சேலம் மாவட்டம் தீவப்பட்டியில் திருவிழா நடத்துவதில் இன்று (மே 2) இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மோதலாக வெடித்துள்ளது.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இங்கு வன்னியர் தரப்பினர் மட்டுமே இந்த திருவிழாவை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கோவிலில் நாங்களும் திருவிழா நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. அப்பொழுது தீவட்டிப்பட்டி பகுதியில் இருந்த பேக்கரி, டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து தீ வைக்கப்பட்ட கடைகளை தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவிழாவில் சாமி கும்பிடுவதிலும் திருவிழாவை நடத்துவது தொடர்பாகவும் இரு தரப்பினிடையே ஏற்பட்ட இந்த மோதலால் தீவட்டிப்பட்டி பகுதி முழுவதும் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து கலவரம் அடுத்தடுத்த பகுதிகளுக்கு பரவாமல் இருக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தீவட்டிப்பட்டி பகுதி முழுவதும் காவல்துறையின் கண்ட்ரோலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடைசி நேரத்தில் மிஸ் ஆன பிரபுதேவா ப்ரோகிராம்: அப்செட்டான ரசிகர்கள்!
உங்கள் வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா? – தீவிர கண்காணிப்பில் போலீஸ்!