அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் யாரையும் நாகரிகமற்ற முறையில் விமர்சிக்கக் கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜனவரி 3) ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
மாஸ்டர் கிளாஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஐடி விங் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு கனெக்ட் என்ற புதிய செயலியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஐடி விங் நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
“கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தகவல் தொழில்நுட்ப பிரிவு என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும். யாரும் எதற்காகவும் அஞ்சக் கூடாது. எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.
பிற கட்சி நிர்வாகிகளைப் போன்று வெறுப்பை உண்டாக்கும் வகையில் செயல்பட வேண்டாம். யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்கக் கூடாது. இதை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக சாதனைகளையும் திட்டங்களையும் சமூக வலைதளம் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
எந்த விவகாரமாக இருந்தாலும் என்னை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். சமூக வலைதளங்களில் நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு மறைமுகமாக உங்களைக் கண்காணிக்கும் என்று ஆலோசனை வழங்கினார்” என்று அதிமுக ஐடி விங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டெல்லியில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை : உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!