட்கவில்லை.

தொடர்ந்து எழுந்து நின்றுகொண்டிருந்தார். உடனே எடப்பாடி ஆதரவு 62 எம்.எல்.ஏ.க்களும் எழுந்து சத்தம் போட்டபடியே இருந்தனர்.

சபாநாயகர் எழுந்து நின்று அமருங்கள் என்றார். ஆனாலும்  மீண்டும் சத்தம் போட்டனர்.  பதிலளிக்க முடியாமல் தவித்து நின்ற அமைச்சர் துரைமுருகன், அவை விதிகளை மீறியவர்களை வெளியேற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்ற சபாநாயகர் அப்பாவு, ‘அவர்களை வெளியேற்றுங்கள்’ என்று  சபைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடனடியாக  பாதுகாவலர்கள் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றத் தொடங்கினர். 

வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினரும்  அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமியின் கையைப் பிடிக்கச் சென்றனர் வெள்ளை உடை பாதுகாவலர்கள்.

அப்போது அவர்களை முறைத்துப் பார்த்த முனுசாமி, ‘மேல கைய வச்சே….?’ என்று மிரட்டலாக எச்சரித்தார். அதனால்  காவலர்கள் தயங்கித் தயங்கி நின்றனர்.

மீண்டும் சபாநாயகர் குரல் உயர்த்தி சொன்னதும் பாதுகாவலர்கள்  அதற்கு மேல் பொறுக்காமல்…  கோஷம் போட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை  பேரவையில் இருந்து வெளியில் இழுத்துச் சென்றுவிட்டனர்.

ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களோ இன்னொரு வழியாக மீண்டும் உள்ளே வந்து கூச்சலிட ஆரம்பித்தனர். 

கோவிந்தசாமி, செல்லூர் ராஜூ, தங்கமணி  உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள்  வெளியே செல்வதும் இன்னொரு வழியில் உள்ளே வருவதுமாக சடுகுடு ஆட்டம் போல் செய்தனர்.

இதுபோல்  சுமார் 40 நிமிடங்கள் அவைக்குள் வந்து சென்றுகொண்டிருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் கையில் ஒரு பேப்பர் வைத்துக் கொண்டு படிப்பதுபோல் இருந்தார்.

ஒரு வழியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 62 எம்எல்ஏக்களும் வெளியில் சென்ற பிறகு அவையை சுற்றி பார்த்த அமைச்சர் துரைமுருகன் மூன்றாவது முறையாக பதில் உரையாற்றுகிறேன் எனக் கூறி வாசித்தார்.

இன்று 15 கேள்விகளுக்கு 9 கேள்விகளுக்கு மட்டுமே பதில் உரை வாசிக்கப்பட்டது.

”அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இவ்வளவு சத்தம் போட்டும் திமுக எம் எல் ஏ க்கள் வாய் திறக்காமல் மௌனம் காத்தது ஏன்?” என்று  அமைச்சர் ஒருவரிடம்  கேட்டோம்.

”எங்கள் கொறடா கோவி செழியன் ஒவ்வொரு திமுக எம். எல். ஏ.வின்  இருக்கைக்கும் வந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள்  எவ்வளவு அத்து மீறி பேசினாலும் நடந்துகொண்டாலும் திமுக எம். எல்.ஏ.க்கள் யாரும் எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

இது முதல்வர் உத்தரவு என்று சொல்லிட்டு போனார். அதனால்தான் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவ்வளவு கலாட்டாவுக்கும் அமைதியாக இருந்தோம்”  என்றார் மெதுமெதுவான குரலில்.

வணங்காமுடி

பதவிக்காக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பன்னீர்: வச்சி செஞ்ச ஆறுமுகசாமி ஆணையம்!

டி20 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் சாதனை… யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts