மாநகராட்சி பணிகள், சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) விருதுகள் வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) தேசியகொடி ஏற்றினார். இதனை தொடர்ந்து “மகளிர் இலவச பேருந்து பயணம் விடியல் பயணம் என்று அழைக்கப்படும். ஓலா, ஊபர் ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும். சுதந்திர போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் உயர்த்தப்படும், சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஆமைக்கப்படும், காலை சிற்றுண்டி உணவு திட்டம் அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும்” என்ற புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
அதன்படி, தகைசால் தமிழர் விருது திராவிடர் கழக தலைவர் வீரமணி, ஏபிஜே அப்துல் கலாம் விருது டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி, துணிவு மற்றும் சாகசத்திற்கான கல்பனா சாவ்லா விருது செங்கல்பட்டை சேர்ந்த முத்தமிழ் செல்வி, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி டீன் தேரனி ராஜன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஐபிஎஸ், மருத்துவர் தா. ஜெயக்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு திருச்சி , இரண்டாம் பரிசு தாம்பரம், சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு ராமேஸ்வரம், இரண்டாம் பரிசு திருத்துறைப்பூண்டி, மூன்றாம் பரிசு மன்னார்குடி, சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு விக்கிரவாண்டி, இரண்டாம் பரிசு புதுக்கோட்டை ஆலங்குடி, மூன்றாம் பரிசு சேலம் மாவட்டம் வீரக்கல் புதூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. மேலும், 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது.
செல்வம்
கோலாகலமாக நடைபெற்ற ‘தமிழ்க்குடிமகன்’ இசை வெளியீட்டு விழா!
“குடும்ப அரசியல் நாட்டை சீரழித்துவிட்டது” – பிரதமர் மோடி