தி கேரளா ஸ்டோரி: ’பொய்’ என ஒத்துகொண்ட தயாரிப்பாளர்… மோடி ஆதரவு… தொடரும் எதிர்ப்பு!
தி லாஸ்ட் மோங்க், லக்னோ டைம்ஸ், குருஜனா மற்றும் இன் தி நேம் ஆஃப் லவ் ஆகிய படங்களின் இயக்குநர் சுதிப்தோ சென் என்று சொன்னால் இந்தியாவில் பலருக்கும் அவரை அடையாளம் தெரியாது.
கடந்த 2006 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி, தொடர்ந்து சுயாதீன படங்களை இயக்கி வந்த சுதிப்தோ சென், தற்போது தான் இயக்கி இன்று (மே 5) வெளியாகியுள்ள ’தி கேரளா ஸ்டோரி’ ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
அப்படி என்ன பிரச்சனையை தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் கூறியுள்ளார்? ஏன் இதை அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்க்கின்றன?
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவை இந்த படத்தை தயாரித்துள்ள சன்ஷைன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
அதில், கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் போர் நடைபெறும் இஸ்லாமிய நாடுகளுக்கு கடத்தப்பட்டதாகவும், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைதொடந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான டீசரிலும் அதே கருத்துகளை படத்தின் கதாநாயகி அடா சர்மா பேசும் காட்சிகளாக இடம்பெற்றிருந்தன.
இதற்கு கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ரியல் கேரளா ஸ்டோரி
எனினும் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வருவதில் படக்குழு உறுதியாக இருந்தது. இதற்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. எஸ்.டி.பி.ஐ., நாதக உள்ளிட்ட கட்சிகள் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. எனினும் எதிர்ப்புகள் ஒருபுறமிருக்க, திட்டமிட்டப்படி படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இதற்கிடையே சமூகவலைதளங்களில் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. காம்ரேட் ஃபரம் கேரளா என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட ‘இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி‘ வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர சமீபத்தில் வைரலானது. அந்த வீடியோவில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், இந்து தம்பதியருக்கு இந்து முறைப்படி திருமணம் நடப்பது பதிவாகியிருக்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மணப்பெண்ணுக்கு மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ குறித்து, “மனிதகுலத்தின் மீதான அன்பு, எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்” என தனது கருத்தை ஏ.ஆர். ரகுமான் பதிவிட்டார்.
இதே போன்று கேரள முதல்வர் பினராயி விஜயனும், கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ’#LIFEMission திட்டத்தின் கீழ் 20,073 புதிய வீடுகள் ஏழை மக்களுக்கு கையளிக்கப்பட்டதை குறிப்பிட்டு, இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி’ என்று பதிவிட்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து ‛தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படத்துக்கு தடைக்கோரி கேரளா, சென்னை உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
அடுத்தடுத்து தொடரப்பட்ட 2 மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் அரவிந்தாக்ஷன் என்பவர் ’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”எந்த ஆதாரங்களும் இன்றி, பொய்யான தகவல்களை கொண்டு எடுக்கப்பட்ட ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட முழு தடை விதிக்க வேண்டும்” என அவர் கோரியிருந்தார்.
அதனை நேற்று (மே 4) அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி,’இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து இந்தியாவில் கடும் எதிர்ப்புக்கிடையே ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ’தி கேரளா ஸ்டோரி’ இன்று வெளியானது.
இந்தியில் மட்டுமே வெளியீடு!
எனினும் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ’இந்தி’ பதிப்பில் மட்டும் கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. அதிலும் சென்னையில் மால்களில் உள்ள 15 தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டது.
அதே போல கோவையில் 3 தியேட்டர்களிலும், சேலத்தில் ஒரு தியேட்டரிலும் வேலூரில் 2 தியேட்டர்களிலும், தாம்பரத்தில் ஒரு தியேட்டரிலும் கேரளா ஸ்டோரி படம் வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை.
இதையடுத்து தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இப்படம் வெளியான ஏஜிஎஸ் திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை போராட்டக்காரர்கள் கிழித்தெறிந்தனர்.
கோவையின் முக்கிய சாலையில் உள்ள வனிகவளாகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ வெளியான திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
ஆனால் முன்னரே தமிழ்நாடு டிஜிபி உத்தரவின் பேரில் இப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டம் நடைபெற்ற சில இடங்களில் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதேபோல் கேரளாவிலும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சியில் காங்கிரஸ் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உண்மையை ஒத்துக்கொண்ட தயாரிப்பாளர்
இதற்கிடையே இந்த படத்திற்கு தடை கோரிய வழக்கினை கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகரேஷ் மற்றும் சோபி தாமஸ் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது 32,000 பெண்கள் மதம்மாற்றம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்? என்று பட தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ”அது எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வைத்தோம்” என்ற கூறினார். மேலும் டீசரில் இருந்த அதனை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்படும். என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ‛தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்தனர்.
படத்தில் குறிப்பிட்ட காட்சிகளுக்கு ஆதாரப்பூர்வமாக எந்த தகவலையும் படத் தயாரிப்பு நிறுவனம் காட்டாத நிலையில், அதனை நீதிமன்றம் ஏற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பிரதமர் பாராட்டு
எனினும் பலத்த எதிர்ப்புக்கு இடையே வெளியாகி இருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பிரதமர் மோடி தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெல்லாரியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், “தீவிரவாதிகளின் சதி வேலைகளை தோலுரித்துக் காட்டும் திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி அமைந்துள்ளது. தீவிரவாதிகள் குறித்த உண்மையை எடுத்துக்கூறும் அருமையான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படத்தைதான் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.
தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் எந்தவொரு படத்தையும் காங்கிரஸ் எதிர்க்கும். வெறும் ஓட்டுக்காக தீவிரவாதிகளிடம் காங்கிரஸ் மண்டியிட்டு வருகிறது.” என்றார்.
மேலும், தீவிரவாதத்தாலும், வன்முறையாலும் இந்தியா நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், வாக்கு வங்கிக்காக அதை தடுக்கக் கூட காங்கிரஸ் முன்வரவில்லை. தீவிரவாதத்தில் இருந்து இந்த நாட்டை கூட பாதுகாக்க முடியாத காங்கிரஸா, கர்நாடகாவை காக்கப் போகிறது?” என மோடி கேள்வியெழுப்பினார்.
தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்து வரும் மோடி, அதனை எதிர்க்கும் விதமாக கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை பயன்படுத்தியது வைரலானது.
வெற்றுக்கூச்சலா? உண்மையின் கூக்குரலா?
இதற்கிடையே உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தி கேரளா ஸ்டோரி மோசமான நடிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள, மோசமான திரைப்படம் என ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது.
பல்வேறு மத, இன அடையாளங்களுடன் பெருமைப்படும் கேரளாவில், அதன் சமூக சிக்கல்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டாமல், மோசமாக உருவாக்கப்பட்டு இருக்கும் வெற்று கூச்சலே ‘தி கேரளா ஸ்டோரி’ என சாடியுள்ளது.
அதே போன்று, பல்வேறு எதார்த்தங்களை கேள்விக்குள்ளாக்கி, முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டிருப்பதாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை ஸ்க்ரோல்.இன் இணையதளம் விமர்சித்துள்ளது.
கேரள ஸ்டோரி உங்கள் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும். யதார்த்தத்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்தோ சென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள்.” என்று ராஜட் லுங்காட் என்ற பட விமர்சகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
’தி கேரளா ஸ்டோரி’ படத்தை அனைவருக்கும் இலவசமாக திரையிட வேண்டும் என்று முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் தென்னிந்திய மண்டல ஒருங்கிணைப்பாளரான சென்னையைச் சேர்ந்த பாத்திமா கூறியுள்ளார்.
இதுபோன்று கலவையான, கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவும், எதிர்ப்பும் எழுப்பப்பட்டு வருகிறது.
எனினும் பொய்யான கருத்துகளை திரைப்படங்கள் மூலம் பிரச்சாரமாக திணிக்கும் யுக்தி சமீபகாலமாக இந்திய சினிமாவில் அரங்கேறி வருகிறது. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளி வருவது நாட்டின் இறையாண்மைக்கும், அமைதிக்கும் வழிவகுக்கும்.
இந்நிலையில் தான், திரைத்துறையில் திரைப்படங்களின் தணிக்கைக்குழு மற்றும் நீதிமன்றங்களின் நியாயமான தலையீட்டின் அவசியம் என்று தவிர்க்க முடியாத சக்தியாகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
‘காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே’: அமைச்சர் பொன்முடி
’ஓடவிட்டு சுடலாமா’: திரையுலகம் காணாத புதுமை!