Is Vaiko leaving the DMK alliance?

டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியில் இருந்து புறப்படுகிறாரா வைகோ? 4 எம்.எல்.ஏ.க்களை மடக்கும் அமைச்சர்கள்!

அரசியல்

வைஃபை ஆன் செய்யவும் மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அவசர நிர்வாக குழு பற்றிய அறிவிப்பு இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை படித்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதி தான் இந்த முறை ஒதுக்கப்படும் என திமுக தலைமை கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

ஆனால் மதிமுக தரப்பில் 2019 இல் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் கொடுத்தது போல இந்த முறையும் எங்களுக்கு வேண்டும்.  அதுவும் கடந்த முறை போட்டியிட்டது போல உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம்.  சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்  என பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர்.

அதற்கு திமுக தரப்பில், ’இது பற்றி தலைவர் முதலமைச்சரிடம் தான் பேச வேண்டும். நாங்கள் பேசிவிட்டு சொல்கிறோம்’ என்று கூறி விட்டார்கள்.

பிப்ரவரி 29 ஆம் தேதி காலை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன ராஜ், ‘நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் எங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்’  என்று தெரிவித்து விட்டு வந்தார்.

அதன்பிறகு மறுநாள் மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அவரை அறிவாலயத்துக்கு சென்று வாழ்த்தினார் வைகோ. அப்போது தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவதற்கு சூழலோ நேரமோ இல்லை.

Is Vaiko leaving the DMK alliance?

இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களாக திமுகவிடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அழைப்பும் மதிமுகவுக்கு வரவில்லை என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள்.

ஒரே ஒரு தொகுதி தான், அதுவும் உதயசூரியன் தான் என்பதில் திமுக உடும்புப் பிடியாக இருப்பதால், என்ன செய்யலாம் என்று தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் ஆலோசித்தார் வைகோ.

‘ கட்சியை அடுத்த 20 வருடங்களுக்கு நல்ல முறையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றால்… நாம் நமது சொந்த சின்னத்தில் இருக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னம், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னம் என்று நாம் பெரிய தவறுகளை செய்து விட்டோம். இனிமேல் அப்படி இருக்கக் கூடாது.  அதனால் தான் பம்பரம் சின்னத்தை வாங்குவதற்கு டெல்லி வரை தொடர்பு கொண்டு முயற்சித்து வருகிறேன்’ என்று தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார் வைகோ.

துரை வைகோ தலைமை கழக செயலாளராக ஆனதிலிருந்து… அவரும் மதிமுக தனி சின்னத்தில் நிற்கவேண்டும் என்று தான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் ஒன்றே ஒன்று அதுவும் உதயசூரியன் என்ற திமுகவின் நிபந்தனை பற்றி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து ஒரு முடிவெடுப்பதற்காக நாளை மதிமுக வின் அவசர நிர்வாக குழுவை கூட்டியிருக்கிறார் வைகோ.

Is Vaiko leaving the DMK alliance?

இதற்கிடையே மதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே இருப்பதை உணர்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி… இது குறித்து முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியிடம் பேசியுள்ளார்.  வேலுமணியும் மதிமுக தலைமை கழக நிர்வாகியிடம் பேசி இருக்கிறார். மூன்று மக்களவைத் தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா தொகுதி என்று அதிமுகவுடனும் பூர்வாங்க பேச்சுகள் தொடங்கி இருக்கின்றன.

தேர்தலுக்கு முன்னதாக வைகோ திசை மாறப் போகிறாரோ என்பதை உணர்ந்த திமுக தலைமை… தற்போது மதிமுகவின்  நான்கு எம்எல்ஏக்களான அரியலூர் சீனியப்பா, மதுரை பூமிநாதன், வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார், சாத்தூர் ரகுராமன் ஆகியோரிடம் அந்தந்த மாவட்ட அமைச்சர்களை விட்டு பேச ஆரம்பித்து விட்டது.

ஒருவேளை நாளை அவசர கூட்டத்தில் வைகோ கூட்டணி மாறும் முடிவு எடுத்தால்… உடனடியாக மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருவதற்கும் தயாராகிவிட்டது திமுக.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் சில தலைவர்கள் வைகோவை தொடர்பு கொண்டு… திமுக கூட்டணியில் அவரை தொடர வைப்பதற்கான கடைசி நேர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால் இதில் திமுக தலைமை நேரடியாக ஈடுபடவில்லை. முடிவை வைகோ எடுக்கட்டும் என்பதுதான் அறிவாலயத்தின் முடிவு” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”இது நல்லா இருக்கே” : முன்னணி ஹீரோவிற்கு காய் நகர்த்தும் ஜேசன் சஞ்சய்?

அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

+1
0
+1
4
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *