விதார்த், யோகிபாபு, ஸ்ரீபிரியங்கா, இளவரசு என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) வெளியான திரைப்படம் குய்கோ. அந்தோணி தாசன் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, ஏஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மிகவும் எதார்த்தமான கதை, நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றால் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஆண்டவன் கட்டளை படத்தின் கதையாசிரியர் அருள் செழியன் குய்கோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
படம் பார்த்த பலருக்குமே குய்கோ என்பதன் அர்த்தம் என்ன? என்ற கேள்வி கண்டிப்பாக எழுந்திருக்கும். ஏனெனில் இந்த வார்த்தையை இதற்கு முன் பெரும்பாலும் நாம் எங்கும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
இந்த நிலையில் இயக்குனர் அருள் செழியன் நம்முடைய மின்னம்பலம் சேனலுக்கு அளித்த பேட்டியில் குய்கோ என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்பதை தெரிவித்துள்ளார். முதலில் இப்படத்தின் கதைக்கு பொருத்தமாக குடியிருந்த கோயில் என்ற பெயரை தேர்வு செய்திருந்தாராம்.
ஆனால் ஆண்டவன் கட்டளை, குடியிருந்த கோயில் என அடுத்தடுத்து பழைய பட டைட்டில்களாக இருந்ததால் குடியிருந்த கோயில் என்பதை சுருக்கி குய்கோ என டைட்டில் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படம் காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இயக்க ஆசைப்பட்ட படம் என்றும், ஆனால் அது நடைபெறவில்லை எனவும் அருள் செழியன் தெரிவித்துள்ளார்.
குய்கோ, ஆண்டவன் கட்டளை படங்கள் குறித்தும் நடிகர்கள் விதார்த், யோகிபாபு எப்படி குய்கோவுக்குள் வந்தார்கள்? என்பது பற்றியும் பல்வேறு விஷயங்களை அவர் தெரிவித்து இருக்கிறார். படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களுக்கு கீழே உள்ள பேட்டியை காணவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின் போட்ட உத்தரவு!
த்ரிஷா மீது மான நஷ்ட வழக்கு: மன்சூர் அலிகான்