மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 100 நாள் போராட்டம் நடந்தது. 100-ம் நாள் போராட்டத்தின் போது பெரும் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். அதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் துவங்குவதற்கு, சட்ட ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது வேதாந்தா. இந்நிலையில், திடீரென ஆலை விற்பனைக்கு உள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்கள் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கடந்த மாதம் வேதாந்தா நிறுவனம் விளம்பரங்கள் வாயிலாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
–கலை.ரா
எங்கெங்கும் வெள்ளம்: அணைகள், ஆறுகள், அருவிகளின் தற்போதைய நிலவரம் என்ன?