வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று (மே 2) முதல் அமலுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர், மருத்துவர் ஆகியவற்றின் பெயர்களை ஸ்டிக்கர்களாக அடிப்பது அதிகமாகி உள்ளது. இதைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது பலரும் அந்தந்த துறைகளில் இல்லாமல் ஸ்டிக்கர்கள் அடித்து ஒட்டியது தெரிய வந்தது.
இதனைத் தடுக்க தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடது என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினாலும், அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டினாலும் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதன் காரணமாக, தனிநபர் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்ட கூடாது எனவும், மீறி ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவ சங்கங்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து ஊடகங்களில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளலாம். ஆனால், அந்த செய்தி நிறுவனத்தின் அரசு அங்கீகாரம் செய்த அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
அதேபோல, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனம் மற்றும் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விதிகளை மீறி துறையில் இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டினாலும், நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினாலும் முதல் முறை விதியை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும், 2வது முறை விதியை மீறினால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக சென்னையில் காவல்துறை, பாதுகாப்புத்துறை என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் மட்டுமே இன்று காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியவேலு, “4 நாட்களுக்கு முன்பாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை என எந்த ஒரு ஸ்டிக்கரையும், வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டில் ஒட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, வாகனங்களில் இருக்கக்கூடிய நம்பர் பிளேட்டில் எந்த ஒரு ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது. வாகனத்தில் இருக்கக்கூடிய நம்பர் பிளேட் தெளிவாக தெரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து துறை ஸ்டிக்கர்கள் குறித்தும் அடுத்த அறிவிப்பு வந்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருப்பினும், தற்போது பலர் நம்பர் பிளேட்டில் உள்ள ஸ்டிக்கரை எடுத்து விட்டனர்.
தற்போது சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டு வாகனங்களில் மட்டும்தான் காவலர் என ஸ்டிக்கர் ஒட்டி வந்துள்ளது. மேலும், ஒரு சில நபர்களுக்கு வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் விவகாரம் தெரியாமல் இருக்கிறது. அவர்களுக்கு எடுத்துரைத்து அறிவுரைகளை வழங்கி, ஸ்டிக்கரை அவர்களே எடுக்குமாறு தெரிவித்துள்ளோம்.
முதல் முறையாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாகனத்தில் உள்ள ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால், மீண்டும் அடுத்த இடத்தில் போக்குவரத்து போலீசார் மூலம் பிடிக்கப்படும் பொழுது, அந்த வாகனத்திற்கு ரூ.1,500 அபராதமாக வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, காவல் துறை வாகனத்தில் இருந்து நாங்கள் இந்த நடைமுறையை ஆரம்பித்திருக்கிறோம். இந்த சோதனைக்கு காவல்துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு தருகின்றனர். இந்த நடைமுறையில் அரசு என்ன சொல்கிறதோ, அதை அடுத்த கட்டமாக செய்வோம்.
குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் கூட அந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வாகனத்தில் செல்கின்றனர். காவல்துறையிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் இப்படி செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இட ஒதுக்கீடு… மூங்கில் இல்லை என்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது: ராகுல்