aiadmk alliance with bjp

”நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தொடரும்”: எடப்பாடி பழனிசாமி

அரசியல்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் திருமண விழா ஒன்றில் எதிர் கட்சித்தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெரும். வேண்டுமென்றே திட்டமிட்டு நேற்று அதிமுக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, அம்மா (ஜெயலலிதா) இருக்கிற போதும், அம்மா மறைவிற்கு பிறகும் நிறையத் திட்டங்களை நாங்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறோம். இதையெல்லாம் நேற்றைய தினம் தேர்தல் அறிமுக நிகழ்ச்சியில் நான் பேசினேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 21 மாத காலம் நிறைவு பெற்றிருக்கிறது. இந்த காலத்தில் திராவிட மாடல் ஆட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஒரு வேலையைக் கூடச் செய்தது கிடையாது. ஒரு துரும்பைக் கூட கிள்ளி போட்டது கிடையாது. ஆனால் அதிமுக காலத்தில் நிறைய பணிகளை நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம்.

குறிப்பாக ஈரோடு மக்களுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் 484 கோடி செலவில் காவிரி நீரைக் கொடுப்பதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த திட்டம் 21 மாத காலமாகக் கிடப்பில் போட்டுவிட்டது திமுக. நடைமுறைக்குக் கொண்டு வந்ததை அமல்படுத்தாமல் வைத்திருக்கின்றது.

இப்படி குடிப்பதற்குக் கூட தண்ணீர் கொடுக்காத திமுக அரசு கூட்டணி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்து வருகிறது. இலவச வேட்டி சேலை திட்டத்தை இந்த அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

aiadmk alliance with bjp

முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஒரு ஹெக்டருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் 20 ஆயிரம் தான் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். கடந்த 21 மாதம் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் செய்தது, அவரது தந்தைக்கு நினைவிடம், மதுரையில் அவரது அப்பா பெயரில் நூலகம் அமைத்திருப்பது மட்டும் தான்.

பேனா வைக்கிறதுக்கு இப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அது நடக்குமா நடக்காதா என்று தான் தெரியவில்லை. ஆனால் எழுதாத பேனாவை கடலில் கொண்டு சென்று வைக்கிறார். மீனவர்கள் மக்கள் எல்லாம் அதனை எதிர்ப்பதால், அந்த பேனாவை தரையில் வைக்கலாம்.

நான் பேனா வைப்பதை எதிர்க்கவில்லை. 81 கோடியில் பேனா வைக்க வேண்டிய அவசியமில்லை. 2 கோடியில் பேனா வைத்து விட்டு மீதமுள்ள 79 கோடிக்கு மாணவர்களுக்குப் பேனா வாங்கி கொடுத்தால் அவர்கள் அதனை வைத்து எழுதுவார்கள்.

21 மாதமாகி விட்டது, குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் தருகிறேன் என்றார்களே கொடுத்தார்களா? குடும்பத் தலைவிகளுக்கு 21 ஆயிரம் கிடைக்கவில்லை. மாதந்தோறும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்பதாகக் கூறினார்கள். அதையும் கொடுக்கவில்லை.

இந்தியாவில் 21 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்தார்கள். தமிழ்நாடு மட்டும் குறைக்கவில்லை. சட்டம் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. எல்லா இடத்திலும் போதைப் பொருள் தாராளமாகக் கிடைக்கிறது.

திறமையற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்வதால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது.

அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவியாக இருக்கிறது. அதிமுகவிற்கு யாரும் உதவி செய்யவில்லை. இந்த இடைத்தேர்தலின் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும். பாஜக கூட்டணி நிலைக்கும்.

ஒவ்வொரு கட்சித் தலைவரும் தன்னுடைய கட்சி வளர்வதைத் தான் பார்ப்பார்கள். மற்ற கட்சியை வளர்ப்பதற்காகவா நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் திமுகவை பொறுத்தவரை, திமுக மட்டும் தான் வளர்கிறது. அதன் கூட்டணிக் கட்சிகள் தேய்ந்து கொண்டிருக்கிறது.

மின் கட்டணம், சொத்து வரி, குடி வரி உயர்ந்து விட்டது. இதைபற்றி திமுக கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுத்ததா? திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். இன்னும் கொஞ்ச நாள் போனால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய் விடும்” என்று பேசியுள்ளார்.

மோனிஷா

“நாடாளுமன்றத்தில் நாடகம் போடும் மோடி”: ஸ்டாலின் கடும் தாக்கு!

தொடங்குகிறது மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *