அண்டை வீட்டு சொந்தங்களே !

politics

ஸ்ரீராம் சர்மா
செவிப்பறை கிழிக்கும் கொல்லப் பட்டறைகளாக கொழுத்துப் பெருத்து நிற்கின்றன இன்றைய சேனல் சண்டைகள் !
அருளாளர் நபிகளாரைக் குறித்து வெகுண்டதொரு கருத்தை நூபூர் சர்மா என்பவர் அந்த பட்டறை சத்தத்தனூடே பரபரத்துவிட, முன்னெப்போதும் இல்லாத வகையில் அது இஸ்லாமிய நாடுகளால் வரிசையாக கண்டிக்கப்பட, அந்த அபாயத் தீ இந்திய மண்ணில் அங்கிங்கெனப் பற்றிக் கொண்டு விட்டது.
அது, மெல்ல நகன்று தமிழகத்தையும் தமிழக இஸ்லாமிய மக்களின் அப்பாவி மனங்களையும் பீடித்துக் கொண்டுவிடுமோ என்னும் பேரச்சம் என்னுள் எழுந்த காரணம் பற்றியே இந்தக் கட்டுரை !
இந்திய உள்ளாட்சி அமைச்சகம் நாட்டுப் பாதுகாப்பில் எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்லி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுருத்தியிருக்கின்றது. அந்த எச்சரிக்கைக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உள்ளது.


தமிழகத்தின் முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்களின் மேல் அளவற்ற அன்பும் பாசமும் உண்டு என்பதை தனித்து சொல்லத் தேவையில்லை. அவரது தலைமையிலான ஆட்சி சிறுபான்மை மக்களின் உணர்வுகளை ஆர அரவணைத்து செல்லும் ஆட்சிதான்.
சொந்த நாட்டில் சிறுபான்மையினருக்கொரு ஆபத்து எனில் உடனோடி நின்றாக வேண்டியது அனைவருக்குமான கடமைதான் எனினும் இன்று எழுந்திருக்கும் அழுத்தம் அசாதாரணமானது.
அது, அயலுலகத்தின் பேரழுத்தம் எனப் புரிந்து கொண்டவர்களாய் தாய் நாட்டுக்கெதிரான அந்த அயலுலக அழுத்தங்களை புறம்தள்ளிப் போவதே நமக்குப் பெருமை சேர்க்கும் என்பதை இஸ்லாமிய அறிவுஜீவிகளின் உலகம் உணர்ந்து நிற்பது நெகிழ்ச்சிக்குரியது.
இஸ்லாமியர்கள் அனைவரும் அவர்தம் வழிகொள்ள வேண்டும் என்பதே அடியேனின் வேண்டுகோளாகிறது.
விஷயத்துக்குள் சென்று கவனிப்போம்.
இதற்கு முன்பும் நபிகளாரைக் குறித்த அவதூறுகள் பல முனைகளிலும் கிளப்பப்பட்டிருந்தாலும் இந்த முறை அதனை செய்தது பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள் என்பதால் அது வீச்சமெடுத்துப் போக…
இந்தியாவை நோக்கித் தன் கண்டனத்தை முதலில் செலுத்தியது கத்தார்.
கத்தார் என்பது சின்னஞ்சிறிய நாடுதான் எனினும் அரேபிய வியாபார உலகில் குறிப்பிடத்தகுந்த சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட நாடு அது.
“அரேபிய வசந்தம்“ எனப்படும் சர்வாதிகாரங்களுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பொருளுதவி செய்த நாடாக அது அறியப்படுகின்றது.
இஸ்லாமியர்களுக்கு தலைமைத்துவம் தாங்கும் வேட்கை கொண்டுதான் மற்ற இஸ்லாமிய நாடுகளும் கத்தாரின் கண்டனத்தை தங்கள் பங்குக்கு வழிமொழிந்து பதிய வைத்தார்கள் என்பார்கள் சிலர். அந்தப் பஞ்சாயத்தும் பலாபலன்களும் நமக்கு தேவையற்றது.
2016ல் கத்தாரின் தலைநகரான தோஹாவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி “கத்தார் எனது இரண்டாவது வீடு” என உச்சி முகர்ந்து வந்தார் என்றாலும், இன்றைய அயலுலக பிரச்சினை இந்தியாவை நோக்கி நகர்ந்து காட்டியது என்பதே உண்மை.
உலக அரசியல் எப்படியும் மாறும். சொந்த நாட்டில் ரத்த சகதி கண்டால் அதன் அவலமும் – பாரமும் ஆளும் அரசுக்குத்தான் அதிகம் என்பதால், உஷாரான பாஜக அரசாங்கம் சம்பந்தப்பட்ட இருவரையும் உடனடியாக கட்சி நீக்கம் செய்துவிட்டு தனது தரப்பு சமிக்ஞைகளை உலக நாடுகளுக்கு தெரிவித்துவிட்டது.


