மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜூலை 2019

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

டிஜிட்டல் திண்ணை:  முகிலன் மீது  தேசிய பாதுகாப்பு சட்டம்?

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனுக்கு வந்தது.

“நேற்று முன் தினம் திருப்பதியில் கைதான சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன், இப்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் முகிலன் காணாமல் போனது முதல் இப்போது வரையிலான நிகழ்வுகளின் முரண்பாடுகளை சொல்லி போலீஸார் மீது புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முகிலன் எப்படி போலீஸ் பிடியில் சிக்கினார், இனி அவரை என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமுள்ள இளைஞர்கள் பலரிடத்திலும் எழுந்திருக்கிறது. காவிரி ஆறு முதல் கூடங்குளம் வரை அனைத்து சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்காகவும் போராடிய முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகச் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சில ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டார். அன்றிரவு எழும்பூர் ரயில் நிலையம் சென்ற சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனார்.

முகிலன் தரப்பிலிருந்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர், இன்னொருபக்கம் முகிலன் எங்கே, தமிழக அரசு கடத்திவிட்டது, கொலைசெய்துவிட்டது முகிலன் உயிரோடு இல்லை என்று சமூக தளங்களில் செய்திகள் பரவியது.

ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு சிபிசிஐடி போலீஸார் ரகசியமான பதில் கொடுத்தனர். அந்த நிலையில்தான் முகிலன் உயிரோடு இருக்கிறார் என்று என்ற செய்தியை நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் வெளியிட்டிருந்தோம்.

முகிலன் காணாமல் போய் சில மாதங்கள் கழித்து அவர் தனது முன்னாள் மாவோயிஸ்ட் நண்பருடன் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும், தன்னைப் பற்றி ஒரு பெண் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட செய்திகளை எல்லாம் அவரும் படித்துக் கொண்டுதானிருக்கிறார் என்றும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்தான் முகிலன் இருக்கிறார் என்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் முதன் முதலில் செய்தி வெளியானது. அந்த மாவோயிஸ்ட் நண்பருடன் ஆந்திரா பக்கம் முகிலன் சென்றிருப்பதாக மிக அண்மையில் இன்னொரு தகவல் போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் எஸ்.ஐ. சாஸ்தா தலைமையில் ஒரு டீம் அமைத்தனர். 2017 ஆம் ஆண்டு சேலம்- சென்னைக்கு சென்ற ரயிலில் ஓட்டை போட்டு கோடிகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடித்த டீமில் முக்கியப் பங்கு வகித்தவர் சாஸ்தா. அதனால் அவரையும் முகிலனை தேடும் பணியில் ஈடுபடுத்தினர் சிபிசிஐடி போலீஸார்.

இன்ஸ்பெக்டர் வேல்முருகன், எஸ். ஐ. சாஸ்தா அடங்கிய டீம் ஆந்திராவில் சில நாட்களாக தொடர் கண்காணிப்பில் இருந்தபோதுதான் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை 7 ஆம் தேதி பிடித்தார்கள். முகிலனை எப்படியும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும், அதுவரை அவர் பிடிபட்ட செய்தியை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் போலீஸாருக்கு இடப்பட்ட உத்தரவு. ஆனால், பல முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகிலன் இந்த நுட்பம் கூட அறியாதவரா? அதனால்தான் போலீஸ் தன்னை பிடித்ததுமே முழக்கங்களை ஒலித்திருக்கிறார். இதனால் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் வீடியோ எடுக்க அதுதான் முகிலன் இருக்கிறார், அவர் போலீஸ் பிடியில் இருக்கிறார் என்ற தகவலை பரப்பிவிட்டது.

6 ஆம் தேதி இரவே காட்பாடி அழைத்து வந்து அடுக்கம்பாறை மருத்துவமனையில் முதற்கட்ட சோதனை முடித்துவிட்டு அதிகாலை சென்னை சிபிசிஐடி அலுவலகத்தின் கீழ்த் தளத்துக்கு முகிலனை அழைத்து வந்தனர் போலீஸார். வழக்கமான அங்க அடையாளம் சரிபார்ப்புக்குப் பிறகு சிபிசிஐடி டிஎஸ்பி சிவனபாண்டி, ஆய்வாளர்கள் வேல்முருகன், கலாராணி, எஸ்.பி,கள் விஜயகுமார், மல்லிகா, நிஷா பார்த்திபன், போன்ற அதிகாரிகள் ஐஜி சங்கர் தலைமையில் முகிலனிடம் விசாரணை நடத்தினார்கள். உடலும் மனமும் சோர்ந்திருந்த முகிலன் போலீஸாரின் பல கேள்விகளுக்கு, ‘என்னை நீதிமன்றத்துக்கு கொண்டு போங்க. அங்கே பேசிக்கிறேன்’ என்றே பதிலளித்துள்ளார். விசாரணை அதிகாரிகள் கரூர் மாவட்டத்தில் ஒரு பெண் பாலியல் சம்பந்தமாகக் கொடுத்த புகார் பற்றி விசாரித்தபோது, அது பொய் கேசு நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து பியூசிஎல் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உதவியுடன் முகிலனின் மனைவி பூங்கொடி 30 நிமிடம் சந்தித்துப் பேசினார். சமூக ஆர்வலர் கனி ஓவியா 10 நிமிடம் பேசினார் மற்றும் உறவினர்கள் மூன்று பேர் சந்தித்துப் பேசினார்கள். மனைவி என்பதால் பூங்கொடி மட்டும் அடிக்கடி முகிலனைச் சந்திக்க அனுமதி கொடுத்தார்கள், அவர்களும் அருகில் போலீஸ் இருந்ததால் ரகசியங்களைப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு உடல்நலனைப் பற்றிமட்டும் பேசியுள்ளார்கள். நேற்று காலை இட்லி சாப்பிட்ட முகிலனுக்கு அதன் பின் நேற்று மாலை 4 மணிக்கு தயிர் சாதம் மட்டுமே கொடுத்துள்ளார்கள். இடையில் இரு முறை காபி அருந்தியுள்ளார்.

