ஸ்டெர்லைட் போராட்டம்… இப்போதல்ல முப்பது ஆண்டுக் கால தொடர்ச்சி!

அரசியல் சிறப்புக் கட்டுரை

கப்பிகுளம் ஜெ.பிரபாகர் 

தமிழ்நாட்டின் முத்துக்குளித்துறை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை 1993இல் தொடங்கும்போதே மக்களிடம் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முப்பது ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்தாலும் மூன்று முக்கிய கால கட்டங்களை உள்ளடக்கியது.

ஸ்டெர்லைட் ஆலையின் தொடக்கக் காலத்திலும், ஆலை தொடங்கிய சில மாதங்களிலேயே ரமேஷ் பிளவர்ஸ், மின்வாரியம், அகில இந்திய வானொலி நிலையம் ஊழியர்கள் அடுத்தடுத்து நச்சு வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டபோதும் அதாவது 1993 முதல் 1998 வரை முதற்கட்டப் போராட்டமும், ஸ்டெர்லைட் ஆலையின் 750 கோடி வரி ஏய்ப்பு அதன் தொடர்ச்சியாக, காப்பர் என்று சொல்லி தங்கம், பல்லேடியம் கடத்திய போதும், விபத்துகள், நச்சுவாயுக் கசிவின் காரணமாகவும் 2010 முதல் 2013 வரை இரண்டாம்கட்டப் போராட்டமும், ஸ்டெர்லைட் ஆலையினை விரிவாக்கம் செய்ய 2017இல் சிப்காட் நிறுவனம் 342 ஏக்கர் நிலம் கொடுத்தபோது மூன்றாம்கட்டப் போராட்டமும் மிக வீரியமாக நடைபெற்றன.

அதாவது, எப்போதெல்லாம் அமில விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோ, எப்போதெல்லாம் நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டதோ அப்போதெல்லாம் போராட்டங்கள் நடந்தன. திருவைகுண்டம் அணைக்கட்டின் உள் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, தாமிரபரணி எனும் பொருநை ஆற்றுநீரை மஞ்சள் நீர்காயல் நீரேற்று நிலையம் வழியாக தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுப்பதை அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்தனர். புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், அல்லிகுளம், கோரம்பள்ளம் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் தொழிற்சாலைக்கு கொண்டு வந்த போது அப்பகுதி விவசாயிகள் போராடினார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்காக குவார்ட்ஸ் எனப்படும் சீனிக்கல் அல்லது சரளைக் கற்களை சுரங்கம் அமைத்து சுரண்டியபோது குன்றுகளைச் சுற்றியுள்ள கிராமத்தினர் போராடினார்கள். காப்பர் ஸ்லாக், பாஸ்போ ஜிப்சம் ஆகிய கறுப்பு வெள்ளைக் கழிவுகளை வேளாண் நிலத்திலும், உப்பாற்று ஓடையிலும் கொட்டியபோது அப்பகுதி பொதுமக்கள் போராடினார்கள்.

தாமிரத்தாதுகளை தொடக்கக் காலத்தில் கப்பலில் இருந்து இறக்க பாதுகாப்பற்ற முறையினைக் கையாளும்போது மீனவர்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் ஆலையானது நேரடியாகக் கழிவுகளை கடலில் கலக்க திட்டமிட்டபோது அந்தக் குழாய்களை அகற்றி மீனவர்கள் போராட்டத்தில் வெற்றியும் கண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒரே அமைப்பு என்றோ குறிப்பிட்ட சில தலைவர்கள் மட்டுமே என்றோ இருந்தது இல்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு ஆளுமைகள் மக்கள் போராட்டத்தை வழி நடத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கும், அதன் பெயரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடையும். அன்று முதல் இன்று வரை கொள்கை உறுதிப்பாட்டோடு களத்தில் நிற்கின்ற முன்னோடிகளும் உண்டு. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக தொடங்கி தேர்தல் அரசியலில் ஈடுபடும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

1993ஆம் ஆண்டு தொடங்கி முப்பது ஆண்டுக் கால ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என்பது, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான சர்ச்சைகள் போன்றே மிக நீண்ட பக்கங்களைக் கொண்டது.

 தொடக்க காலப் போராட்டம்

மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் அல்போன்ஸா மாம்பழ விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்டு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் அமைக்க முயன்று, தோற்றுப் போய், பின்னர் தமிழகத்தில் காலூன்றியதுதான் லண்டன் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை.

தாமிர உருக்காலையின் பாதிப்புகளையும், மராட்டிய மாநிலத்தில் நடந்த போராட்ட வெற்றிகளையும் அறிந்து கொண்ட தூத்துக்குடி மக்கள் 1994ஆம் ஆண்டிலேயே போராட்ட களத்திற்கு தயாராகி விட்டனர். மீனவர்களும், மாணவர்களும் முதற்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அணி திரண்டார்கள்.

மீனவர் சங்கம் அண்டன் கோமஸ், நாட்டுப்படகு மீனவர் சங்கம் ஜான்சன், தமிழ்மாந்தன், பேராசிரியர் சாகுபர் உசேன், பேராசிரியை பாத்திமா பாபு, இந்திய கம்யூனிஸ்ட் அப்பாத்துரை, மதிமுக செங்குட்டுவன், நக்கீரன், பாமக அருண், ஜனதா கட்சி ஸ்டேன்லி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் சிங், வங்கி ஊழியர் சங்கம் ரமேஷ், காந்தியவாதி கோமதியாபிள்ளை, தர்மராஜ், அந்தோணியப்பா, புஷ்பராயன், அமல்ராஜ், ராஜேஷ், வெனி இளங்குமரன், சற்குணம், முத்துராஜ், அருள்ராஜ், அன்வர் முகமது, கல்லூரி மாணவர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, அருட்பணி லயோலா, சகோதரி வனசெல்வி  உள்ளிட்டோர் தங்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவருமான அண்டன் கோமஸ் ஒருங்கிணைப்பில் ஜனதா தளம் கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸ், பாஜக தலைவர் எச்.ராஜா, டாக்டர்.கிருஷ்ணசாமி, டாக்டர்.ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை வைத்து நடத்தப்பட்ட போராட்டம் தேசிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது.

ஸ்டெர்லைட் ஆலையின் கட்டுமானத்தைத் தடை செய்திடக் கோரி, 1996 ஜனவரியில், தமிழ்மாந்தன், கவுஸ், ஜான்சன், வடிவேல் கோனார், பேச்சிமுத்து நாடார், ஸ்டீபன் விக்டோரியா, வினோத், அன்வர், அருள்ராஜ், அப்பாசு தேவேந்திரன், வழக்குரைஞர் கியூபர்ட் ஆகியோரைக் கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மீளவிட்டான் கிராமத்தில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.

1996 மார்ச் மாதம் தூத்துக்குடி குருஸ்பர்னாந்து சிலை முன்பு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். தொடர்ந்து மதிமுக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.

ஸ்டெர்லைட் ஆலை அமைக்கவே கூடாது என்பது தூத்துக்குடி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தாலும், தாமிரபரணி என்றழைக்கப்படும் பொருநை ஆற்று நீரை ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரடியாக வழங்கக் கூடாது, ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை குழாய்கள் மூலம் மன்னார் வளைகுடா கடலில் கலக்கக் கூடாது என்ற கோரிக்கைகள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 1996 மார்ச் 12 அன்று தூத்துக்குடி நகரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை, பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

அதன் பின்னர் 18.03.1996 அன்று தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடியில் கறுப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. கொடியன்குளம் வன்முறை, தென்மாவட்டக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தூத்துக்குடியில் சந்திக்கத் திட்டமிட்டிருந்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஊருக்குள் வராமல் புறநகரில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொண்டார்.

20.03.1996 அன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பலை மீனவர்கள் ஆழ்கடலில் தடுத்து நிறுத்தினர் 16 மணி நேரப் போராட்டத்தால் கப்பல் விரட்டியடிக்கப்பட்டது.

மீனவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக கடலில் கலக்க இருந்த ஸ்டெர்லைட் கழிவுநீர் குழாய்கள் அகற்றப்பட்டன. ஆனாலும் மக்கள் எதிர்ப்பு குறையவில்லை.

19.10.1996 அன்று எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுக்களின் கோரிக்கையை ஏற்று, துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதி பாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். மீனவர்கள் ஒன்று திரண்டு கப்பலை துறைமுகத்தில் இருந்து துரத்திச் சென்று நடுக்கடலில் விட்டுவிட்டு வந்தனர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து கொண்டே இருந்தன. 09.12.1996 அன்று தூத்துக்குடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், பாமக பொருளாளர் பசுபதி பாண்டியன், ஜனதா தளம் மாநிலத் தலைவர் அண்டன்கோமஸ், சிபிஐ மாவட்ட செயலாளர் அப்பாதுரை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் தமிழ்மாந்தன், மரியதாஸ், ஜெயராஜ், மீனவர் அமைப்பின் அந்தோணியப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்ட மிகப்பெரிய உண்ணாவிரதம் நடந்தது.

24.01.1997 அன்று மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதே நாளில் தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் சென்னை மெரினாவில் அனைத்துக் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடந்தது.

நச்சுவாயுக் கசிவு

இதற்கிடையில், 05.07.1997 அன்று மதியம் 1 மணியளவில் ஸ்டெர்லைட் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 165 பெண் தொழிலாளர்கள் விஷவாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. வாந்தி, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் என பாதிக்கப்பட்ட 96 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் சுற்றுவட்டார பொதுமக்களும் பங்கேற்றனர். அடுத்த மாதமே தாமிர உருக்காலை நச்சுவாயுக்கசிவால் அருகிலுள்ள மின்வாரிய ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அடுத்த சில மாதங்களில் அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் மூன்று பெண்கள் உள்பட 11 பேர் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகிலுள்ள அலுவலக வளாகத்திலேயே மயங்கி விழுந்தனர்.

இரண்டாம்கட்டப் போராட்டம்

மக்கள் போராட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நீதிமன்றத்தில் வழக்கு, நீரி அமைப்பின் விசாரணை, தமிழ்நாடு அரசின் வல்லுநர் குழு ஆய்வு என்று சட்டரீதியான தலையீடுகளில் மக்கள் கவனம் செலுத்தினர்.

இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்டெர்லைட் நிறுவனம் இந்திய அரசை ஏமாற்றி 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து விட்டதாக ஸ்டெர்லைட் நிறுவன துணைத் தலைவர் வரதராஜன் கைது செய்யப்பட்டார். 24.07.2010 அன்று வரதராஜனை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். வரதராஜன் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இரண்டாம் கட்ட மக்கள் போராட்டம் தொடங்கியது. இந்திய அரசை ஏமாற்றிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 26.07.2010 அன்று தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதிமுக ஜோயல், நாம் தமிழர் பிரபு, இந்திய கம்யூனிஸ்ட் மோகன்ராஜ், பகுஜன் சமாஜ் ஜீவன்குமார் உள்ளிட்டோர் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை இழுத்துப் பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அந்தக் கோபம் தீரும் முன்னே, 21.08.2010 அன்று சுங்கத்துறையின் சோதனையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விலை உயர்ந்த உலோகப் பொருட்கள் கடத்தப்பட்டதாக பதினெட்டுக் கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட்டினம், பல்லேடியம் கலந்த உலோகங்கள் வாகனத்துடன் பிடிபட்டது. அதாவது காப்பர் என்ற பெயரில் தங்கம், பிளாட்டினம், பல்லேடியம் கலந்த ஆனோடுகளை சுங்கத் துறையினர் வளைத்துப் பிடித்தனர்.

இந்திய நாட்டின் பொருளாதார குற்றவாளியாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய வலியுறுத்தி மறியல் செய்த தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை நயினார் குலசேகரன், நாம் தமிழர் தா.மி.பிரபு, சிபிஐ மோகன்ராஜ், மாதர் சங்கம் மடோனா, மீனவத் தொழிலாளர் சங்கம் ஜார்ஜ் கோமஸ், மக்கள் உரிமைக்குழு அதிசயக்குமார், வீராங்கனை பாத்திமா பாபு, தமிழ்நாட்டு மக்கள் இயக்கம் தமிழ்செல்வன், சிபிஐ கட்சியின் பெருமாள், மாடசாமி ஆகிய பத்துப் பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே நாளில் நாடாளுமன்ற மக்களவையிலும் ஸ்டெர்லைட் பிரச்சனை எழுப்பபட்டது. திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி எம்பி ஜெயதுரை மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

 உயர் நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட்

ஏற்கனவே இரண்டு முறை ஆலையை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் இடைக்கால உத்தரவிடப்பட்ட நிலையில் மூன்றாவதாக ஒரு உத்தரவு வந்தது.

