சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மார்ச் 26ஆம் தேதிக்குள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்குள் முடித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (மார்ச் 14) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சரியான காரணங்களை ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-இந்து
Jyothika: ரூபாய் 100 கோடியை வசூல் செய்தது ‘சைத்தான்’
புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு…. யார் யார்?