தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி.கூறியுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (ஏப்ரல் 6) இந்திய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் ‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக வரும் நிதிகளை முறைப்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்களை வகுத்து இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் நம் நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் கொண்டு வரப்படும் நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசால் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள், சுற்றுச்சூழல், காலநிலை போன்ற பல்வேறு காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் உருவாகின்றன.
கேரள மாநிலம் விளிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மக்களைத் தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருந்தத்தக்கது. ஆனால் நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களில் 250 கோடி ரூபாய் வரை நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். திருக்குறள், தமிழ்நாடு ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா
ராஜா இசையில்…மம்மி சொல்லும் வார்த்தை!
“திருச்சியில் டைடல் பார்க்”: தங்கம் தென்னரசு அறிவிப்பு!