ஓபிஎஸ் போல நான் வியாபாரம் செய்யவில்லை: திருச்சியில் எடப்பாடி ஆவேசம்!

அரசியல்

அதிமுக அலுவலகத்தை ஓ.பன்னீர் செல்வம் தனது குண்டர்களுடன் சேர்ந்து தாக்கி கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் ஓபிஎஸ் போன்று எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy speech

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இன்று (ஆகஸ்டு 28) திருச்சி சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருச்சி வயர்லஸ் சாலை பகுதியில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “அதிமுக கொண்டுவந்துள்ள திட்டங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்கின்ற எந்த திட்டத்தையும் திமுக அரசு செய்யவில்லை.

தினமும் மு.க.ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார். தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களுக்கும் 80 கோடி செலவில் பேனா வாங்கி கொடுத்து விடலாம். திமுக ஆட்சி அமைந்தவுடன் சொத்து வரி, மின் கட்டணம், தண்ணீர் வரியாக மக்களுக்கு போனஸ் கொடுத்துள்ளனர்.

குடும்ப பெண்மணிகள் மாதம் 4000 ரூபாய் உரிமைத் தொகையை உரிமையுடன் கேட்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி இல்லை என்கிறார்.

மழையின் காரணமாக, டெல்டா விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டது. திமுக அமைச்சர்கள், முதல்வர், யாரும் விவசாயிகளைப் போய் பார்க்கவில்லை.

edappadi palanisamy speech

அதிமுகவை சில பேர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து பிளக்கப் பார்க்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.

தொண்டர்களின் விருப்பபடி தான் ஓபிஎஸ் அவர்களை அதிமுகவுடன் இணைத்தோம். எங்களுடன் இணையும் போது 10 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஓபிஎஸ் அவர்களிடம் இருந்தனர்.

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக அவர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, நான் முதல்வராக விரும்பாததை எதிர்த்து வாக்கு செலுத்தியவர் தான் ஓபிஎஸ்.

அவர் எப்படி அம்மாவின் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்தார். அதிமுகவிலிருந்து வெளியே போன பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் பதவி கொடுத்து அழகுபார்த்தோம்.

அந்த நன்றியை கூட அவர் மறந்து விட்டார். அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்கிறார்.

அதிமுக அலுவலகத்தை குண்டர்களுடன் சேர்ந்து அடித்து நொறுக்கியிருக்கிறார் இவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்.

இப்படி கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டால் தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான். கட்சியை நான் உயிராக நேசித்துக் கொண்டிருக்கிறேன். ஓபிஎஸ் போல வியாபாரம் செய்யவில்லை.

ஓபிஎஸ் போல எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

கட்சியை அழிக்க நினைக்கின்ற ஓபிஎஸ் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.” என்று அவர் காட்டமாக பேசினார்.

செல்வம்

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல : தீர்ப்பு கிடைத்தும் இடம் தேடி அலையும் ஓபிஎஸ்

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *