”கட்டாய இந்தியை மத்திய அரசு ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு தமது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கியது.
அதில், ’ஆங்கிலத்துக்கு பதில் இந்தியைப் பயிற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திமொழி தொடர்பாக அமித்ஷா குழு அளித்துள்ள பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியை எதிர்க்கும் மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
தமிழகத்தில்கூட இதற்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் இந்தி எதிர்ப்புபேரணி இன்று(நவம்பர் 1) சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.
இதில், நாம் தமிழர் கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவர்கள் அனைவரும் பேரணி சென்றனர்.
பேரணியின்போது கொட்டும் மழையிலும் அதனை பொருட்படுத்தாமல் நடந்து சென்றனர். இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச் சென்றனர்.
பேரணியின் நிறைவில் பேசிய சீமான், “இந்தி வந்தால் தமிழ்மொழி அழிந்துவிடும். மொழி அழிந்தால் பண்பாடு அழிந்துவிடும். பண்பாடு அழிந்தால் இனம் அழிந்துவிடும். இனம் அழிந்தால் நாடு அழிந்துபோகும்.
தேசிய இனத்தின் மொழி மீது ஒற்றை மொழியை திணித்து அழிப்பது என்பது எவ்வளவு பெரிய துரோகம்? இதனை எப்படி பொறுத்துக்கொள்வது? அதனால் கட்டாய இந்தியை மத்தியஅரசு ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டும்.
அது மிகப்பெரிய மொழிப்போரை இந்த நிலத்தில் எங்களை முன்னெடுக்கதூண்டும். நாம் ஒப்புக்கு கட்டாய இந்திதிணிப்பை எதிர்த்து போராடவிடல்லை. உளமார போராடுகிறோம்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் நேரு
மாறிமாறி புகழ்ந்துகொண்ட மோடி, அசோக் கெலாட்