இமாச்சல் பிரதேச மாநில முதல்வராக இன்று (டிசம்பர் 11) பதவியேற்றுள்ளார் சுக்விந்தர் சிங் சுகு.
இமாச்சல் மற்றும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
குஜராத்தை பாஜக கைப்பற்றியிருந்தாலும் இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ஆனால் இமாச்சலில் முதலமைச்சர் யார் என்பதைக் காங்கிரஸ் அறிவிக்காமலேயே இருந்தது. இந்நிலையில் தான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது.
அப்போது முதலமைச்சர் யார் என்பதைக் கட்சித் தலைமை முடிவெடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த முடிவிற்குப் பிறகு தலைநகர் சிம்லாவில் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் இமாச்சலப்பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவி ஏற்பு விழா இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இமாச்சல் பிரதேசத்தின் 7 -வது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றுள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இமாச்சல் பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு?
இமாச்சல் பிரதேசத்தின் சாலை போக்குவரத்துக் கழக டிரைவரின் மகனாகப் பிறந்த சுக்விந்தர் சிங் சுகு தன்னுடைய ஆரம்பக் கால வாழ்க்கையில் சிம்லாவில் பால் வியாபாரியாக இருந்தார்.
தன்னுடைய 17 வயதில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர் கல்லூரி பருவத்தில் இந்தியத் தேசிய காங்கிரஸ் மாணவர் சங்கத்தில் சேர்ந்துள்ளார்.
பின்னர் இவர் இந்த மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் எம்.ஏ மற்றும் எல்.எல்.பி முடித்து வழக்கறிஞராக இருந்த இவர் இரண்டு முறை சிம்லா மாநகராட்சியின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர் 2003 ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடான் தொகுதியில் முதல்முறையாக வெற்றி பெற்றார். பின்னர் 2007 ஆம் ஆண்டு தேர்தலில் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஆனால் 2012 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து மீண்டும் 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
4 முறை எம்.எல்.ஏவாக இருந்த சுக்விந்தர் சிங் சுகு ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்துள்ளார்.

பின்னர் இமாச்சல் காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங் மறைவிற்குப் பிறகு 2013 முதல் 2019 வரை 6 ஆண்டுகள் இமாச்சல் பிரதேசத்தின் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.
இமாச்சல் பிரதேச முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகு ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாவது முதலமைச்சர் ஆவார். இவருக்கு முன்பு பாஜகவின் பிரேம் குமார் துமல் ஹமிர்பூர் மாவட்டத்தில் இருந்து முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோனிஷா
“போக்சோ சட்டங்களின் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – சந்திரசூட்