முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கரை வேஷ்டி கட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (நவம்பர் 9) தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் நவம்பர் 5-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தை புதுவையில் உள்ள பாஜக கூட்டணி அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழிற்சாலையை அரசு மூடாதது ஏன்? சில அரசியல் கட்சி தயவுடன் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
தொழிற்சாலையை மூடிவிட்டு நிபுணர் கமிட்டி அமைக்க வேண்டும். தொழிற்சாலை விபத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், சிங்கப்பூர் சென்று சென்னை திரும்பிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கரை வேட்டி கட்டாமல் வந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “அதிமுக கரை வேட்டி கட்டக்கூடிய தகுதியை ஓ.பன்னீர் செல்வம் இழந்து விட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தை குண்டர்களை வைத்து ஓபிஎஸ் சேதப்படுத்தியதால் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். நிறைய கட்சி விரோத செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக கரை வேட்டி, சின்னம், பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது வரவேற்கத்தக்கது. அதிமுக துரோகிகளுக்கு பாடமாக தீர்ப்பு அமைந்துள்ளது. இனிமேல் ஓ.பன்னீர் செல்வம் வேறு ஒரு கலரில் தான் கரைவேட்டி கட்ட வேண்டும். ஓபிஎஸ் கரை வேட்டி கட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிகாரில் இட ஒதுக்கீடு உயர்வு மசோதா நிறைவேற்றம்!
காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய ஓபிஎஸ்