28.09.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால் வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் பி.தமிழ்மாந்தன் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 07.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர். அந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கம் போல உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் தடை பெற்றது ஸ்டெர்லைட். செய்த தவறுக்கு நூறு கோடி அபராதம் கட்டிவிட்டு ஆலை தடையின்றி இயங்கியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி நகர வளர்ச்சிக்குழுவின் சார்பில் வணிகர் சங்கம் நடராஜன், பேரா.பாத்திமா பாபு, பணி.சுந்தரிமைந்தன், தமிழ்தங்கவாப்பா, பிரம்மநாயகம், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில், 11.10.2010 அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தடை செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு தொடங்கி பழைய நகராட்சி அலுவலகம் வரை மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியைச் சூழ்ந்த நச்சு வாயு

இந்த சூழ்நிலையில், 23.03.2013 அன்று அதிகாலையில் தூத்துக்குடி நகர் முழுவதும் பரவிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். சில இடங்களில் செடி, கொடிகள் கருகின.

தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், புதிய தமிழகம் கட்சி டாக்டர்.கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி ஜவஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செளந்திரராஜன் ஆகியோர் நச்சு வாயுக் கசிவு பிரச்சினையை எழுப்பினர். இந்த நச்சு வாயுக் கசிவு சம்பவத்திற்குப் பின்னர் தூத்துக்குடியின் வணிகர்கள் பெருமளவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை, ஆர்ப்பாட்டம், போராட்டம், கடை அடைப்பு, கறுப்பு நாள் அனுசரிப்பு என்று போராட்டங்கள் தொடர்ந்தன.

2015 டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளம் மடத்தூர், மறவன்மடம், அந்தோணியார்புரம், சோரிஸ்புரம் வழியாக தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. பக்கிள் ஓடை வழியாக வந்த வெள்ளத்தில் கழிவுகளும் கலந்து வர வீடுகளில் தேங்கி நின்ற மழைநீரின் அடையாளம் மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு என பல வண்ணங்களில் திட்டுத்திட்டாக அடையாளம் இட்டுச் சென்றது. உப்பாற்று ஓடையில் காப்பர் ஸ்லாக் கழிவுகள் கொட்டப்பட்டதும், சீனாவானா கண்மாய் நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்ததும் தூத்துக்குடி வெள்ளத்திற்கு காரணமென்று மக்கள் ஸ்டெர்லைட் மீது குற்றம் சுமத்தினர்.

இந்த சூழ்நிலையில்தான், அரசின் ஆதரவு, அரசியல் கட்சிகளின் ஆதரவு, உள்ளூர் மக்களுக்கு தான் செய்த சில பல நலத்திட்டங்களை மனதில் வைத்துக்கொண்டு, தற்போது செயல்படுவதை போல, இன்னொரு பிரமாண்ட தாமிர உருக்காலையை அதே தூத்துக்குடியில் நிறுவ முயற்சியை மேற்கொண்டது ஸ்டெர்லைட் ஆலை.

மூன்றாம்கட்டப் போராட்டம்

முதலில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே இழப்பீட்டுப் பணம் கொடுக்காத நிலையில் வீரபாண்டியபுரம், மீளவிட்டான் அருகிலுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நிலம் சீர் செய்யப்பட்டது. தங்கள் குடியிருப்புக்கு அருகிலேயே ஸ்டெர்லைட் ஆலை அமைக்கக் கூடாதென்று மக்கள் 2017 ஜூன் முதல் அரசுக்கு மனுக் கொடுக்கத் தொடங்கினர். அவ்வூர் மக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மிகப்பெரிய மனிதச் சங்கிலியை நடத்தினார்கள். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே 12.02.2018 அன்று நடைபெற்ற அ.குமரெட்டியாபுரம் மக்களின் ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கப் போராட்டமாக மாறியது. போராட்டம் மறுநாளும் தொடர வலுக்கட்டாயமாக மக்களை அப்புறப்படுத்தினர். பேராசிரியை பாத்திமா பாபு, நாம் தமிழர் கட்சி வேல்ராஜ், சுஜித், மகேஷ், முருகன், வழக்கறிஞர் விமல்ராஜ், துரைப்பாண்டி, ஆல்பர்ட் சாமுவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சோர்ந்து போகாத குமரெட்டியார்புரம் மக்கள் இரவும், பகலும் தொடரும் காத்திருப்பு போராட்டத்தை தங்கள் கிராமத்திலேயே முன்னெடுத்துச் சென்றனர். இந்தப் போராட்டத்தைக் கேள்விப்பட்ட பல்வேறு சமூக அமைப்புகளும், அக்கம்பக்கத்து கிராமத்தினரும் நேரிடையாக வந்து ஆதரவு தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. தூத்துக்குடி வணிகர்கள் ஒன்றுகூடி முழு அடைப்பு நடத்த முடிவெடுத்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி எம்பி தியாகராஜ் ஜெயசிங் நட்டர்ஜி, நாடாளுமன்ற மக்களவையில் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவன், திருவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ.சண்முகநாதன் உள்ளிட்டோர் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தூத்துக்குடி நகர வணிகர்கள் கடை அடைப்புப் போராட்டங்களை நடத்தினார்கள். மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் வகுப்புகளைப் புறக்கணித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினார்கள்.

போராட்டங்கள் நடத்த காவல்துறையும், அரசும் தடை போட்டதால் போராட்டக்குழுவின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை நாடினர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடுத்த வழக்கின் அடிப்படையில் 2018 மார்ச் 24ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்தது. போராட்டத்துக்கு ஆதரவாக கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிக்க வணிகர் சங்கம் முன்வந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டுப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், திமுக இளைஞரணி ஜோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரிய கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அனுமதியோடு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் எட்டயபுரம், புதூர், விளாத்திகுளம், குளத்தூர், காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, உடன்குடி, திருவைகுண்டம், பெரியதாழை என மாவட்டத்தின் புறநகர் பகுதி முழுக்க நான்கு நாட்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தொடர் பரப்புரையும், தூத்துக்குடியில் வைகோ தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டமும் நடந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டங்களை நடத்தினர்.

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தூத்துக்குடியில் நடத்திய மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மனுநீதி நாளின் போதும் ஆலைக்கு எதிராக மனு கொடுத்து வந்தனர்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம், சுங்கத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்துறை, நீதிமன்றம் என்று ஒவ்வொரு கதவாகத் தட்டத்தொடங்கினர் பொதுமக்கள்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை 09.04.2018 அன்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த பொதுமக்கள் தூத்துக்குடி – பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் இருவரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். அன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான விண்ணப்பத்தை 09.04.2018 அன்றைய அரசின் குறிப்பாணை மூலம் நிராகரித்துள்ளதாக அறிவித்தார்.

இன்னொருபுறம் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் தாமிரத்தாது இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தாமிரத் தாது மணல் லாரிகளை மறித்ததாக வழக்குரைஞர் அதிசயக்குமார், ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, பால் பிரபாகரன், பிரபு உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிந்தது.

திருவைகுண்டம் அணைக்கட்டில் ஆய்வு நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தாமிரபரணி நதியில் இருந்து, நிறுத்தப்பட்டதாக அறிவித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு ராட்சத மின் மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சுவதை அம்பலப்படுத்தினார்.

தூத்துக்குடி இளைஞர்கள் ஒன்று கூடி இருசக்கர வாகனப் பேரணி நடத்த கருப்பு உடை அணிந்து, விவிடி சிக்னல் அருகே நூற்றுக்கணக்கில் திரண்டு, பின்னர் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கலைந்து சென்றனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்துக் கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வழக்குரைஞர்கள் அரிராகவன், ராமச்சந்திரன், ராஜேஷ், வீரபாண்டியபுரம் மகேஷ், 18 கிராமத் தலைவர்கள் உள்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் அதன் அமைப்பாளர் பி.மி.தமிழ்மாந்தன் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க, திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதற்கிடையில் குமரெட்டியாபுரம் மக்கள் தொடங்கிய போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வந்தனர். திருமுருகன் காந்தி, கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், தமிழ் மாநிலக் காங்கிரஸ் ஜி.கே.வாசன், திமுக இளைஞரணி ஜோயல் உள்ளிட்டோர் குமரெட்டியாபுரம் போராட்டத்தில் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். குமரெட்டியாபுரம் போராட்டம் ஒவ்வொரு கிராமம், நகரம் என்று பரவி ஐம்பது மேற்பட்ட இடங்களில் தினசரி போராட்டமாக மாறியது. பண்டாரம்பட்டி போராட்டத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். நகர்ப்புறங்களில் நடந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி ஜவஹிருல்லா கலந்து கொண்டனர்.

