திமுக-மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மீண்டும் திமுக தரப்பினால் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அதை முழுதாக நிராகரித்த மதிமுக தரப்பு, இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம், உதயசூரியனில் போட்டியிட முடியாது என உறுதியாக சொல்லியிருக்கிறது.
குறிப்பாக மக்களவை தொகுதியைப் பொறுத்தவரை திருச்சி பாராளுமன்றத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்றும், அடுத்ததாக ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க வேண்டும் என்றும் மதிமுக கேட்டிருக்கிறது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனான துரை வைகோவை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது மதிமுக.
நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு கட்டத்தில் தனிச்சின்னத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறது திமுக தரப்பு. ஆனால் ஒரு எம்.பி தொகுதி மட்டும் தான் ஒதுக்க முடியும், இந்த முறை ராஜ்யசபா சீட்டு வழங்க இயலாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ராஜ்யசபா உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பதவிக்காலம் வரும் 2025-ம் ஆண்டு முடிகிறது. இதன் காரணமாக கடந்த முறை வழங்கப்பட்ட ராஜ்யசபா சீட்டு தங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று மதிமுக தரப்பிலிருந்து விடாப்பிடியாக சொல்லியிருக்கிறார்கள்.
பதிலுக்கு திமுக தரப்பு, கடந்த முறை ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியது மதிமுகவிற்கு அல்ல வைகோவிற்குத் தான் கொடுத்தோம், இந்த முறை அதைத் தொடர இயலாது என்று ஸ்ட்ராங்காக சொல்லியிருக்கிறது. அதை இந்த தேர்தல் முடிந்த பிறகு ராஜ்யசபாவுக்கான தேர்தல் வரும்போது பேசிக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் மதிமுக தரப்பிலிருந்து பேசும்போது, நாங்கள் கடந்த முறையே 2 லோக்சபா சீட்டு கேட்டோம். நீங்கள் தான் 1 லோக்சபா, 1 ராஜ்யசபா என்று சொன்னீர்கள். கூட்டணி நலனுக்காக நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம். இந்த முறையும் அந்த 1 லோக்சபா, 1 ராஜ்யசபா என்பதை இப்போதே உறுதிப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இன்று திமுக-மதிமுக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று உடன்பாடு கையெழுத்தாகவில்லை. திமுக கூட்டணியில் உள்ள சி.பி.ஐ, சி.பி.எம், கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ராஜ்யசபா சீட்டு விவகாரத்தின் காரணமாக மதிமுகவுடன் இன்னும் இழுபறி நீடிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“துரித நடவடிக்கை” : முதல்வருக்கு தருமபுரம் ஆதினம் நன்றி!
எலக்ஷன் ஃப்ளாஷ்: துரைமுருகன் மகனுக்கு சீட் உண்டா?