ஜெயலலிதாவின் உடல் 2016 டிசம்பரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்த அவரது உடலில் கால்களைக் காணோம் என்ற ஒரு தகவல் பகீர் கிளப்பி பறக்கத் தொடங்கியது. சில ஊடகங்கள் கூட இதை செய்தியாக வெளியிட்டன.
ஜெ.வுக்கு சுகர் அதிகமாக இருந்ததால் கால்களை எடுத்துவிட்டார்கள் என்றும் அதனால்தான் அவரது உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டபோது கீழ் பகுதியில் தளர்ந்து போய் இருந்ததாக தகவல்கள் பரவின.
இந்த பின்னணியில் இன்று (அக்டோபர் 18) வெளியான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெ.வின் கால்களுக்கு என்னாச்சு என்ற கேள்விக்கு தெளிவான பதிலை அளித்துள்ளது.
“மறைந்த முதல்வர் ஜெவின் கால்களோ விரல்களோ துண்டிக்கப்பட்டனவா என்று அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகனராவிடம் கேட்கப்பட்டபோது, அவர் உணச்சிவசப்பட்டு,
‘27-09-2016 அன்று ஜெயலலிதா காவிரி பிரச்சினை தொடர்பான அறிக்கையை தயாரித்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனையில் தனது இருக்கையில் இருந்தபடியே அறிக்கையை கூற,
தான் முதல்வரின் கால்களுக்கு எதிரில் அமர்ந்திருந்ததாகவும் இந்த கிசுகிசுக்கள் கண்டிக்கத் தக்கவை என்றும் கூறினார்.
மேலும் டாக்டர் சுதா சேஷையன் எம்பாமிங் செய்யும்போது, கால்கள் துண்டிக்கப்பட்டதா என்பதை தாம் கவனிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் சம்பிரதாய முறைப்படி ஜெயலலிதாவின் இரு கால்களின் கட்டை விரல்களையும் துணியால் கட்டியதாக ஓட்டுநர் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் கிருஷ்ணபிரியா, டாக்டர் சிவகுமார், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன், டாக்டர் மீரா கிருஷ்ணபிரியா, டாக்டர் ரேமண்ட் டோமினிக் சேவியோ, டாக்டர் பாபு குருவில்லா ஆப்ரகாம் ஆகியோரின் கூற்றுப்படியும்,
மற்றும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படியும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள், கால் விரல்கள் அவரது இறுதி மூச்சு வரை சரியாகவும், உள்ளவாறே இருந்தன என்றும் இந்த ஆணையம் கருதுகிறது.
மேற்சொன்ன ஆதாரங்களில் இருந்து மறைந்த முதல்வரின் முழங்காலுக்கு கீழே கால்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் வதந்தியில் எந்த உண்மையும் இல்லையென்றும்,
அவரது உடலில் காயங்களோ, மெல்லக் கொல்லும் விஷமோ வழங்கப்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டு அந்த வதந்திகள் உடனடியாக நிராகரிக்கப்படுகின்றன” என்று உறுதியாக பதிவு செய்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.
-வேந்தன்
கெட்டுப்போன அல்வாவை விற்ற ஆவின்!
சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்: ஆறுமுகசாமி ஆணையம் பகீர்!