‘மழித்தலும் நீட்டலும்’ – ஸ்ரீராம் சர்மா

public

ஸ்ரீராம் சர்மா

திருவள்ளுவர் என்றால், உலகளாவிய தமிழர்களின் மனக்கண்ணில் தோன்றி நிற்பது ஒரே உருவம்தான்.

‘ஓவியப் பெருந்தகை’ கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களால் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டடையப்பட்ட அந்த திருவுருவம்தான் இன்று உலகெங்கிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

ஆண்டு 1959. அன்றைய, தமிழ் – இலக்கிய – அரசியல் அறிஞர் பெருமக்கள் எனப் பல்லோரின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது.

மத்திய – மாநில அரசாங்கங்களால் ‘அஃபீஷியல் திருவள்ளுவர் போர்ட்ரெய்ட்’ என அங்கீகரிக்கப்பட்டது.

அன்றைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏவான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் முன்மொழிந்து வலியுறுத்தப்பட, வள்ளுவப் பேராசானின் அந்தத் திருவுருவம் 1964ஆம் ஆண்டு சென்னை சட்டசபையில் அன்றைய துணை ஜனாதிபதி ஜாகீர் உசைன் அவர்களால் நிறுவப்பட்டது.

உச்சகட்டமாக, 1967இல் அன்றைய திமுக ஆட்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களால் வெளியிடப்பட்ட G.O.M.S. 1193 என்னும் வரலாற்று சிறப்பு மிக்க அரசாணையினால் தமிழகமெங்கும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் அனைத்துப் பேருந்துகளிலும் பொருத்தப்பட்டு ‘இதோ நம் திருவள்ளுவர்’ என நிலை நிறுத்தப்பட்டது.

சாதி, மத, இன, மொழி, பிரதேசம் கடந்த அந்தத் திருவள்ளுவரின் திருவுருவம் இன்று உலகளாவிய அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் இலச்சினைகளிலும் இடம்பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆம், உலகமெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சிலும் ஆழப் பதிந்ததொரு உருவமாகவே அந்தத் திருவள்ளுவர் திருவுருவம் அமைந்து விட்டது.

தலைப்புக்கு வருவோம்!

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருவள்ளுவர் திருவுருவம் என்றாலும்கூட, அந்தத் திருவள்ளுவர் திருவுருவத்தைக் குறித்ததொரு நெருடலான கேள்வி ஒன்றும் உண்டு.

தயங்கியும், தயங்காமலும் உலவும் விமர்சனக் கேள்வியாக அது பலர் மனதில் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது.

அந்தக் கேள்விதான் என்ன?

திருவள்ளுவர் திருவுருவம் கம்பீரமாக இருக்கிறது என்பது சரிதான். ஆனால்,

**மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்ததை ஒழித்து விடின்**

என்று ஊருக்கும், உலகுக்கும் ஓங்கிச்சொன்ன அந்த திருவள்ளுவர்…

“நீண்ட சடா முடியும், வளர்ந்து நீவப்பட்ட தாடியும் கொண்டு காட்சி தருகிறாரே இது சரிதானா?” என்பதே அந்தக் கேள்வி.

அதாவது, எந்த ஒரு தோற்றம் திருவள்ளுவருக்குக் கம்பீரம் தருவதாகக் கொண்டாடுகிறோமோ அதைப் பற்றியே கேள்வி!

அந்தக் கேள்விக்கான தக்கதொரு பதில் இன்னமும், எவரிடமிருந்தும் கிடைக்காமலேயே இருப்பதனால்தான், எளிமையான இந்தக் கேள்வி பலரிடமும் இன்றும் இருக்கிறது.

அது பள்ளியோ, கல்லூரியோ அல்லது பல்கலைக்கழகமோ… வேலு நாச்சியார் குறித்து நான் பேசப் போகும் இடங்களிலெல்லாம் என்னை சுற்றிச்சுற்றி வந்து இந்தக் கேள்வியை ஆர்வத்தோடு கேட்கிறார்கள்.

திருவள்ளுவர் திருவுருவத்தைக் கண்டடைந்தவர் எனது தந்தையார் என்பதனால் இந்தக் கேள்வி என்னை மேலும் வலிந்து துரத்திக் கொண்டேயிருக்கிறது. பேராசிரியர்கள்கூட என்னிடம் இப்படிக் கேட்பதுண்டு.

அப்போதெல்லாம் எனது தந்தையார் வெளியிட்ட ‘திருவள்ளுவர் திருவுருவப் பட விளக்கம்’ என்ற சிறு நூலில் அவர் கண்டடைந்த குறள் விளக்கத்தைக் குறித்து அவர்களுக்கு சொல்வேன்.

“அடடா… அருமை, அருமை…” என்று வியந்து போவார்கள்.

ஆனாலும், எத்துனை பேரைத்தான் என்னால் சந்தித்து விளக்கிவிட முடியும்? இதோ, மின்னம்பலத்தின் செழித்த வாசகர்கள் மூலமாக அந்த அரும்பொருளை அனைவருக்கும் சொல்லிவிடுகிறேன். கேளுங்கள்…

அறத்துப்பாலில் – ‘கூடாவொழுக்கம்’ என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறளாகும் இது.

**மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்ததை ஒழித்து விடின்**

இந்தக் குறளுக்கு இதுகாறும் பற்பல அறிஞர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். முதலில், அந்த விளக்கங்களையெல்லாம் வரிசையாகப் பார்ப்போம்.

பிறகு, 1330 குறட்பாக்களையும் முற்றும் கற்றோதி உள்வாங்கி ஆய்ந்து கண்டடைந்த ‘ஓவியப் பெருந்தகை’ அவர்களது சீரிய விளக்கத்தையும் காண்போம்.

முதலில், மணக்குடவர் உரை:

தவத்தினருக்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின். இது வேடத்தாற் பயனில்லை; நல்லொழுக்கமே வேண்டுமென்றது.

அடுத்தது, பரிமேலழகர் உரை:

மழித்தலும் நீட்டலும் வேண்டா – தவம் செய்வோருக்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் – உயர்ந்தோர் தவத்துக்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினர். இதனால், கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது)

இப்போது, மு. வரதராசனார் உரை:

உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால் மொட்டை அடித்தலும், சடை வளர்த்தலுமாகிய புறத் தோற்றங்கள் வேண்டா.

தொடர்வது… கலைஞர் கருணாநிதி உரை:

உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக்கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.

மேலும், திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களது உரை:

தவம் செய்பவர்களுக்குத் தலை மயிரை மழித்தலும் அல்லது சடையாக்கலும் ஆகிய வேடம், தவம் செய்வதற்கு என்று தேவையில்லை. தவத்துக்கு ஆகாதது என்ற தீமையான ஒழுக்கத்தை நீக்கிவிட்டாலே போதுமானதாகும்.

முடிவாக… சாலமன் பாப்பையா:

உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியை சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.

போதாமைக்கு… ஆங்கிலத்திலும் கூட

What’s the worth of shaven head or tresses long?

If you shun what the entire world condemns as wrong?

என்று முயன்றிருக்கிறார்கள்.

மேற்கண்ட மொத்த விளக்கங்களும் முழுமையான விளக்கங்களா என்றால் இல்லவே இல்லை. அவை எல்லாம் கோடிட்டுக் காட்டப்பட்டவைகளாகவே அமைந்திருக்கின்றன.

எனில்,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்ததை ஒழித்து விடின்.

என்று ஊருக்கும், உலகுக்கும் ஓங்கிச் சொன்ன அந்த திருவள்ளுவர், நீண்ட சடா முடியும் வளர்ந்து நீவப்பட்ட தாடியும் கொண்டு காட்சி தருகிறாரே இது சரிதானா என்னும் அந்தக் கேள்விக்குண்டான ஆகச் சிறந்த பதில்தான் என்ன?

தனது பல்லாண்டுக் கால ஆய்வின் முடிவாக வரைந்து முடித்த அந்த ஓவியப் பெருந்தகை பிழையானதொரு உருவத்தையா உலகுக்குத் தந்து விட்டார்?

அப்படிப் பிழைபட்டதொரு திருவுருவத்தையா பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட அனைவரும் ஏற்றிக்கொண்டாடியிருப்பர்?

