பாஸ்கர் செல்வராஜ்
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உற்பத்தி சுழற்சியை இரும்பிலிருந்து “இரும்பாலும் சிலிக்கனாலும் உருவாகி கம்பியில்லா மின்சார இணைய இணைப்பில் இணைந்து இயங்கும் பொருட்கள்” என்பதாக மாற்றி வருகிறது. இந்த உற்பத்தி மாற்ற தொழில்நுட்பங்களை சீனா எட்டிப்பிடிக்கிறது.
அது இதுவரையிலான உற்பத்தியின் மையமான எரிபொருள், தகவல் தொழில்நுட்ப பொருட்களில் அமெரிக்கா கொண்டிருந்த முற்றொருமையை உடைக்கிறது.
அதிகமாக டாலரை அச்சிடும் அமெரிக்கா
2008இல் இப்பொருட்களின் மதிப்பைத் தெரிவிக்கும் டாலர் உடைப்பைச் சந்திக்கிறது. அதனைச் சரிசெய்ய டாலரை மிகையாக அச்சிட்டு வெளியிட்டு நீர்க்க வைத்து அதன் மதிப்பைக் குறைக்கிறது அமெரிக்கா.
அது டாலரைக் கையிருப்பாக வைத்திருந்த எரிபொருள் மற்றும் சரக்குகளை விற்கும் ரசியா, ஈரான், சீனா போன்ற நாடுகளை டாலரைக் கைவிட்டு சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்வதை நோக்கி நகர்த்துகிறது.
அதனைத் தடுக்க அமெரிக்கா வர்த்தகப்போர், பொருளாதாரத்தடையில் இறங்கியது.
இந்த உடைப்பை முன்னெடுக்கும் சீனாவையும் ரசியாவையும் அச்சுறுத்திப் பணியவைக்க தைவான் பிரிவினைவாதத்தையும் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதையும் கையிலெடுத்தது.
இடையில் சீனாவில் வெடித்த கொரோனா பெருந்தொற்றை ஆயுதமாக்கி அந்நாட்டைத் தனிமைப்படுத்தி வீழ்த்த எத்தனித்தது. அதனால் மற்றுமொரு பனிப்போர் வெடிக்கும்; அங்கிருக்கும் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் இந்தியப் பார்ப்பனியம் அமெரிக்கச் சார்பெடுத்து டாலருக்கும் தகவல்தொழில்நுட்ப பொருளுக்குமான முற்றொருமையை இந்தியாவில் ஏற்படுத்திக் கொடுத்தது.
சீனா வெற்றி அமெரிக்கா தோல்வி
சீன மூலதனம் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை வெளியேற்றியது.
இந்தியாவின் எதிர்பார்ப்பிற்கு மாறாக கொரோனாவிடம் சீனா வென்று அமெரிக்கா தோற்றது. அதனால் ஏற்பட்ட நிதிச்சந்தை நெருக்கடிக்கும் முன்புபோலவே ஏழு டிரில்லியனுக்கும் மேலாக டாலரை அச்சடித்து மீண்டும் நீர்க்கச் செய்யும் வேலையைச் செய்தது அமெரிக்கா.
இந்த மிகையாக உருவாக்கப்பட்ட டாலர் காகிதங்கள் மதிப்புமிக்க சொத்துக்களை வாங்காமல் கதவைச் சாத்தி டாலர் கையிருப்பைக் குறைக்கும் வேலையில் இறங்கியது சீனா. இதற்கு நேர்மாறாக இந்தியா கதவை அகலதிறந்துவைத்து டாலர் கையிருப்பைக் கூட்டியது.
டாலர் கையிருப்பைக் கைவிட்டு சீன யுயனிலும் ஐரோப்பிய யூரோவிலும் வர்த்தகம் செய்யும் ரசியா, ஈரான் உள்ளிட்ட எரிபொருள் எதிர்தரப்பின் நடவடிக்கையால் உலகப் பரிவர்த்தனையில் யூரோவின் பங்கு முப்பது விழுக்காட்டுக்கும் மேலாக வளர்ந்து டாலருக்குப் போட்டியாக நின்றது.
அமெரிக்கா அச்சடித்த டிரில்லியன் கணக்கான டாலர்கள் உற்பத்தியிலும் ஈடுபடாமல் நாடுகளின் கையிருப்பாக குவியாமலும் பங்குச்சந்தையில் அலைந்து விலைவாசியை ஏற்றிக்கொண்டிருந்தது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள டாலருக்கு மாற்றான வர்த்தகத்தின் மையமாக விளங்கும் ரசியாவைத் தாக்கி யுயன், யூரோ ஆகிய இரண்டையும் ஒருசேர வீழ்த்த முற்பட்டது அமெரிக்கா. உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் வேலைகள் துவங்கின.
அது ரசிய எல்லையில் அணு ஆயுதத்தை நிறுத்துவதில் முடியும் என்பதால் ரசியா நிச்சயம் போரில் இறங்கும் என திட்டமிட்டு செய்யப்பட்ட நகர்வு. எதிர்பார்த்தது போலவே உக்ரைன் போர் வெடித்தது.
அதையே காரணமாகக் காட்டி அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை முடக்கி ரசிய பணமுதலைகளின் சொத்துக்களைக் கைப்பற்றி ரசியப் பொருளாதாரத்தை நிலைகுலைத்து அந்நாட்டை உடைக்க வைத்திருந்த திட்டம் யாரும் எதிர்பாராதது.
அதேபோல உக்ரைன் தலைநகரை நோக்கிப் படைகளை அணிவகுத்து அந்நாட்டைப் பணியவைக்க முயற்சித்த ரசிய மின்னல் வேகமும் நினைத்துப் பார்க்கமுடியாதது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதலை எதிர்பார்த்துத் தயாராக இருந்த ரசியர்கள் சீனாவின் உதவியுடன் அதனை முறியடித்தார்கள். அதேபோல 2014 உக்ரைன் சதிப்புரட்சிக்குப் பிறகு நேட்டோவால் பயிற்றுவிக்கப்பட்ட உக்ரைனிய இராணுவம் உரசிய முயற்சியை முறியடித்தது. இருவருக்கும் தோல்வி.
அடுத்துப் போரை நீட்டிக்கச் செய்து எதிரியின் ஆயுதங்களையும் ஆட்களையும் தீர்ந்து போகச்செய்து மண்டியிட வைக்கும் போர்முறைக்கு (war of attrition) இருவரும் மாறினார்கள்.
அமெரிக்க-ஐரோப்பிய எண்ணெய் மற்றும் சரக்கு உற்பத்தி நிறுவனங்களை வெளியேற்றி ரசிய பொருளாதாரத்தைத் தனிமைப்படுத்தும் வேலையில் இறங்கியது அமெரிக்கா.
சீனப் பொருட்களையும் அந்நாட்டு நிறுவனங்களையும் கொண்டு அதனை சமாளித்தது ரசியா. பதிலடியாக, டாலரின் விலையைத் தீர்மானிக்கும் வலிமையை உடைத்து அதன் தொங்குசதையாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பாடம் கற்பிக்கும் விதமாக ரூபிள் தந்தால்தான் எரிபொருள் உள்ளிட்ட தங்களின் சரக்குகளைத் தருவோம் என்று அறிவித்தது ரசியா.
இதன்மூலம் டாலருக்குப் பதிலாகச் சொந்த நாணயத்தில் தனது சரக்குக்கான விலையைத் தீர்மானித்து பரிவர்த்தனையைத் தொடங்கி வைத்தது. சோவியத் உடைப்பின்போது இழந்த தனது நாணயத்தின் மீதான இறையாண்மையை மீட்டுக் கொண்டதோடு மற்ற நாடுகளையும் அத்திசையில் பயணிக்க வைத்தது. அதன்மூலம் டாலரின் அடித்தளத்தை உடைத்து நொறுக்கும் தனது பதிலடியைத் தொடங்கி வைத்தது.
மலிவான ரசிய எரிபொருளை ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி செய்யப் பொருளாதாரத்தடை விதித்து அந்த இடத்தில் அதிக விலையில் அமெரிக்க எரிபொருளைப் பதிலீடு செய்தது அமெரிக்கா.
இப்படி உருவான ஐரோப்பிய எரிபொருள் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்த மேற்கு ஆசிய நாடுகள் முனையும்; அதன்மூலம் ரசிய முதுகெலும்பை உடைக்கலாம் என்று எண்ணியது அமெரிக்கா.
இன்று ரசிய சொத்தும் நாடும் சிதைக்கப்படுவதைப்போல நாளை தாங்களும் சிதைக்கப்படுவோம் என உணர்ந்து மேற்கு ஆசிய நாடுகள் ரசியாவுடன் நின்றன. பனிப்போரின்போது சந்தையில் எண்ணெயை அதிகமாகத் திறந்துவிட்டு அதன் விலையை வீழச்செய்து சோவியத் பொருளாதாரத்தை நலிவடையச் செய்து வீழ்த்த உதவிய சவுதி இம்முறை ரசியாவின் பக்கம் நின்று அதனைக் காத்தது ஒரு வரலாற்றுத் திருப்பம்.
