அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்க மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மார்ச் 26ஆம் தேதிக்குள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28ஆம் தேதி எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். சிறப்பு நீதிமன்றம் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தாமதப்படுத்த முயன்றால் அவர்களை ஆஜராக கூறி, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடலாம். வழக்கை தினம்தோறும் விசாரித்து ஜூலை மாதத்துக்குள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு இன்று (மார்ச் 18) உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐ.பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “இந்த விவகாரத்தை பொறுத்தவரை அமைச்சராக இருந்தவர், பின்னர் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனப்படி ஆளுநருக்குதான் அதிகாரம் இருக்கிறது.
அதிகாரமற்றவர் வழங்கிய உத்தரவுபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தவறானது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தனர்.
மேலும், வரும் 28ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கும் விசாரணையை தள்ளிவைக்க ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்திய கம்யூனிஸ்ட் நாகை, திருப்பூர் வேட்பாளர்கள் அறிவிப்பு!
அன்புமணிக்கு திடீர் ஆஃபர்: பாஜகவின் இறுதி முயற்சி!