அதன் பிறகும் இதனை கொண்டு நகர்த்துவது யார் ? இந்தியாவை குறி வைத்து நகர்த்தப்படும் இந்த உலக சதுரங்க ஆட்டத்தின் சூத்திரதாரி யார் ? அவர்களின் நோக்கமென்ன ? அதன் பாரதூர விளைவுகள் என்னவென்ன என்பதையெல்லாம் ஆழப் புரிந்து கொள்ளாமல் அதன்பின் செல்வது எந்த விதத்தில் நமக்கு நன்மை பயக்கும் என சிந்தித்தாக வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் இதற்கு முன் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள் இந்த அரேபியர்கள் ? இப்போது மட்டும் ஏன் திடுமென அரங்கேறி இப்படியொரு ஆர்பாட்டம் செய்கிறார்கள் ? என நான் கேட்கவில்லை மரியாதைக்குரிய இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள் கேட்கிறார்கள்.
அவரது கேள்வியில் இருக்கும் நியாயத்தை நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும். இஸ்லாம் குறித்து எதை எழுதினாலும் அவரோடு கலந்து கொள்வது எனக்கு வழக்கம்.
தமிழக இஸ்லாமியர்கள் சூழ்ச்சி வலையில் சிக்கிவிடக் கூடாதே எனும் ஆதங்கத்தோடு அலைபேசியில் உரையாடிய அவருடனான நேற்றைய கணங்கள் உணர்வுபூர்வமானவை. அந்த உரையாடலின் முடிவில் இது குறித்து நீங்கள் எச்சரித்து எழுதுவது தகும். எழுதுங்கள் என்றாரந்த மார்க்க அறிஞர்.
மனதுக்கினிய இஸ்லாமிய நண்பர்களே…
நேற்றைய தினம் தமிழகத்தின் சில இடங்களில் வெளிப்பட்ட எதிர்ப்புகள் மேலும் தொடருமானால், அது கலவரமாக சென்று முடியுமானால், அந்தக் கலவரத் தீயில் இந்த மண்ணுக்காக இஸ்லாமியப் பெருமக்கள் இதுகாறும் செய்த அத்துனை நன்மைகளும் மொத்தமாக இட்டுக் கொளுத்தப்பட்டு விடுமல்லவா ?
அது, முன்னோர்களின் தியாகங்களுக்கு செய்யும் மாபாதகமல்லவா ? அந்தக் கொடுவினைக்கு இடம் கொடுப்பது தகுமா ?
எனது கவலையெல்லாம் தமிழகத்தின் ஆட்சியும் – மாட்சியும் மீண்டும் ஒருமுறை சதிக்கு இரையாகிவிடக் கூடாது என்பதே !


WORLD FOR SALE என்றொரு புத்தகம். Jack Farchy – Javier Blas எழுதிய அந்த புத்தகம் 467 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது. தயவுசெய்து வாங்கிப் படித்துப் பாருங்கள். மனம் விக்கித்துப் போகும் !
உலக வியாபார நாராச ஆட்டங்களில் எப்படியெல்லாம் இந்த உலகம் தன் மானுடச் சொந்தங்களை பகைத்து இழந்தது எனப் புரிந்து போகும்.
உலகார்ந்த உசுப்பலின் மாய வலையில் சிக்கிச் சொந்த சகோதரர்களை இனியும் நாம் இழந்துவிடக் கூடாது. உணர்ச்சிவயப்பட்டு செயல்படுவதால் மட்டுமே நம் தரப்பு நியாயம் எடுபட்டு விடாது.
நடப்பதனைத்தும் கொழுத்த எண்ணை வளத்தையும் பற்பல வியாபார வெறித்தனங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய அடிதடிதான் எனினும் அது குறித்த தலையிடியை நாம் ஏன் கொள்ள வேண்டும் ?
நம்மிடம் வாக்குப் பெற்ற அரசாட்சியாளர்கள் நமக்காக உறக்கமிழந்து எதிரி நாடுகளுடன் மோதட்டும். அவர்களின் கடமை அது.
எனது கவலையெல்லாம் எனது அக்கம்பக்கத்து அப்பாவி இஸ்லாமிய சகோரர்களைக் குறித்து மட்டுமே !
பேரன்பிற்கினிய இஸ்லாமிய பெருமக்களே !
உங்கள் மீது தமிழக அரசாங்கம் பேரன்பும் – பெரும் நம்பிக்கையும் வைத்திருக்கின்றது. அவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தாத வகையில், சொந்த நாட்டின் எதிரிகளுக்கு வழி கொடுக்கமாட்டோம் என உங்கள் முன்னோர் வழி நின்று அமைதி காட்டுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
இறைத்தூதர் நபி அவர்களின் கொற்றப் பெருமை பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து உலகெங்கிலும் பரவி நின்றிருக்கும் ஒன்று. அதை ஓரிருவர் விமர்சித்து அழுக்கு செய்துவிட முடியாது.
எதுகொண்டும் அழிக்க முடியாத தன்மை படைத்தவர் எங்கள் இறைத்தூதர் என்னும் மனத்தெளிவை ஆழ்மனதில் ஏற்றிக் கொண்டு அமைதியாக கடப்பதுதான் உங்களுக்கும் – உங்கள் மார்க்க நெறிக்கும் அழகு சேர்க்கும்.
நபிகளாரை அவதூறு பேசிவிட்டார்கள் என்று கருதினால் REACT செய்யாமல் PROACTIVE ஆக செயலாற்றுங்கள்.
நபிப்பெருமானாரின் பெருமையை மாற்றாரும் உணர்ந்து கொள்ளும்படி தமிழகமெங்கும் கருத்தரங்கம் நடத்துங்கள். கவியரங்கம் நடத்துங்கள். எழுதியும் பேசியும் அவரது பெருமையை உலகறிய செய்யுங்கள். உங்களை இங்கே யாரும் கேள்வி கேட்க முடியாது.
அவ்வாறாகத்தான் இறைத்தூதரின் பெருமையை இந்த நாகரீக உலகில் நிலை நிறுத்த முடியுமே தவிர ஒரு சிலரின் வேட்கைக்கு ஆட்பட்டு செய்யும் வன்முறை செய்கை உங்களை அநியாயமாக பின்னடைய செய்துவிடும் என்பதை தயவுசெய்து உணருங்கள்.
மார்க்க அறிஞர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தன் கண்டனங்களை பலமாக தெரிவித்தார்.
எனினும் அதன் இறுதியில்… ‘ஜெய் ஹிந்த்’ என்றுதான் முடித்தார் !
அவரது அந்த தெளிவை அனைவரும் வழிமொழிவதே எதிர்காலத்தை ஒளிமயமாக்கி வைக்கும் !


**ஆயிரம் உண்டிங்கு சாதி – எனில் **
**அன்னியர் வந்து புகல் என்ன நீதி ? – ஓர் **
**தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள் **
**சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ !? **

என்றான் எட்டையபுரத்து முண்டாசுக் கவி ! எடுபடக் கூடிய அந்த நியாயத்தை வழி மொழிந்தாக வேண்டிய தருணம் இது ! எதிரிகளுக்கு இடம் கொடுக்காது ஒருமைப்பட்டு நிற்க வேண்டிய காலம் இது !

என்னுள் நிறைந்த இஸ்லாமிய சொந்தங்களே…

எவரும் எதையும்தான் சொல்லிப் போகட்டுமே. நீங்கள் மனங்கொண்டு சொல்லுங்கள்…
மதமாச்சரியமின்றி மாமனாக – அண்ணனாக – மதினியாக – தங்கையாக அக்கம் பக்கத்து சொந்தமாகக் கொண்டு வாழும் இந்தத் தமிழ் மண்ணில்…
உங்கள் பக்கத்து வீட்டு இந்து என்றேனும் உங்களை விட்டுக் கொடுத்ததுண்டா ? உங்களையோ உங்கள் மார்க்க நம்பிக்கையையோ ச்சீ எனச் சொன்னதுண்டா ?
அல்லாதபோது, எங்கோ யாரோ சொல்லக் கேட்டு முன்னெடுக்கப்படும் உங்கள் போராட்டம் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனை ச்சீ எனச் சொல்வது போலாகாதா ? அவர்தம் மனம் புண்பட்டுப் போகாதா ?
இறையச்சம் கொண்ட உங்களுக்கு எளியவன் சொல்ல வேண்டுமா?
**“உன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்; நீ முஸ்லீமாவாய்“ **என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) நூல் : இப்னுமாஜா.

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா -** எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *