மழை வெள்ளம்: ஓஎம்ஆரில் மக்கள் சாலை மறியல்!
ஓஎம்ஆர் சாலையில் செம்மஞ்சேரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரியில் உள்ள எட்டடுக்கு குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் மிக்ஜாம் புயல் காரணமாக தங்கள் பகுதியில் தேங்கிய மழை நீர் மூன்று நாட்களாகியும் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்து ஓஎம்ஆரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ”மூன்று நாட்களாகியும் மழை நீர் அப்படியே தேங்கிக் கிடக்கிறது. மழை நீரோடு கழிவுநீரும் சேர்ந்து இடுப்பளவு தண்ணீர் உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்படி இருந்தும் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்துவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் இரண்டு நாட்களாக எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களை மீட்கவோ அல்லது உதவி செய்யவோ அரசு முன்வரவில்லை.
நேற்று காலையிலேயே மழை நின்ற பின்பும் கூட மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியினரும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களை வந்து பார்க்கவோ தங்கள் தேவைகளை கேட்டு பூர்த்தி செய்யவோ முன்வரவில்லை. இரண்டு நாட்களாக மழை நீரில் தவித்து கொண்டிருக்கிறோம். முதல்வரோ அல்லது அந்த தொகுதியின் எம்எல்ஏவும் வந்து தங்களை பார்த்து பேசி தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் வரை மறியலில் ஈடுபடுவோம்” எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு சிட்டி கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர் உள்ளிட்டோர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் மக்கள் எம்எல்ஏ வந்து தங்களை சந்தித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அங்க வந்து மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனாலும் தங்கள் பகுதியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி தங்களுக்கு அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் பல்வேறு சென்னையின் பல்வேறு இடங்களில் மக்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்முகப்பிரியா
“புத்தகங்களை பாதுகாக்க போராடுகிறோம்”: எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் கவலை!
“மழையால் சேதமடைந்த புத்தகங்கள்” : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!