வயநாடு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று (மார்ச் 25) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
“பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன உறவு? அதானியின் ஷெல் கம்பெனிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் சென்றது எப்படி? இது யாருடைய பணம்? அந்த ஷெல் கம்பெனிகள் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்துள்ளன. இதுபற்றி பாதுகாப்புத் துறை ஏன் கேள்வி எழுப்பவில்லை?
அதானியும் பிரதமர் மோடியும் ரிலாக்சாக அமர்ந்திருக்கும் படத்தைக் காட்டி நாடாளுமன்றத்தில் பல கேள்விகளைக் கேட்டேன். அதானிக்கும் பிரதமருக்கும் என்ன உறவு என நான் பேசியபோது மோடியின் கண்கள் நடுங்கின. என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் என்னைப் பற்றி அவதூறுகளை மத்திய அமைச்சர்களே நாடாளுமன்றத்தில் கூற ஆரம்பித்தார்கள்.
நான் இங்கிலாந்தில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராக எதையும் பேசவில்லை. நீங்கள் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்தியாவின் பிரச்சினைகளை இந்தியா தீர்த்துக் கொள்ளும் என்றுதான் சொன்னேனே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.
ஆனால் நான் அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான உறவு பற்றி கேட்டபிறகு பாஜக வேலை செய்ய ஆரம்பித்தது. என்னை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. பாஜகவின் மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி கூறிய பொய்களுக்கு நான் நாடாளுமன்றத்தில் பதில் கூற வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தேன். அவருக்கு கடிதங்கள் எழுதினேன். பதில் இல்லை. நேராகவே அவரது சேம்பருக்கு சென்றேன். ஒரு மக்களவை உறுப்பினராக எனக்கு பதில் அளிக்க உரிமை உள்ளது. அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரினேன். ஆனால் அவர், ‘அது என்னால் முடியாது. வேண்டுமானால் உங்களுக்கு ஒரு கப் டீ தருகிறேன்’ என்று சொன்னார்.
நான் அதானிக்கும் மோடிக்கும் இடையிலான உறவு பற்றி கேள்வி எழுப்பியதுதான் எனது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம்” என்று விளக்கினார் ராகுல்.
மேலும் அவர், “நான் அதானி பற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டபோது பிரதமர் மோடி அஞ்சியது அவரது கண்களிலேயே தெரிந்தது. மீண்டும் நான் நாடாளுமன்றத்துக்கு வந்து அதானி- மோடி உறவு பற்றி விளக்கமாக பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் என் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களைப் போல நான் பயந்துவிட மாட்டேன் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். என் எம்பி பதவியை பறித்தாலும், என்னைக் கைது செய்தாலும் இந்திய ஜனநாயகத்துக்கான, உண்மைக்கான எனது குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்றார் ராகுல் காந்தி.
-வேந்தன்
வைரலாகும் கோலி குறித்த கேள்வி!
தொடரும் சோகம்: மின்சாரம் தாக்கி யானை பலி!