மாற்று எரிபொருள் முயற்சி தோல்வியடைந்து விலையுயர்வால் நெருக்கடிக்கு உள்ளாகும் நிறுவனங்களையும் விலைவாசி உயர்வால் வெடிக்கும் மக்கள் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரசியாவை நெருங்கின.
ரசியாவில் இருந்து ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயுக்குழாய்களை வெடிவைத்துத் தகர்த்து நெருங்கவிடாமல் செய்தது அமெரிக்கா.
சீனா – தைவான் பிரிவினைவாத பிரச்சினை
அதற்கு ஜெர்மனி காட்டிய மௌனத்தைப் பார்த்த ரசியா ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அடிமைப்பட்டுக் கிடக்கும் இவர்களால் இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என முடிவுசெய்து மேற்குடனான உறவை முடித்துக்கொண்டு தன் மொத்த எரிபொருள் வர்த்தகப் பொருளாதார நடவடிக்கைகளையும் கிழக்கு நோக்கித் திருப்பியது.
ரசியா இப்படி பொருளாதார ரீதியாக நிலைத்து நிற்க துணைநின்று தகவல் தொழில்நுட்ப பொருட்களின் சந்தைக்கும் போட்டிக்கு நிற்கும் சீனாவை வழிக்குக் கொண்டுவர தைவான் பிரிவினைவாதப் பிரச்சனையைத் தீவிரமாக்கி அழுத்தம் கொடுத்தது அமெரிக்கா.
அமைதியான முறையிலான இணைவுக்குப் பதிலாக ஆயுதப்பாதையை தேர்ந்தெடுப்போம் என படைகளை அனுப்பி தைவானை சுற்றிவளைத்து அழுத்தமாகப் பதிவுசெய்தது சீனா.
தற்போதைய உற்பத்திக்கு அடிப்படையான சில்லுகளை சீனா பெறவிடாமல் துண்டிக்கும் வேலையில் இறங்கியது அமெரிக்கா.
சில்லுகளை உற்பத்தி செய்யத் தேவையான அச்சோவியக் கருவி (lithography machine) மற்றும் சில்லுகளை வடிமைக்கத் தேவையான மென்பொருளை சொந்தமாக உருவாக்கி இருப்பதாக அறிவித்து தனது சுயசார்பின் வலிமையைக் காட்டுகிறது சீனா.
எல்லோராலும் உருவாக்க முடியும் பதினான்கு நானோமீட்டர் சில்லுகளை மட்டுமல்ல உருவாக்கக் கடினமான அந்த அளவுக்கும் கீழான சில்லுகளையும் உருவாக்குவோம் என உரத்துச் சொல்கிறது.
சீனப் பொருட்களுக்கு அதிக வரிவிதித்து நட்பு நாடுகளுக்கு உற்பத்தியை மாற்ற (friend shoring) முனைந்த அமெரிக்காவுக்கு அதிலும் தோல்வி.
இப்படி நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்து இறக்குமதியாகி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதை புள்ளிவிவரங்களுடன் நிறுவுகிறார் ஏசியாடைம்ஸ் ஆசிரியர் கோல்டுமென்.
அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்வது குறையும் , அதேவேளை மற்ற ஆசியான், மத்திய-மேற்கு ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு இருமடங்காக உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக, கடந்த காலாண்டில் ரசியாவிற்கான சீன ஏற்றுமதி 53.8 பில்லியன் டாலர்கள்; அமெரிக்காவுக்கு 161.6 பில்லியன் டாலர்கள்.
முக்கியமாக, ரசிய ஏற்றுமதியில் எழுபது விழுக்காடு ரூபிள்-யுயன் நாணயத்தில் நடைபெற்று இருக்கிறது. மற்ற நாடுகளுடன் 48.4 விழுக்காடு பரிவர்த்தனை சீன நாணயத்தில் நடந்திருக்கிறது.
2021இல் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கக் கடன்பத்திரங்களை வைத்திருந்த சீனா தற்போது 859.4 பில்லியனாக குறைத்திருக்கிறது.
