தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவரை கேட்டுக் கொள்ளும் வகையில் திமுகவும் அதன் தோழமைக் கட்சி எம்பிக்களும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை தமிழகத்தில் பல விழாக்களில் கலந்துகொண்டு பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இந்த பின்னணியில் திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் ஆர்.என்.ரவியோடு சேர்த்து ஆளுநர் தமிழிசைக்கும் எதிராக கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முரசொலியில் நவம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட தனக்கு எதிரான சிலந்தியின் கட்டுரைக்கு ஆளுநர் தமிழிசை இன்று (நவம்பர் 6) கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தார்.
அவர் வெளியிட்ட செய்தியில், “ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே…. உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா?
எனவேதான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக் கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி ஆளுநரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள்.
சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்கு கேமரா மேனியா? மைக் மேனியாவா? இல்லை எங்களுக்கா?
உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம் ) எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது.
தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள். தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலுங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை.
என்னை யார் தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது? யார் அந்நியர் நீங்களா? நானா?
கடந்த மூன்று ஆண்டுகள் தெலுங்கானா உள்ளூர் பத்திரிகைச் செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப் போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலுங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும். மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்காக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதை அங்கே உள்ள முக்கிய பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவும்,முக்கிய செய்தியாகவும் அன்று மாலையே தொலைக்காட்சிகளில் விவாத பொருளாகவும் அவ்வப்போது நடந்து வருகிறது.
எனக்கு பதில் சொல்ல ஆட்சியாளர்களும் குடும்ப வாரிசுகளும் அமைச்சர்களும் கங்கணம் கட்டி நிற்பதே அதற்கு சாட்சி. அங்கே மக்களுக்காக ஆட்சியாளர்களை திணறடிக்கும் என்னை கை பிசைந்து நிற்பதாக கனவு காண்கிறீர்கள். ஆளுநருக்குரிய மரியாதையை தர தவறியதின் விளைவுகளை கண்டு தான் உங்களுக்கு பரமானந்தம் என்றால் அது மாதிரியான அற்ப சந்தோஷம்தான் உங்களுக்கு கிட்டும்…
இதன் மூலம் உலகத் தமிழர்களுக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டதாக தம்பட்டம் கட்டிய, வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது. அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம்.
தெலுங்கானாவில் மூன்று நாள் பாண்டிச்சேரியில் மூன்று நாள் என்று நேரம் ஒதுக்கி வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம். நான் பொதுவெளியில் வைக்கும் வாதங்களுக்கு பதில் விளக்கம் சொல்ல தெம்பும் ,திராணியும் அற்றவர்கள் தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி அண்டை மாநிலத்தில் மக்கள் பணியாற்றும் நான் கருத்து கூறினால் அதை எதிர்த்து கட்டுரை எழுதுவதுதான் உங்கள் கருத்து சுதந்திரமா? நீங்கள் எரிமலைகள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது. குருவி தலையில் பனம் பழமா என்று கேட்டிருக்கிறீர்கள்?
இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் அல்ல நாங்கள். பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள். முரசொலியின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாத போது… முரசொலி எங்களை என்ன செய்துவிட முடியும்?
வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும்?” என்று மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இன்று (நவம்பர் 6) மாலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “ஆளுநரின் தலையெழுத்தை கையெழுத்துகள் மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் கருத்து சொல்வதற்கான ஒரு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றால் யாருமே எதை நோக்கியும் கருத்து சொல்ல முடியாது. ஆளுநரின் கருத்துரிமையை அவர்கள் மறுக்கிறார்கள்.
அரசியல் ரீதியாக அவர்கள் உரிமை. ஜனநாயக ரீதியாக நடைமுறை ரீதியாக சரியில்லை. அவர் கருத்துக்கு எதிர்க்கருத்து இருந்தது என்றால் எதிர்க்கருத்து சொல்லலாம். அவர் ஒரு கருத்தை சொல்லிவிட்டார் என்றால் ஒவ்வொரு கருத்துக்கும் ஒவ்வொரு ஆளுநரை திரும்பப் பெறச் சொல்வீர்களா?
எரிமலை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எரிமலையாக ஏன் இருக்கிறீர்கள்? எரிமலைகளை விட நல்ல அருவிகள் உள்ள மலையாக பூங்கொத்துகள் கொண்ட மலையாக இருப்போம். தமிழ்நாடு என் மண். இந்த மண்ணோடும் காற்றோடும் என் உயிர் கலந்திருக்கிறது. தமிழிசைக்கு கருத்து சொல்ல உரிமையில்லை என்று சொல்ல இங்கே யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறியிருக்கிறார் தமிழிசை.
நாளை (நவம்பர் 7) முரசொலியில் தமிழிசைக்கு எதிராக அடுத்த கட்ட கட்டுரையை எதிர்பார்க்கலாம்.
–வேந்தன்
இது நான் உருவாக்கிய குஜராத்: மோடியின் புது கோஷம்!
ரோஹித் சர்மாவை பார்க்க 6.5 லட்சமா?