நல்லதம்பி
பாஜகவும், கார்ப்பரேட்களும், வலுவாக கரம் கோர்த்து உள்ளது ஊர் அறிந்த ரகசியம். “சுதேசி ஜகாரான் மன்ஞ்” என்றெல்லாம் தனிப் பிரிவு வைத்துக் கொண்ட பாஜக/ ஆர்எஸ்எஸ் ஏன் இப்படி வலுவாக கார்ப்பரேட்களோடு கை கோர்த்து நிற்கிறது? பாஜகவின் மீது பாசம் பொங்கும் நண்பர்களுக்கு கூட புரியாத புதிர் தான். இந்தப் புதிரைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
கார்ப்பரேட்கள் என்பவர்கள் யார்? அவர்களின் நோக்கம் இலக்கு என்ன? பெருமுதலாளிகள், பெருந் தொழில் நிறுவனங்களை நடத்துவோர், உலகின் பல்வேறு நாடுகளில் தொழில் விற்பனை மையங்களை நடத்தி வருபவர்கள், தாங்கள் குவித்து வைத்துள்ள மூலதனம் வழியாக அதி நவீன தொழில் நுட்பத்தை பெறுவார்கள்.
மிக மிகக் குறைந்த கூலிக்கு தொழிலாளிகளை , ஒப்பந்த முறையில் வேலை வாங்கி மேலும் கொள்ளை இலாபம் சம்பாதிப்பார்கள். தங்கள் மூலதனத்தின் வலு, உள்நாட்டு, வெளிநாட்டு, பன்னாட்டு அரசுகளை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றது. அரசுகளின் கொள்கை உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்துவது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இலாப வேட்கைக்காக இயல்பாக செய்து வரும் பணிகள்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிடிக்காதவை எவையாக இருக்கும்? பிடித்தவற்றை தெரிந்து கொண்டால் பிடிக்காதவற்றை பட்டியல் இடுவது எளிது. கார்ப்பரேட்களின் நோக்கம், இலக்கு, செயல்திட்டம் புரிந்து கொண்டோம். அதன் அடிப்படையில் கார்ப்பரேட்களுக்கு பிடிக்காதவற்றை புரிந்து கொள்வது எளிது.
அப்படியெனில் கார்ப்பரேட்களுக்கு எட்டிக்காய் கசப்பு எது?
1) அரசுத் துறைகள் பொதுத் துறைகள் என்ற ஒன்று இருக்கவே கூடாது.
2) தனியார் துறையின் மீதும் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. நம் நாட்டில் பெட்டிக் கடை முதல் பெரு நிறுவனங்கள் வரை இருக்கிறது. இவற்றை குடிசை தொழில், சிறு தொழில், நடுத்தர தொழில் பெருந் தொழில் என்று வகைப்படுத்தி சிறு தொழில் நிறுவனங்களை பெருந் தொழில் நிறுவனங்கள் கபளீகரம் செய்யாமல் பார்த்துக் கொள்ள ஒரு நல அரசு ( welfare state) முயற்சி எடுத்தால் அதனை தடுப்பார். தங்கள் தடுப்பு ஆற்றலை பயன்படுத்துவார்கள். கட்டுப்பாடுகளை விதிப்பது தொழில் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பார்கள்.
3) ஆயிரம் ஆயிரம் கோடி வரிச் சலுகை வேண்டும். அது தங்களுக்கு மட்டுமே வேண்டும். மற்றவர்களுக்கு கூடாது என்று கூக்குரல் இடுவார்கள். விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை, விவசாய மானியம் எனப் பெயரிட்டு அதனை ரத்து செய்யக் கோருவார்கள். தீங்கானது என்பார்கள். உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு பண நிதியம் போன்ற பன்னாட்டு அமைப்புகளை வைத்து, கால் கட்டு போட வைப்பார்கள்.
கார்ப்பரேட்களுக்கு அள்ளிக் கொடுக்க வைத்து, அதனை ஊக்கத் தொகை என்று அழைப்பார்கள். அது குன்றாமல் பார்த்துக் கொள்வார்கள். நாட்டை பாதுகாக்க இத்தகைய சலுகைகள் தொடரவேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். நாட்டை பாதுகாப்பது என்பது தங்களை பாதுகாப்பதே என்பார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவின் இலக்கு என்ன?
மிக எளிய இலக்கு. “ஒரே நாடு. ஒரே தேர்தல். ஒரே அட்டை… என்னும் ஒரே முழக்கங்கள் எல்லாம் ஒரே இலக்கு நோக்கி தான். அது, “இந்த நாட்டில் மீண்டும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும்” என்பது மட்டுமே. வர்ணாசிரம தர்மம், சனாதன தர்மம், மநுநீதி சட்டம் என்பதெல்லாம் சுருக்கமாக இதற்குள் அடக்கம்.
அந்தந்த வர்ணம் சாதி எல்லைக்கு உட்பட்ட மக்கள் பிரிவினர் அவரவர் வர்ண சாதிக்கு ஏற்ற தொழில் செய்ய வேண்டும். அதன் படி பிழைப்பு நடத்த வேண்டும் என்பதே. அதற்காக புதிய கல்விக் கொள்கையில் வழி வகை செய்யப்பட்டிருந்தது நினைவு இருக்கலாம்.
