எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் பிரச்சார களம் சூடான வாதங்களால் தகித்து வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது!
அவர், “டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். விமானத்தில் இருந்து இறங்கியதும் நேராக ரோடு ஷோ நடத்துகிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது. இதற்காக மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா? தமிழ்நாட்டு மக்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள். உங்கள் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது” என்று பேசியிருந்தார்.
ஒரு நரி சொல்வதைப் போல் உள்ளது!
இதற்கு பதிலளித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை, “ எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது ‘உயரத்தில் இருக்கும் திராட்சை பழத்தை எட்டிப் பிடிக்க முயன்றுவிட்டு, பறிக்க முடியாமல், அந்த திராட்சை பழம் புளிக்கிறது’ என்று ஒரு நரி சொல்வதைப் போல் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ செல்ல வேண்டியது தானே? அவர்கள் வீதியில் வந்தால் மக்கள் யாரும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. தங்களை காண மக்கள் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்” என்று பேசியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக கூட்டணியால் தோற்றேன்!
இதுதொடர்பாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சன் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “கத்திரிக்காய்க்கு கால் முளைத்த மாதிரி தான் சமீபகாலமாக அண்ணாமலையின் பேட்டிகள் உள்ளது. அவர் நிதானம் இழந்து, மற்றவரை தரம் தாழ்ந்து விமர்சித்து பேசி வருவதை காணும் போது, அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி. அரசியலில் கத்துக்குட்டி. தமிழ்நாட்டின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார்.
தேர்தலில் போட்டியே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான். இந்தநிலையில் நானும் தேர்தல் போட்டியில் இருக்கிறேன் என்பதற்காக வடிவேலு மாதிரி நானும் ரவுடிதான் என்ற பாணியில் அதிமுகவை அண்ணாமலை சீண்டி வருகிறார்.
தமிழ்நாட்டில் தனியாக நின்று பாஜகவால் ஒரு எம்.எல்.ஏ சீட்டு வெல்ல முடியுமா? தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியுமா? பாஜகவுடன் 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைத்ததால் தான் அந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. பாஜக கூட்டணியால்தான் இதுவரை தோல்வியே காணாத நான் 2021 சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்தேன்.
கலைஞரால் கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை. ஒரு அண்ணாமலை அல்ல.. ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு பாஜக காணாமல் போகும்” என ஜெயக்குமார் ஆவேசமாக பேசினார்.
பாஜகவின் நிலை நரி போல் இருக்கும்!
அதே போன்று முன்னாள் அமைச்சர் செம்மலை அளித்துள்ள பேட்டியில், “நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவின் நிலை நரியின் நிலைமைபோல் தான் இருக்கும். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா?
அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒன்றரை சதவீதம் தான் வாக்கு வங்கி உள்ளது. எனவே தோல்வி பயத்தால் அண்ணாமலை உளறிக் கொண்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் பாஜக என்ன செய்தாலும் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வாங்கமாட்டார்கள்” என செம்மலை உறுதியாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தளபதி விஜயின் ‘GOAT’ படத்தில்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..!
ரொம்ப நல்லா இருக்கு… சிவகார்த்திகேயனின் படத்திற்கு குவியும் ஆதரவு!