ரூ. 5000 பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது பற்றி கேள்வி கேட்ட செய்தியாளரிடம், நீங்கள் எந்த டிவி செய்தியாளர் என்று சிரித்தபடியே கோபப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக டெல்லி செல்வதற்கு மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவின் சட்ட விதிகளின்படி தேர்தல் நடத்தப்பட்டது. கழகத்தின் தொண்டர்கள் கழக ஒருங்கிணைப்பாளராக என்னையும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்ந்தெடுத்தார்கள். இதுதான் உண்மை.
இடையில் பல பிரச்சினைகள் செயற்கையாக உருவாக்கினால் அதற்கு பதில் சொல்லத் தேவையில்லை. இந்திய தேர்தல் ஆணையம் இன்று வரை கழக ஒருங்கிணைப்பாளர் என்றுதான் கடிதம் அனுப்பி உள்ளது” என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு,
“இதுவரை அப்படி எதுவும் இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுத்து இருக்கிறதோ, அதைத்தான் மத்திய அரசும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அது தவறான தகவல்” என்று பதிலளித்தார்.
பொங்கல் பரிசில் கரும்பு வழங்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள் என்று பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“தமிழக விவசாயிகள் இந்த வருடமும் பொங்கல் பரிசாக கரும்பு வழங்குவார்கள் என்று எண்ணிதான் பயிரிட்டார்கள். அதை ஏற்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது” என்றார்.
தமிழக அரசு 5 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு, நான்தான் ரூ.5000 தரவேண்டும் என்று முதலில் சொன்னேன் என்று கூறிவிட்டு செய்தியாளரிடம் நீங்க எந்த சேனல்? என்று கேட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
கலை.ரா
மகனுக்கு நிச்சயதார்த்தம்: அம்பானி வீட்டில் குவிந்த பிரபலங்கள்!
பொங்கல் பரிசு: ஆட்சியர்களே முழுப் பொறுப்பு!