சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஐயப்பன் இன்று (ஆகஸ்ட் 27) அவரை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இரண்டாக பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைக்கும் முயற்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார்.
இதையடுத்து மற்றொரு அணியாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் இணையச் சொல்லி தூதுவிட்டார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நேற்று (ஆகஸ்ட் 27) ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஐயப்பன் இன்று (ஆகஸ்ட் 27) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி ஐயப்பன் தமக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”எங்களுடைய எண்ணம் செயல் எல்லாம் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே.
அதுவே தொண்டர்களின் விருப்பமாகவும் உள்ளது. அனைத்து அதிமுக தொண்டர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நடத்திய நாடகத்தால், தொண்டர்கள் அனைவரும் தற்போது ஒன்றாக இணைய வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி வந்து கொண்டிருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் ஏழை எளிய மக்களுக்காக நலன் காக்க உருவாக்கப்பட்ட அதிமுகவில், நாங்களும் அந்த இலக்கை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் தொண்டர்களின் ஆதரவு எங்களுக்கு முழுமையாக இருக்கிறது.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இரண்டு அணிகளாக அதிமுக இருந்தபோது தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம்.
அந்த தேர்தல் முடிவு வந்தவுடனேயே தலைவர்கள் இணைவதற்கு முன்பாகவே தொண்டர்கள் இணைந்தார்கள்.
அதுபோல்தான் இன்றைக்கும் உண்மை நிலையை அறிந்ததற்குப் பின்னால் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இணைய வேண்டும் என்ற கருத்து வலுபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதிமுகவின் இணைப்பை வலியுறுத்தி மாவட்டந்தோறும் புரட்சிப் பயணம் தொடரும். இதில் இன்னும் எங்களோடு யார் யார் வருவார்கள் என்பது பரமரகசியம்” என்றார்.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ, “என்னைப்போன்று மற்ற எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பார்கள்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ஓ.பன்னீர்செல்வம் மீது போலீசில் புகார் அளித்த சி.வி.சண்முகம்