ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன். பாஜகவால் தான் நான் தோற்றேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப்ரல் 14) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றது. இல்லையென்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.
அதிலும் குறிப்பாக 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நான் நிச்சயமாக ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பேன். ராயபுரத்தில் தோற்பவனா நான்? 25 வருடம் ராயபுரம் தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்தேன். தோல்வி என்பதை அறியாதவன் நான். இதுவரை நான் இதை வெளியில் சொல்லியது இல்லை.
தேர்தலில் நான் தோற்க முக்கிய காரணம் பாஜகதான். அதிமுக கூட்டணியில் பாஜக, இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது நிச்சயமாக சட்டமன்றத்திற்கு சென்று இருப்பேன்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் தான் ராயபுரம் தொகுதியில் உள்ள 40,000 சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள் ஓட்டு எனக்கு கிடைக்காமல் போனது. அவர்கள் யாருக்கும் என்மேல் எந்த கோவமும் கிடையாது.
அந்த தேர்தலின்போதே மக்கள் என்னிடம் பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டு வர சொன்னார்கள். நான், ‘பாஜக தேவை இல்லாத சுமை தான், சமயம் வரும்போது கழட்டிவிடுவதாக கூறினேன். அதேபோல், நேரம் சரியாக அமைந்தது அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றிவிட்டோம்.
பாஜக என்பது அதிமுகவிற்கு தேவையில்லாத சுமை தான். ஓடாத வண்டி, ஓடாத பழைய சைக்கிள் பாஜக. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் இருந்திருந்தால், நான் 40,000 ஓட்டு வித்தியாசத்தில் நான் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்று இருப்பேன்.
2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக தோற்றதற்கு முக்கிய காரணம் பாஜக தான்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’எங்கள் காதுகள் பாவமில்லையா?’ : பாஜகவை இறங்கியடித்த ஸ்டாலின்
மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்?
GOAT: கேப்டனுடன் இணைந்து ஆடும் தளபதி… புகைப்படம் உள்ளே!