kanimozhi slam bjp government

உழைக்கும் எறும்பு தமிழ்நாடு,.. ஊதாரி சில்வண்டு உத்திரப்பிரதேசம்- கனிமொழி சொன்ன குட்டி ஸ்டோரி!

அரசியல்

2024- மக்களவைத் தேர்தலையொட்டி,  “உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் – பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்” என்ற தலைப்பில் தமிழகம் முழுதும் நேற்று முதல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தத் தொடங்கியிருக்கிறது திமுக.

இதன் முதல் கட்டமாக பிப்ரவரி 16 ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில்  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். சுமார் 35 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையில் மாநிலங்களுக்கு இடையிலான நிதிப் பகிர்வு குறித்து, ‘எறும்பு- சில்வண்டு’ குட்டிக் கதை மூலம் விளக்கியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

”ஒவ்வொரு விஷயத்திலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தென்னாட்டு மக்களுக்கு தொடர்ந்து எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

நமது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இங்கே சொன்னார். ஜிஎஸ்டியில் ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வாங்கிய வரியை திருப்பிக் கொடுக்க வேண்டுமா இல்லையா? கொடுப்பதே கிடையாது.

நாம் ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் தமிழ்நாட்டுக்கு 26 பைசா, கேரளாவுக்கு 62 பைசா, கர்நாடகத்துக்கு 40 பைசா என்ற அளவில்தான் திரும்பி வருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் கொடுத்தால் இரண்டு ரூபாய் இரண்டு காசுகள் அவர்களுக்கு கிடைக்கிறது. அதாவது உத்தரப் பிரதேசத்துக்கு டபுள் மடங்காகக் கிடைக்கிறது.

100 ரூபாய் கொடுத்தால் டபுள் பண்ணி கொடுப்பதாக மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் சொல்லுவார்கள் இல்லையா… அதுபோல உத்தரப்பிரதேசத்துக்கு நிஜமாகவே ஒன்றிய அரசு செய்துகொடுக்கிறது.

kanimozhi slam bjp government

கேட்டால், அது முன்னேற வேண்டிய மாநிலம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன்… பத்து வருடமாக உங்கள் ஆட்சிதானே நடக்கிறது? ஏன் இன்னும் அது முன்னேற வேண்டிய மாநிலமாகவே இருக்கிறது? தமிழ்நாட்டை நம்முடைய முதலமைச்சர் பல்வகைகளில் முன்னேறிய மாநிலமாக முதல் மாநிலமாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். அதுவும் எப்படிப்பட்ட நிலையிலே..? ஒன்றிய அரசாங்கம் எந்த விதத்திலும் தமிழ்நாட்டுக்கு நிதி உதவிகள் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி, மீறி முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை நாம் உருவாக்கிக் காட்டியிருக்கிறோம்.

ஆனால் உத்தரபிரதேசத்தில் நிதியைக் கொண்டு கொட்டுகிறார்கள். ஆனால் அது ஏன் இன்னும் வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக்கிறது என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மக்களவையில் இப்போது  543 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதை மக்கள் தொகைக்கு ஏற்ப 800 ஆக மாற்ற வேண்டும். வட மாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுப் படுத்தவில்லை. ஆனால் தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. அதனால் இன்று நாம் பழிவாங்கப்படுகிறோம்.

சரியாக நிர்வாகம் செய்து கல்வியை கொண்டு சேர்த்து குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று, அவர்களை பகுத்தறிவு உள்ளவர்களாக ஆக்கி மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கின்றன தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள். ஆனால் வட மாநிலங்கள் இவை எதையுமே செய்யாமல் மக்கள் தொகையை பெருக்கி வைத்திருக்கின்றன.

உங்களுக்கு ஒரு கதை தெரியுமா? குளிர் காலத்தில் எந்த உணவும் கிடைக்காது என்பதற்காக எறும்பு கோடைக் காலத்திலேயே அலைந்து திரிந்து உணவுகளை சேகரித்துக் கொண்டு வைக்கும். ஆனால் சில் வண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆடித் திரிந்து மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கி எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்.

kanimozhi slam bjp government

குளிர்காலம் வந்தபோது எறும்புக்கு உணவு இருந்தது. ஆனால் அந்த சில் வண்டுக்கு உணவு இல்லை., தவித்துக் கொண்டிருந்தது. இது இயற்கை நீதி.

அந்த சில்வண்டுகளை தவிக்கவிடவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் உழைத்துச் சேர்த்து வைத்திருந்த எறும்பிடம் இருக்கும் உணவுப் பொருட்களை எல்லாம் பிடுங்கி, அந்த சில்வண்டுகளிடம் கொடுத்தால் அது எப்படி நியாயம் இல்லையோ அப்படித்தான்… இன்று நமக்கு நடந்துகொண்டிருக்கிறது.

கஷ்டப்படுகிறோம் உதவி செய் என்று சொன்னால் தமிழர்கள் என்றைக்கும் தரமாட்டேன் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் நம்மிடம் இருக்கும் அத்தனையையும் ஜிஎஸ்டி என்ற பெயரில் பிடுங்கிக் கொண்டு போய் உத்திரப்பிரதேசத்துக்கு கொடுப்பேன் உனக்கு திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் அதை நாம் எதிர்த்துக் கேட்க வேண்டும்” என்று பேசினார் கனிமொழி எம்.பி.’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வேந்தன்

‘க்…’ : தமிழ் அறிஞர்களுடன் ஆலோசனை செய்த விஜய்

Video: பந்தக்கால் நட்ட ‘தாய்மாமன்’ அருண் விஜய்… ஒன்று கூடிய சொந்தங்கள்… செலிப்ரேஷன் ஸ்டார்ட்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *