hஆளுநர் விழா: அமைச்சர்கள் புறக்கணிப்பு!

politics

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புறக்கணிப்பது என்ற கொள்கை முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இதை நேற்று ஏப்ரல் 17ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில் [இனி ஆளுநர் நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு: ஸ்டாலின் முடிவு](https://minnambalam.com/politics/2022/04/17/28/governor-programmes-not-attend-by-govt-mkstslin-thitupadhi-kalyana-uthsavam) தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

ஏப்ரல் 16ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற திருப்பதி சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் ஆளுநர் பங்கேற்ற காரணத்துக்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் புறக்கணித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று ஏப்ரல் 18ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்துள்ளார்கள்.

அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ரவி நேற்று இரவு சிதம்பரத்துக்கு வந்தார். கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆளுநர் பல்கலைக்கழக ஓய்வு விடுதியில் நேற்று இரவு தங்கினார். இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் இன்று மாலை அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்தார்.

இந்த விழாவில் துறை அமைச்சர் என்ற அடிப்படையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயரும், மாவட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் பெயரும் அழைப்பிதழ்களில் இடம்பெற்றிருந்தன.
ஆனாலும் ஆளுநர் பங்கேற்கும் மேடையில் கலந்துகொள்வது இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதால் இந்த இரு அமைச்சர்களும் விழாவை புறக்கணித்துள்ளனர்.

சட்டமன்றம் நடைபெறுகிறது என்ற காரணம் அமைச்சர்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும் அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையிலேயே ஆளுநர் விழாக்களை தொடர்ந்து அமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று தெரிகிறது.

முன்னதாக இன்று காலை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், “ஆளுநருக்கும் முதல்வராகிய எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை. அரசியல் கடந்த பண்பாட்டை நாங்கள் எப்போதும் கட்டிக் காப்போம். ஆனால் இந்த சட்டமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றம் இரண்டு முறை நிறைவேற்றிய நீட் விளக்கு சட்டமசோதா ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் போது, அதே ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து விழா கொண்டாட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? அனைத்து மன்றங்களிலும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை எதிரொலிப்போம்” என்று பேசினார்.

காலையில் சட்டமன்றத்தில் முதல்வர் பேசிய பேச்சு, மாலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எதிரொலித்திருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை 3. 45 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 4 மணி வரை சட்டமன்றத்தில்தான் இருந்தார்கள் அமைச்சர்கள் பொன்முடியும் எம் ஆர் கே பன்னீர்செல்வமும்

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *