அதிமுக கூட்டணியை நோக்கி சென்று கொண்டிருந்த பாமகவுக்கு, இன்று திடீரென பாஜக மீண்டும் மேலும் சில ஆஃபர்களை அளித்து தங்கள் பக்கம் வருமாறு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று (மார்ச் 17) பாமக எம்.எல்.ஏ. அருள், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தூதராக சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையில் நேற்று மதியம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது, “இதுதான் எனது கடைசித் தேர்தலாக இருக்கும். இந்த முறை எப்படியாவது சில பாமக எம்பிக்களையாவது டெல்லிக்கு அனுப்ப ஆசைப்படுறேன். அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தான் அது சாத்தியம்.
தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக பிஜேபிய எதிர்க்குற நிலைமையில நாம அந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்தா ஜெயிக்க முடியாது. அதனால இந்த தேர்தலுக்கு மட்டும் என்னோட பேச்சைக் கேளுங்க. அடுத்து உங்க இஷ்டம் போல முடிவெடுத்துக்கலாம்’ என்று ராமதாஸ் வைத்த சென்டிமென்ட் வேண்டுகோளை அன்புமணியால் மீற முடியவில்லை. அதிமுக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் அன்புமணி.
இதையடுத்துதான் பாமக எம்.எல்.ஏ அருள் நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்று 2 மணி நேரம் பேசிவிட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் சென்டிமென்ட் பேச்சு… கண் கலங்கிய அன்புமணி… தைலாபுரம் செல்லும் எடப்பாடி… கூட்டணி க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்! என்ற தலைப்பிலான டிஜிட்டல் திண்ணை பகுதியில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அன்புமணியை சென்னைக்கு செல்ல வேண்டாம், அங்கு சென்றால் பாஜக தரப்பிலிருந்து அணுகுவார்கள். அதனால் இங்கேயே இருக்குமாறும் ராமதாஸ் கூறியிருக்கிறார். அதன்படி அன்புமணியும் தைலாபுர தோட்டத்தில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் கூறியது போலவே… மீண்டும் பாஜக தரப்பில் இருந்து பாமகவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழக பாஜகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், டெல்லியில் இருந்து அன்புமணியிடம் ஏற்கனவே பேசியிருந்தவர்களும் இன்று அன்புமணிக்கு போன் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அன்புமணியை சுற்றியிருப்பவர்களிடம் பேசி, ‘பாமக ஏற்கனவே கேட்ட பத்து தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருக்கிறோம். மத்திய அமைச்சர் பதவி குறித்தும் பேசலாம், அதிமுகவிடம் போகவேண்டாம். இங்கேயே வந்துவிடுங்கள்’ என்று பாஜக தரப்பில் ஆஃபர் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி என்ற எண்ணத்தில் இருந்த அன்புமணியை நேற்றுதான் டாக்டர் ராமதாஸ், சென்டிமென்ட் ஆக பேசி அதிமுக கூட்டணிக்கு ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார். ஆனால் இன்று பாஜக மீண்டும் அன்புமணிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சில முக்கிய புள்ளிகள் இன்று இரவு சென்னைக்கு வருவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில்தான்… பாமக உயர்மட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச் 18) மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Rain Update: நோட் பண்ணிக்கங்க மக்களே… தொடர்ந்து நாலு நாளைக்கு மழை இருக்கு!
அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!