தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் மின்தேவை 18,252 மெகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். தினசரி மின்தேவை சராசரியாக 15,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இந்த அளவு, கோடைகாலத்தில் 16,000 மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரித்தும், குளிர்காலத்தில் 12,000 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும் காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி மின் தேவை 16,000 மெகாவாட் என்ற அளவைத்தாண்டி செல்கிறது. மேலும், விவசாயப் பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால் அந்தப் பிரிவில் மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் அதிகரித்துள்ளது.
இத்தகைய காரணங்களால் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தினசரி மின்தேவை முதன்முறையாக 17,584 மெகாவாட்டாக அதிகரித்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி 17,563 மெகாவாட் என்ற சாதனை அளவாக இருந்தது. விவசாயத்துக்கான 18 மணி நேர மின்விநியோகம் மற்றும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் முன் எப்போதும் இல்லாத அளவாக மார்ச் 15 ஆம் தேதி தினசரி மின்தேவை 17,647 மெகாவாட்டாக அதிகரித்தது. ஆனால், மார்ச் 17 ஆம் தேதி தினசரி மின்நுகர்வு 18,053 மெகாவாட் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி தனது முந்தைய நாள் சாதனையை முறியடித்தது.
இந்த நிலையில் தினசரி மின் நுகர்வு தற்போது 18,252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,252 மெகாவாட் அளவை எட்டியுள்ளது. இந்தத் தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு மார்ச் 16 ஆம் தேதி 18,053 மெகாவாட்டாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
கிச்சன் கீர்த்தனா: இனிப்பு உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதா?
‘ஹனு-மேன்’ படத்தின் ‘ஹனுமான் சாலிசா’ பாடல் வெளியீடு