மக்கள் போராட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்க, காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் தூத்துக்குடி மக்கள் அதிகம் இருப்பதாக பத்திரிகை செய்திகள் வந்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட தகவலில் தூத்துக்குடியில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக பத்திரிகை செய்தி வெளியாகியது. தூத்துக்குடியில் சிறுவன் நதிபன், வணிகர் சங்கம் எஸ்.எம்.எஸ்.தங்கதுரை, உள்ளிட்டோர் புற்றுநோய் பாதிப்பில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

குமரெட்டியாபுரம் மக்களின் நூறாம் நாள் போராட்டம், அதாவது, 22.05.2018 அன்று காலை புற்றுநோய் பாதிப்பில் உயிரிழந்த தங்கதுரை உடலை அடக்கம் செய்துவிட்டு, அதே கறுப்பு உடையில் இளைஞர்கள் ஸ்டெர்லைட்டை மூடு என்று முழக்கமிட்டுக் கொண்டே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர்.

இந்த ஊர்வலத்தில்தான் துப்பாக்கிச்சூடு, தடியடி, காவல் வன்முறையால் இளம்பெண் ஸ்னோலின் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். பின்னர்  பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் பாதிப்பால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொதித்துப் போனார்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும், காயமடைந்தோரை தேற்றவும் அரசியல் தலைவர்கள் தூத்துக்குடிக்கு வந்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், பாலகிருஷ்ணன், நல்லக்கண்ணு, முத்தரசன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி டாக்டர்.கிருஷ்ணசாமி, மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டிடிவி தினகரன், நாம் தமிழர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், லட்சிய திமுக டி.ராஜேந்தர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மனிதநேய ஜனநாயக கட்சி தமீமுன் அன்சாரி, எம்ஜிஆர் ஜெ திமுக மாதவன், திராவிடர் கழகம் கி.வீரமணி, திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், மயில்சாமி, திரைப்பட இயக்குநர் ஹரி, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மேதா பட்கர், அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஹன்னன் முல்லா உள்ளிட்டோர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் தூத்துக்குடியில் வலியுறுத்திப் பேசினர். ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சசிதரூர், சத்ருகன்சின்ஹா தேசியத் தலைவர்களும்  கண்டன அறிக்கை வெளியிட்டனர். வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கம் திருமுருகன்காந்தி, சின்னத்திரை நடிகை நிலானி உள்ளிட்டோர் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வணிகர் சங்கங்களும் தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். சட்டமன்றக் கூட்டத்திலும் ஸ்டெர்லைட் பிரச்சனை எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஸ்டெர்லைட் பிரச்சனையை எழுப்பினார் திமுக எம்பி கனிமொழி.

தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் தொடர்பான எந்தக் கூட்டங்களும் நடத்தக் கூடாது என தடை தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு 24.05.2018 அன்று ஆலையின் மின் இணைப்பைத் துண்டித்தது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார். காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் மாற்றப்பட்டு முரளி ரம்பா பொறுப்பேற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது, பின்னர் சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், ஊடகவியலாளர் கவின்மலர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் காரணமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்ததால், தமிழக அரசு 28.05.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. அன்றைய தினம் மாலையே தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலையை மூடி சீல் வைத்தார்.

தொகுப்பு : கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

(உதவி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, வினவு, அகில இந்திய மீனவர் சங்கம், மதிமுக இணையத்தள நண்பர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள்)

கோடை: தமிழ்நாட்டில் மின்தேவை 18,252 மெகாவாட்டாக உயர்வு!

கிச்சன் கீர்த்தனா: இனிப்பு உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதா?

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *