‘க்…’ : தமிழ் அறிஞர்களுடன் ஆலோசனை செய்த விஜய்

Published On:

| By Selvam

Vijay Tamizhaga Vetri Kazhagam K grammar changed

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றி கழகம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது. தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து சொன்ன அதேவேளையில், அவரது கட்சி பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து கல்வி சாலை கதிரவன்  ‘மின்னம்பலம் தமிழ்’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயரில் பிழை திருத்தம் உள்ளது. அதாவது வெற்றி என்பது நிலைமொழி, கழகம் என்பது வருமொழி. வெற்றி என்ற சொல்லில் ‘றி’ என்பது இகர ஈற்றுச் சொல். இகர ஈற்றுச் சொல்லைத் தொடர்ந்து க,ச,த,ப ஆகிய எழுத்துகளிலிருந்து ஏதேனும் ஒரு எழுத்து வந்தால் ஒற்று மிகும். எனவே வெற்றி+கழகம் = வெற்றிக்கழகம் என்று தான் வரும்” என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 17) மாலை மலர் செய்தித்தாளில் தென் சென்னை மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் எந்தவித சப்ஜெக்ட்டும் இல்லாமல் கட்சியின் பெயரில்  ‘க்’ சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பு ஆதரவாளர் விக்னேஷ்வரனை தொடர்புகொண்டு பேசிய போது,  “பெயர்சொல் என்ற அடிப்படையில் க் இல்லாமல் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து  பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து நேர்மறையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து,  தமிழ் அறிஞர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.  தொடர்ந்து கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்று திருத்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.

இந்நிலையில், ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

எனினும்,  தமிழக வெற்றி கழகம் கட்சியின் எக்ஸ் வலைதளம், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா, செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூறாவளிக்காற்று 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

விவசாயி சின்னம் கிடைக்குமா? – நீதிமன்றம் ஏறும் சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share