இருபத்தியோராம் நூற்றாண்டில் இதெல்லாம் சாத்தியமா? என மெத்தப் படித்தவர்கள் கூட மிகவும் அப்பாவிகளை போல் கேட்கலாம். கார்ப்பரேட் நிறுவனங்களும் பாஜகவும் கரம் கோர்த்தால் யாருக்கும் தெரியாமல் இந்த விசயத்தை கனகச்சிதமாக முடித்து விடலாம். எப்படி?
சுதந்திர இந்தியாவில், பார்ப்பனர் அல்லாத பிற சமூக மக்கள் படித்து முன்னேறும் போது அவர்களுக்கு ஏற்ற வேலைகள் கிடைத்தது எப்படி? அரசுத் துறை மற்றும் பொதுத் துறைகளில் பெருமளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. அவை இட ஒதுக்கீட்டு கொள்கை மூலம் பட்டியல் இன பழங்குடியின பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினர்.
விவசாயத் துறை முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் துறை, சேவைத் துறை வளர்ச்சி அடைந்து ஒரு நாடு முன்னேறுவது போல், அரசுத் துறை பொதுத் துறை அவற்றின் வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டு பிரிவினர் அல்லது பார்ப்பனர் அல்லாதார் முன்னேற்றம் காண ஓர் வாய்ப்பு வாசல் கிடைத்தது.
கார்ப்பரேட்களுக்கு அரசுத் துறைகள் பொதுத் துறைகள் கூடாது. பாஜகவிற்கு இட ஒதுக்கீடு கூடாது. எளிய உத்திகள் இருக்கிறது. எப்படி? இதோ கவனமாக கேளுங்கள்.
உதாரணமாக, அரசுப் பேருந்து நேரத்திற்கு வரவில்லை. அரசுப் பேருந்து நம்ம ஊர் பேருந்து நிறுத்தத்தில் நிற்க வில்லை. அரசுப் பேருந்துகளில் அமைச்சர்கள் கொள்ளை. அதிகாரிகள் கொள்ளை நிரந்தர வேலைகளில் இருந்து கொண்டு தொழிலாளிகள் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். சங்கம் சேர்ந்து கொண்டு சட்டம் பேசுகின்றனர். இதற்கு தீர்வு என்ன? “பொதுத் துறை அரசுத் துறைகளை ஒழித்துக் கட்டி விடலாம். தனியார்மயம் ஆக்கிவிடலாம்”அரசுத் துறைகளால் பயன் பெற்ற சமூகப் பிரிவினரும் கூட “ஆம் ஆம் உடனடியாக செய்ய வேண்டும்” என்று தலை ஆட்டுவர்.
பொதுத் துறை அரசுத் துறைகளின் சீர்கேடுகளை சரி செய்வதற்கு பதிலாக, அவற்றை ஒழித்துக் கட்டி விட்டால் என்ன நடக்கும். இது வரை அரசுத் துறைகள் வழியாகவும் பொதுத் துறைகள் வழியாகவும் கிடைத்து வந்த வேலைகள் கிடைக்காமல் போய்விடும்.
பட்டியல் இன பழங்குடியின பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வேலை வாய்ப்புகளுக்கு தனியார் துறையையே நம்பி இருக்க வேண்டும். தனியார் துறைகளில் விண்ணப்பத்தை பார்த்தவுடன் அதில் சாதிப் பெயரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அந்த விண்ணப்பத்தை தள்ளி வைக்கும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் உட்பட ஏராளம், ஏராளம். அப்படி ஓர் நிலை வர வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம்.
“இட ஒதுக்கீடு வேண்டாம்” என்றால் ஓட்டுக் கிடைக்காது. கோஷத்தை மாற்றி, “ஊழலை ஒழிக்கிறோம். நிறுவனங்களின் செயல் திறனை கூட்டுகிறோம்” என்றால் எல்லோரும் ஒரே குரலில் தலை ஆட்டுவர். அப்போது தான் மீண்டும் ஓர் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு தடையற்ற தேசமாக போகும். மீண்டும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது எளிதாக சாத்தியம். இட ஒதுக்கீட்டு பிரிவினர் நன்கு படித்திருந்தாலும் அவரவர் வர்ண சாதிக்கு ஏற்ற வேலைக்கு செல்ல நிர்பந்தம் செய்யப்படுவார்கள்.
கார்ப்பரேட்களுக்கு அரசுத் துறைகள் பொதுத் துறைகள் பிடிக்காது. பாஜகவிற்கு இட ஒதுக்கீடுகள் பிடிக்காது. இரண்டும் சந்திக்கும் மையப் புள்ளி ஒன்று தான். இதுவே பாஜகவும் கார்பரேட்களும் வலுவாக கரம் கோர்த்து நிற்க காரணம். 2024 தேர்தல், கார்ப்பரேட்களும் பாஜகவும் இணைந்து கர சேவை ஒப்புதல் கோரும் தேர்தல்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவை தேர்தல்: முதியோர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!
வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடி-யில் பணி!
அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வா? – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!
“கெஜ்ரிவால் விரைவில் விடுதலை”: சஞ்சய் சிங் நம்பிக்கை!