உலகின் மலிவான தரமான 5ஜி தொழில்நுட்பம் மற்றும் மின்கல உற்பத்தியில் அறுபது விழுக்காட்டுக்கும் மேலாகவும், சூரியமின்தகடுகள் உற்பத்தியில் எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக வைத்திருக்கும் சீனாவின் சி919 விமானம் வான்வெளியை ஆக்கிரமிக்கத் தயாராக நிற்கிறது. அதையும் இயக்க மின்கலத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்து அனைவரையும் வாய்பிளக்க வைக்கிறது.
வேகமான இணையத்தைக் கொண்டு உயர்தரத்தில் படங்களைத் தரவிறக்கிப் பாருங்கள்; இணையத்தில் விளையாடி மகிழுங்கள் என இந்திய அமெரிக்க வர்த்தக வர்க்கங்கள் அதனை விற்று காசாக்க முனைந்து கொண்டிருக்கின்றன.
சீனாவோ இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தித்திறனைக் கூட்டி துறைமுகப் போக்குவரத்துச் செலவைக் குறைத்திருக்கிறது. எரிபொருளில் இயங்கும் மகிழுந்தைவிட குறைவான விலையில் மின்திறனுந்து (electric car) ஒன்றை 11000 டாலருக்கு அறிமுகப்படுத்தி மேற்குலகின் வயிற்றில் புளியைக் கரைக்க வைத்திருக்கிறது.
உலகப் பரிவர்த்தனையிலும் கையிருப்பிலும் டாலரின் பங்கேற்பு குறைந்ததால் உயர்ந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவிகிதத்தை 5.25 விழுக்காடாக அமெரிக்கா உயர்த்தி இருக்கும் போதும் தங்கத்துக்கு எதிரான அதன் மதிப்பு 25 விழுக்காடு சரிந்திருக்கிறது.
மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலர் குறியீட்டு எண் பத்து விழுக்காடு சரிந்திருக்கிறது. நாடுகளின் மத்திய வங்கிகளின் டாலர் கையிருப்பு கிட்டத்தட்ட பத்து விழுக்காடு குறைந்திருக்கிறது. அதற்குப் பதிலாகத் தங்கத்தின் அளவைக் கூட்டிக் கொண்டிருக்கின்றன.
உக்ரைனில் போரிட ஆட்கள் இன்றியும் அவர்களுக்கு கொடுக்க மேற்கிடம் ஆயுதமின்றியும் எதிரியை அயற்சியுற்று இல்லமித்துப்போக வைக்கும் அந்தப் போரில் அமெரிக்கா தோற்கும் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவால் முடக்கப்பட்ட சொத்துக்கு இணையாக அந்நிய செலாவணிக் கையிருப்பை மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் சேர்த்து டாலர் காகிதங்களைவிட சரக்குக்குத்தான் உண்மையான மதிப்பு என்று உலகுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறது ரசியா.
புதிய மதிப்புவிதி
சுருக்கமாக டாலரை வாங்கிக்கொண்டு சரக்கைத் தருவதை சீனாவும் தவிர்த்துக் கொண்டிருகின்றன. உலக சரக்கின் விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலை டாலர் இழந்து கொண்டிருக்கிறது. நாடுகள் டாலரில் மட்டுமல்லாமல் மற்ற நாணய வர்த்தகத்திற்கு வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.
டாலரைக் கொண்டு சரக்கின் மதிப்பையும் மற்ற நாடுகளின் பணமதிப்பையும் தெரிவிக்கும் முறை மாறிக்கொண்டிருக்கிறது. இருவேறு மதிப்பு முறைகள் உருவான எழுபத்துகளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைவருக்கும் பொதுவான நியாயமான புதிய மதிப்புவிதியை உருவாக்கிக் கொள்ளவேண்டிய தேவை உருவாகிக் கொண்டிருக்கிறது.
உலகம் டாலரில் இருந்து விடுபட்டு புதிய மதிப்புவிதியை நோக்கி நகரும் இந்த சூழல் மற்ற நாடுகளுக்கு எழுபத்துகளை ஒத்தது. ஆனால் சீனர்களை வெளியேற்றி இந்தியாவில் அமெரிக்க-பார்ப்பனிய முதலாளித்துவ-சமூக ஏகாதிபத்தியத்தை நிறுவிய இந்தியாவுக்கு?
நாளை பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.
சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7
சிறப்புக் கட்டுரை: இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6
சிறப்புக் கட்டுரை: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5
சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4
சிறப்புக் கட்டுரை: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3
சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2
சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?