மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜூலை 2019

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 16 கட்சிகளும், ஆதரவாக 5 கட்சிகளும் கருத்து தெரிவித்தன.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதா அல்லது கூடாதா என்பது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 8) மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாலை 7 மணி வரை தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை 10% கூடாது: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்! என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்தக் கூட்டம் நடைபெற இருந்தது. நேற்று மாலை 5.30 மணி வரையிலும் சட்டமன்றத்தில் இருந்தாலும்கூட முதல்வர் அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம்தான் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் கருத்து தெரிவித்தது. அக்கட்சியின் சார்பில் கலந்துகொண்ட கோபண்ணா, “69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்பு இல்லாதபோது 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் தமிழக காங்கிரஸுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்பது உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், சமூகநீதிக்கு எதிரான எந்தவொரு இட ஒதுக்கீட்டையும் தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.

அதே சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் அமலில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தலாம். 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ரூ.8 லட்சம் பொருளாதார அளவுகோல் என்பது நலிந்தோருக்கானதாக இருக்க முடியாது” என்ற கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு குந்தகம் விளைவிக்கும். இட ஒதுக்கீட்டுக்கான நோக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்றார்.

“பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. பெயரே முன்னேறிய வகுப்பினர் என்று இருக்கும்போது அவர்களுக்கு எதற்காக இட ஒதுக்கீடு” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். அப்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கும், சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட பிறகு சுமார் 9 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. அதிமுகவின் நிலைப்பாடு வெளிப்படையாக எடுத்துவைக்கப்படவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக, மதிமுக, விசிக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட 16 கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தன.

இறுதியாகச் செய்தியாளர்களிடத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 21 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன. ஜெயலலிதா கொண்டுவந்த 69% இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதகமும் வரக் கூடாது எனக் கட்சிகள் கருத்து கூறின. ஜெயலலிதாவின் கொள்கைப்படி சமூகநீதியைக் காப்பதற்கு உரிய நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

என்.ஆர். இளங்கோ மனு தாக்கல்: வைகோ விளக்கம்!

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!


வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

செவ்வாய் 9 ஜூலை 2019