முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 16) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
இன்று டெல்லி செல்லும் முதல்வர், புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கர் ஆகியோரை நாளை (ஆகஸ்ட் 17) டெல்லியில் சந்த்தித்து தனது வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 28ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக பிரதமரை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்கு அழைக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனது வாழ்த்துகளைத் தமிழக அரசுக்குத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டதற்காக, பிரதமர் மோடியை நாளை மாலை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவிக்க உள்ளார்.
மேலும் , நீட் விலக்கு, புதிய மின்சார மசோதா சட்டம், தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் சந்திப்பிற்கு பின்னர், மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்திக்கும் நிகழ்வு அரசியல் அரங்கில் பேசு பொருளாக உள்ளது.
செல்வம்
பிடிஆர் காரின் மீது காலணி வீசிய விவகாரம் : 3 பெண்கள் கைது!