நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் சென்னை சாலி கிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இல்லத்தில் அவரைச் சந்தித்து பேசினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்படும். குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின் கூட்டணி குறித்து தெரியவரும்” என்று கூறியிருந்தார். அதன்படி இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் அதிமுக – தேமுதிக இடையிலான முதல் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (மார்ச் 6) நடைபெற்றது.
இதில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.
தேமுதிக சார்பில் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், “இரு தரப்பினரும் பரஸ்பரமாக, நல்ல உறவோடு பேசிக்கொண்டோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக எதிர்காலத்தில் அமையும். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது என்று நாளை முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில், “2019 மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை தற்போது ஒதுக்க அதிமுக தரப்பில் தயாராக இருப்பதாகவும், வட சென்னைக்கு மாற்றாக வேறு ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது” என்றும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நீங்கள் எப்படி நலமாக இருப்பீர்கள்?” : எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
SK: மிகப்பெரும் தொகைக்கு ‘விலை’ போன சிவகார்த்திகேயன் படம்