திருவள்ளுவர் திருவுருவத்தை வரைந்து வெளியிட்டபோது, ‘வெள்ளை அறிக்கை’ போல ‘திருவள்ளுவர் திருவுருவப் பட விளக்கம்’ என்னும் ஒரு சிறு நூலையும் வெளியிட்டாரே கே.ஆர்.வேணுகோபால் சர்மா…

அதில், இந்த மழித்தலும் நீட்டலுமான தோற்ற விளக்கத்தினைப் பற்றி ஏதும் சொல்லாமலா இருந்திருப்பார்? தக்கதொரு விளக்கத்தினை அவர் தாராதிருந்தால் அன்றைய தமிழ்ப் பேரறிஞர்கள் அதை ஏற்று ஆமோதித்திருப்பார்களா?

‘உலகப் பொது மறை’ எனப்படும் திருக்குறளை சமைத்த அறிவுப் பேராசான் திருவள்ளுவனாருக்கு, ‘உலகப் பொது உருவம்’ ஒன்றை சமைத்துத் தந்த அந்த ‘ஓவியப் பெருந்தகை’ அப்படி என்னதான் அவரது ‘வெள்ளை அறிக்கை’யில் சொல்லிச் சென்றார்?

காண்போம்!

இந்தக் கேள்வியினை முதன் முதலில் ஓவியப் பெருந்தகையிடம் கேட்டவர் பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள். அப்படி அவர் கேட்ட இடம் மாயவரம் மதீனா லாட்ஜ்.

ஆம், மாயவரம் மதீனா லாட்ஜில் தங்கித்தான் திருவள்ளுவருக்கு இறுதி வடிவம் கொடுத்தார் ஓவியப் பெருந்தகை.

பாவேந்தர் அவர்கள், ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களுக்கு நெருங்கிய நண்பர் என்பதனால் அவ்வப்போது அவரைக் காண வருவது வழக்கம்.

அப்படி ஒருமுறை வரும்போது திருவள்ளுவர் திருவுருவத்தை பாவேந்தர் பாரதிதாசனார் கண்டார்.

“அட, நம்ம திருவள்ளுவன்…” என்று எடுத்த மாத்திரத்திலேயே சொன்ன பாரதிதாசனார் கூடவே,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்ததை ஒழித்து விடின்.

என்னும் குறளையும் சுட்டிக்காட்டிக் கேட்டிருக்கிறார்.

அந்தக் குறளுக்குண்டான அரும்பொருளையும், அலங்காரமான ஜடா முடியும் நீவிச் செழித்த தாடியுமாக தான் வரைந்த விதம் குறித்தும், ஓவியப் பெருந்தகை அவர்கள் பாங்கோடு விளக்கிச் சொல்லச் சொல்ல திருவள்ளுவரின் அன்றைய சமூகச் சாடலை எண்ணி எண்ணி மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார் பாவேந்தர்.

வேணுகோபாலரை இறுகக் கட்டிக்கொண்டவர்…

“அற்புதம் ஐயா, குறளுக்குப் பொருளெழுதிய எவரும் இவ்வாறு முழுமையானதொரு பொருளை இதுகாறும் சொல்லவே இல்லை. இதை ஒரு குறிப்பேடாகத் தாங்கள் வெளியிட்டாக வேண்டும்… அது நமது தமிழ் மண்ணுக்கு ஒரு வழிகாட்டியாகக் கூட அமையும்…” என்று பாவேந்தர் வற்புறுத்திச் சொல்ல, அவ்வாறே வெளியிடப்பட்டதுதான் “திருவள்ளுவர் திருவுருவப் பட விளக்கம்” என்னும் அந்த சிறு நூல்.

அந்தச் சிறு நூலை சென்னை பல்கலைக்கழகத்தின் ‘திருக்குறள் ஆராய்ச்சித் துறை’ கடந்த 2013ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறது என்பது மேலும் சிறப்பு.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்ததை ஒழித்து விடின்

என்னும் குறளுக்கான விளக்கத்தை, ‘ஓவியப் பெருந்தகை’ கே.ஆர்.வேணுகோபால் சர்மா அந்த சிறு நூலில் பதிந்து வைத்திருக்கின்றார்.

(தொடரும்…)

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *