ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்திருந்தனர்.
இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு மீண்டும் ஒரு பொதுக்குழுவை நடத்தி முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் அதற்குப் பதிலாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பெறப்பட்ட ஒப்புதல் படிவங்களைப் பொதுக்குழு உறுப்பினர்கள் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் இன்று (பிப்ரவரி 6) மாலை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளார்.
இந்நிலையில், இந்நிலையில் இன்று காலை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காகச் செந்தில் முருகன் இந்த போட்டியில் இருந்து விலகுகிறார். இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதற்காகவும் விலகிக் கொள்கிறோம்.
இரட்டை இலை வெற்றி பெற நாங்கள் பிரச்சாரம் செய்வோம். இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவிற்காக இல்லை. இரட்டை இலைக்காக நாங்கள் பிரச்சாரம் செய்வோம்” என்று கூறினார்.
மோனிஷா