Sகே.பி: பெண்களை ‘ஹீரோ’ஆக்கியவர்!

public

முகேஷ் சுப்ரமணியம்

*தமிழ் சினிமாவின் பயணத்தை வடிவமைத்தவர்களுள் முக்கியமான ஆளுமையாக கருதப்படும் இயக்குநர் கே. பாலசந்தர் பிறந்த தினம் இன்று.*

ஒரு இயக்குநரின் பெயரைப் பார்த்து படத்திற்கு செல்லும் பழக்கத்தை தோற்று வித்தவர் கே. பாலசந்தர். நடுத்தர வர்க்க மனோபாவத்தை தனது திரைக்கதைகளின் முரணாகக் கொண்டு வந்தவர்; நடிகனையும் வில்லனையும் கடந்து சினிமா இருக்கிறது என்பதை தன் படங்களின் வாயிலாக நிரூபித்தவர்; மூத்த இயக்குநரான ஸ்ரீதரை தனது முன்னோடியாகக் கொண்டவர் கே. பாலசந்தர். அதே சமயம் தனக்குப் பின் வந்த இயக்குநர்களான பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்களை ஆதர்சம் என மனம் விட்டுப் பாராட்டியவர், ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர், கமல்ஹாசனை நடிகனாக மெருகேற்றியவர், மேலும் இவர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் பின்னாட்களில் இந்தியா சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய நட்சத்திரங்களாக வளர்ச்சி அடைந்தனர். ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஜெயப் பிரதா, சுஜாதா, சரிதா, நாசர், பிரகாஷ்ராஜ், சார்லி, விவேக் உள்ளிட்டோர் இவரால் அறிமுகமானவர்களே.

101 திரைப்படங்கள், தாதா சாகேப் பால்கே விருது, கலைமாமணி, பத்ம ஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். ஆனால், இதற்குள் அடங்கிவிடுபவரா கே.பி?

தான் வாழும் காலத்தில் ஒரு படைப்பாளி தன் சமூகத்துடன் எம்மாதிரியான(படைப்பு வழி)உரையாடலை ஏற்படுத்துகிறான் என்பது முக்கியமாக கருதப்பட வேண்டியது. பாலசந்தர் தன் படங்களின் வாயிலாக தனக்குள் தீ மூட்டிய பாரதியின் கவிதைகளையும், ஜெயகாந்தனின் உரையாடலையும் அப்படியே சமூகத்திற்கு அளித்தார். அபூர்வ ராகங்கள், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, தண்ணீர் தண்ணீர், மூன்று முடிச்சு, புதுப் புது அர்த்தங்கள், கல்கி போன்ற படங்களின் வாயிலாக பெண்கள் சந்திக்கும் குடும்ப, சமூக சிக்கல்களை திரைக்கதை சிக்கல்களாக மாற்றியவர். இப்படங்கள் மூலம் மிடில் கிளாஸ் பெண்களை சினிமா அரங்குக்குள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார் பாலசந்தர்.

தன் பெண் கதாபாத்திரங்களை நாயகனுக்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்ப வைத்தார் பாலசந்தர். அவர்களது ஆண் எனும் இறுக்கமான ‘ஈகோ’வை தொடர்ந்து தன் சினிமாக்களின் வாயிலாக உடைத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குநர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். புதுமைக்கு எப்போதும் தயங்காத பாலசந்தர், நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு வந்ததைப் போலவே சினிமாவிலிருந்து தொலைக்காட்சிக்கும் தயக்கமின்றி முன்னோடியாய் அடியெடுத்து வைத்தார். 1990 களில் தொலைக்காட்சித் தொடர்கள் நம் வீடுகளுக்குள் நுழையும் போது ‘கையளவு மனசோ’டு பாலசந்தரும் நுழைந்தார்.

தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். ஆனாலும் நாகேஷ் தான் அவரது விருப்பமான நடிகராக எப்போதும் இருந்தார். அவர்களுக்கிடையிலான நட்பு திரையுலகினரால் இப்போதும் சிலாகிக்கப் படுவதுண்டு.

பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த பாலசந்தர், அவரது காலத்திலேயே கதையை விட்டு வெளியேறாத பாடல்களை பயன்படுத்த தொடங்கினார். அவள் ஒரு தொடர்கதையில் வரும் ’கடவுள் அமைத்து வைத்த மேடை’, ‘தெய்வம் தந்த வீடு’, சிந்து பைரவியில் வந்த ‘நானொரு சிந்து’, அழகனில் வரும் ‘சங்கீத ஸ்வரங்கள்’, புது புது அர்த்தங்களில் வரும் ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’, புன்னகை மன்னனில் வரும் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ போன்ற பாடல்களை இப்போது பார்த்தாலும் புதுமையாகவும் ரசனையாகவும் புதுப் பார்வையாளர்களுக்கு அனுபவமளிக்கும்.

பாடலின் இசை போன்றே வரிகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருபவர் பாலசந்தர். ‘அழகன்’ படத்தில் வரும் ‘சாதி மல்லி பூச்சரமே’ பாடலின் கடைசி சரணத்தில் வரும் புலமைப் பித்தனின் வரிகள் பாலசந்தருக்குள் இருக்கும் கலைஞனின் நோக்கத்தை பிரதிபலிப்பதைப் போல அமைந்திருக்கும்.

‘உலகமெல்லாம் உண்ணும்போது

நாமும் சாப்பிட எண்ணுவோம் ..

உலகமெல்லாம் சிரிக்கும்போது

நாமும் புன்னகை சிந்துவோம்’ …

இவ்வரிகள் கொண்ட மானுட அறத்தை தன் படைப்பின் வாயிலாக தொடர்ந்து வலியுறுத்திய படைப்பாளியாய் எப்போது நிமிர்வுடன் நம் மனதில் வாழ்வார் கே. பாலசந்தர்.

**

மேலும் படிக்க

**

**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**

**[ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!](https://minnambalam.com/k/2019/07/09/14)**

**[10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு – 16, ஆதரவு – 5](https://minnambalam.com/k/2019/07/09/24)**

**[டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?](https://minnambalam.com/k/2019/07/08/60)**

**[அமித்ஷாவின் அடுத்த இலக்கு!](https://minnambalam.com/k/2019/07/08/11)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *