நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று (ஜனவரி 12) காலை 11 மணிக்கு வாக்கெடுப்பு நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. Nellai Mayor issue Climax panchayat
இந்த நிலையில் இன்று திமுக கவுன்சிலர்கள் யாரும் நெல்லை மாமன்றத்திற்கு செல்ல கூடாது என அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் திமுகவிற்கு 44 உறுப்பினர்கள், அதிமுகவிற்கு 4, காங்கிரஸிற்கு 3, மதிமுக 1, முஸ்லீம் லீக் 1, மமக 1 என்ற அளவில் கவுன்சிலர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பலான திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். அதன் உச்சக்கட்டமாக திமுக தலைமைக்கு மேயர் சரவணன் மீது பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்கள். இதை சமாளிக்கும் விதமாக மேயர் சரவணன் அடிக்கடி சென்னை சென்று பார்க்க வேண்டியவர்களை பார்த்து பேசி தன் மீதான நடவடிக்கையை தாமதப்படுத்திக் கொண்டே வந்தார்.
இதனால் சலிப்படைந்த திமுக கவுன்சிலர்கள் நெல்லை மாமன்றத்திலேயே, மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். நிர்வாக நடைமுறைப்படி ஜனவரி 12 வாக்கெடுப்பு என முடிவு செய்யப்பட்டது.
நெல்லையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் அடுத்தடுத்த மாநகராட்சிகளிலும் அதிருப்தி திமுகவினர் இதே வழிமுறையை கையாள தொடங்கிவிடுவார்கள், அது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக தலைமைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவை நெல்லைக்கு அனுப்பி வைத்தது திமுக தலைமை. இந்த நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி நெல்லையில் ஒரு தனியார் ஹோட்டலில் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அனைத்து திமுக கவுன்சிலர்களும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மேயர் சரவணனும் துணை மேயரும் வரக்கூடாது என தலைமை உத்தரவிட்டது. எனவே அவர்கள் இருவரும் வரவில்லை. மற்ற அனைத்து திமுக கவுன்சிலர்களும் கலந்து கொண்டார்கள். மேடையில் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவோடு மாவட்ட பொறுப்பாளர் டி.பி. மைதீன் கான், முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் அக்பர் ஆகியோர் இருந்தனர்.
இந்த கூட்டத்தில் சரவணனுக்கு எதிராக பல்வேறு கடுமையான புகார்களை பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள், தங்கம் தென்னரசுவிடம் பகிரங்கமாகவே தெரிவித்தார்கள். சமீபத்தில் நெல்லையை வெள்ளம் சூழ்ந்த போது கூட அவர் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள சென்னை, சேலம் என்று அலைந்து கொண்டிருந்தார் என்றும் கூறினார்கள்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், “நீங்க எல்லாருமே வஹாப் மாவட்ட செயலாளராக இருக்கும் போது போடப்பட்ட ஆட்கள். நா சொல்றத நீங்க யாரும் கேட்க மாட்டீங்க” என்று வெளிப்படையாக பேசி அமர்ந்துவிட்டார்.
இப்போதைய மேயர் சரவணனை, அப்பதவியில் அமர வைத்ததே நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வஹாப் தான். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கும் சரவணனுக்குமே முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய அப்துல் வஹாப், “கட்சிக்கு அவமானம் எதுவும் ஏற்படுத்திடாதீங்க” என்று உருக்கமாக பேசியிருக்கிறார். ஆனால் சரவணனின் மீது கோபத்தில் இருக்கும் அப்துல் வஹாப் தன்னை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் கவுன்சிலர்களிடம், “உங்க மன்சாட்சி படி முடிவெடுங்க” என்று சொல்லி அனுப்புவதாக தகவல்.
இதையெல்லாம் அறிந்து கொண்டு அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கவுன்சிலர்களிடம் மிகவும் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். ”தலைவர் முதலமைச்சர் பல கடுமையான நெருக்கடிகள்ல இருக்காரு. அவருக்கு மேலும் நாம் தொந்தரவு கொடுக்க கூடாது. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால் அது நம்ம கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியாகிடும். அதனால தலைவரையும் கட்சியையும் மனசுல வச்சி ஒத்துமையா இருங்க. உங்க கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார்.
அந்த கூட்டத்திற்கு பிறகும் திமுக கவுன்சிலர்கள் தங்களுக்குள் கூடிக் கூடி ஆலோசனை நடத்தினார்கள். மேயர் சரவணனுக்கு எதிராக அதிருப்தி கவுன்சிலர்களை ஒருங்கிணைக்க கூடிய பால்ராஜ், அனைவரையும் திரட்டி தனியாக ஓரிடத்தில் வைத்திருப்பதாக தங்கம் தென்னரசுவிற்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து உடனடியாக அதிருப்தி கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு விருதுநகரில் இருக்கும் தனது வீட்டிற்கு வருமாறு உத்தரவிட்டார் தங்கம் தென்னரசு. சென்னையில் இருந்து திமுக அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலையும் விருதுநகர் விரைந்தார்.
நேற்று இரவு தங்கம் தென்னரசு இல்லத்தில் அன்பகம் கலை முன்னிலையில் மீண்டும் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது மேயருக்கு ஆதரவாக ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்று அன்பகம் கலையிடம் அதிருப்தி கவுன்சிலர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து மேயர் சரவணனை நிச்சயம் மாற்றுவோம். ஆனால் இந்த வழிமுறை தவறு. தலைமையே முடிவெடுத்து அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து புதிய மேயரை தேர்வு செய்யும் என்று அதிருப்தி கவுன்சிலர்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்கள் தங்கம் தென்னரசுவும் அன்பகம் கலையும்.
இந்த அடிப்படையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மாமன்றத்தில் வரும் போது அங்கே ஒரு திமுக கவுன்சிலர் கூட சென்றிருக்க கூடாது என்பது தான் அவர்களின் உத்தரவு. இன்று காலை வரை மதுரையில் இருந்து இந்த விவகாரத்தை கண்காணித்து கொண்டிருக்கிறார் துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை.
இந்த பின்னனியில் இன்று நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. மேயர் சரவணனை மாற்றாவிடில் இந்த பிரச்சனை தொடரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன், மோனிஷா
உத்தரப்பிரதேசத்தில் ஒரே மாதத்தில் மேலும் ஐந்து விமான நிலையங்கள்!
அல்லு அர்ஜூன் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பார்ப்பா?… அப்போ தமிழ் படங்கள்?
Nellai Mayor issue Climax panchayat