ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
திமுக கூட்டணி தரப்பில் பல்வேறு நட்சத்திர பேச்சாளர்களும், அனைத்து அமைச்சர்களும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன், ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் முகாமிட்டு திமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
நேற்று பிப்ரவரி 9ஆம் தேதி இரவு ஈரோடு சங்கம் மஹாலில் முழுக்க முழுக்க ஈரோடு தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு நகர செயலாளர், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர் என்று,
லோக்கல் திமுக நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் கலந்துகொண்டு இடைத்தேர்தலில் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதித்துள்ளார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து தேர்தல் பணி ஆற்ற வந்திருக்கும் திமுக நிர்வாகிகளுக்கு… பெருந்துறை சாலையில் கீதாஞ்சலி பள்ளி அருகே அமைச்சர் எ.வ. வேலு தினமும் உணவு அளித்து வருகிறார்.
காலை டிபன் காபி, மதியம் சாப்பாடு மட்டன் குழம்பு ,சிக்கன் குழம்பு, நாட்டுக்கோழி வறுவல், இரவு சப்பாத்தி தோசை என தனது ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்து தேர்தல் பணியாற்றும் திமுகவினருக்கு உணவு ஏற்பாடு செய்துள்ளார் வேலு.

இன்று பிற்பகல் 2 மணி அளவில் திமுக தேர்தல் பணி செய்யும் நிர்வாகிகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கே திடீரென சபரீசன் வந்தார்.
ஒவ்வொருவரின் அருகே சென்று, ,எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்? தேர்தல் பணிகள் எப்படி இருக்கு? மக்கள் என்ன சொல்றாங்க?” என்று விசாரித்தவர்..
‘சாப்பாடு நல்லா இருக்கா? நல்லா சாப்பிடுங்க’ என்று சகஜமாக பேசி நலம் விசாரித்தார்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென சபரீசன் வந்து விசாரிக்கிறாரே என்று அவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியானது.
திமுக தேர்தல் பணி குழு நிர்வாகிகளிடம் நாம் விசாரித்த போது, “சபரீசன் இதுவரை எந்த நிகழ்விலும் முகம் காட்டுவதை விட பின்னணியில் இருந்து செயல்படுவதையே வழக்கமாக வைத்திருப்பவர். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சபரீசன் களமிறங்கி சில வியூகங்களை வகுத்துள்ளார்.
அதற்காகத்தான் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளிடம் மட்டும் ஆலோசனை நடத்தினார்.
அடுத்த கட்டமாக இன்று திமுக தேர்தல் பணி செய்யும் வெளி மாவட்ட நிர்வாகிகளிடமும் சகஜமாக கலந்துரையாடி உள்ளார். அதுபோன்று ஈரோடு தொழில் துறை அமைப்பினருடனும் சபரீசன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சபரீசன் நேரில் வந்ததிலிருந்து இந்த இடைத்தேர்தலின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது” என்கிறார்கள்.
–ஆரா