2021ஆம் ஆண்டு தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது எதிர்கால அரசியல் திட்டம் குறித்து சென்னை ஆர்.ஏ.புரம் லீலா பேலஸில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார். தனக்கு முதல்வராகும் எண்ணம் இல்லை என்றும், நல்லவரை முதல்வராக்கிவிட்டு, கட்சியின் தலைவராக தொடரப்போவதாகவும், அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்த இதுதான் சரியான தருணம் என்றும் தெரிவித்தார். அத்தோடு, அரசியல் மாற்றத்திற்கான 3 திட்டங்களையும் முன்மொழிந்தார். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
சென்னை பூவிருந்தவல்லியில் இன்று (மார்ச் 13) காலை நடந்த தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர். எங்கள் குடும்பத்திற்கும் கட்சிக்கும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. தற்போது அவர் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியுள்ளார். தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் இல்லாததால் ஒரு வெற்றிடம் உள்ளது. இதுதான் சரியான நேரம் என்று ரஜினிகாந்த் சொல்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திற்கும் நல்ல முடிவு வரும். தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழப்போவது நிச்சயம் உறுதி என்பதுதான் எங்களின் கருத்தும் கூட” என்று தெரிவித்தார்.
ராஜ்யசபாவுக்கு தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு இடம் வழங்க வேண்டும் என அதிமுக தலைவர்களை நேரில் சந்தித்தும், ஊடகங்கள் வழியாகவும் பிரேமலதாவும், சுதீஷும், விஜய பிரபாகரனும் வலியுறுத்தியிருந்தனர். ஆனாலும் தேமுதிகவுக்கு இடம் ஒதுக்காத அதிமுக, தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கியது. இதனால் தேமுதிக தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 2021 தேர்தலில் அரசியல் மாற்றம் நிகழும் என பிரேமலதா தெரிவித்திருப்பது அதன் வெளிப்பாடுதான் என்கிறார்கள் தேமுதிக வட்டாரங்களில்.
**எழில்**�,