நேற்று பகல் முழுதும் சிபிசிஐடி அலுவலகத்தில் வைக்கப்பட்ட முகிலனை இரவு கஸ்டடியில் வைத்திருக்கக் கூடாது என்பதால் எழும்பூர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்ய திட்டமிட்டு இரவு 9மணிக்குப் புறப்பட்டனர் போலீஸார். அப்போது முகிலன் தனக்கு நெஞ்சு வலிப்பதாகத் துடித்தார். உடனே எழும்பூர் போகும் திட்டம் கைவிடப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு முகிலனை அழைத்துச் சென்றனர். அங்கே முகிலனுக்கு இதய சிகிச்சை நிபுணர் சாமிநாதன் இசிஜி, எஃகோ, பிபி பரிசோதனைகளைச் செய்துபார்த்துவிட்டு நார்மல்தான் என்று கூறியிருக்கிறார். ஆனால் முகிலனோ தனக்கு நெஞ்சு தொடர்ந்து வலிப்பதாக சொல்ல, உடனே டாக்டர், ‘இப்ப அவரை டிஸ்சார்ஜ் பன்ண வேணாம். அப்சர்வேஷனில் வைத்துப் பார்ப்போம்’ என்று கூறியிருக்கிறார்.

ஆனால் போலீசாரோ அதை மறுத்து முகிலனை இரவே மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மேஜிஸ்திரேட் காலை அழைத்து வாருங்கள் என்று சொல்லிவிட்டதால், கைதிகளை வைத்திருக்கும் வார்டான கான்வென்ட் வார்டில் இரவு வைத்திருந்து இன்று காலை (ஜூலை 8) ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீசார். தற்போது போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் முகிலன்” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.

இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் தனது தகவலைப் பதிவிட்டது.

“ஜூலை 6 ஆம் தேதி முகிலனின் மனைவிக்கு அவர் ஆந்திராவில் போலீஸாரிடம் பிடிபட்டதாக தகவல் வர, மறுநாள் காலையில் 4.45 மணிக்குக் கரூரிலிருந்து நிசான் காரில் கனி ஓவியா, பூங்கொடி, ராஜேஷ், கண்ணன், விசுவநாதன் உட்பட ஐந்துபேர் புறப்பட்டார்கள்.

காரை ராஜேஷ், கண்ணன் இருவரும் மாற்றி மாற்றி டிரைவிங் செய்துள்ளார்கள், கள்ளக்குறிச்சி வரும்போது காலை 8 மணிக்கு காரை கண்ணன் டிரைவிங் செய்தபோது கார் டயர் வெடித்து நிலைத் தடுமாறிப்போய் சாலை நடுவில் உள்ள கட்டையில் மோதி நின்றது. ஏர்பேக் ஓப்பனாகி புகை மண்டலத்திலிருந்து காரிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள், விசுவநாதனைத் தவிர மற்றவர்களுக்கு அடிபட்டது, கனி ஓவியாவுக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு மாற்று காரில் புறப்பட்டார்கள்.

சிபிசிஐடி ஆபீசுக்கு சென்று முகிலனைச் சந்தித்தார் பூங்கொடி. முகிலன் ஆச்சரியத்துடன், ' நீ உயிரோடு வந்திருக்கிறாயா? நீயும் பிள்ளையும் இரண்டு மாதம் முன்பு இறந்துவிட்டதாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் காட்டினார்களே' என்று முகிலன் சொல்ல கண் கலங்கிவிட்டார் பூங்கொடி. மேலும், ’எனக்குக் கடுங்காலில் நாய் கடிச்சிடுச்சுமா இரண்டு வாரத்திற்கு முன்பு, போனவாரம்தான் ஊசிபோட்டேன்’ என்றும் சொல்லியுள்ளார். கனி ஓவியாவிடம், ‘ நானாகத் தலைமறைவாகவில்லை உண்மைகளை நீதிபதிகளிடம் எடுத்துச்சொல்வேன்’ என்றுள்ளார்.

போலீஸார் முகிலனிடம் அவரது மனைவி இறந்துவிட்டார் என்று சொன்னது ஏன், பூங்கொடி வரும் வழியில் நடந்தது விபத்தா அல்லது சதியா என்று பல கேள்விகள் இதில் முளைத்திருக்கின்றன. தற்போது ஸ்டான்லியில் முகிலன் சிகிச்சையில் இருக்க, அவர் போராட்டக் களத்தில் பேசிய பல்வேறு பேச்சுக்களின் வீடியோக்களை சேகரித்து வருகிறார்கள் போலீஸார். இதன் அடிப்படையில் மேலும் சில வழக்குகள் தொடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முகிலனை சிறை வைப்பதுதான் போலீஸின் திட்டம் என்கிறார்கள்” என்ற மெசேஜை பதிவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 8 ஜூலை 2019