இளைய பட்டாளத்தை கட்டுக்கோப்பாகவும் திராவிட கொள்கை கொண்டவர்களாகவும் மாற்றுவதற்காக இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டதாக முதன்மை செயலாளர் கே.என்.நேரு இன்று (நவம்பர் 26) தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தியாகராய நகர் அக்கார்டு ஓட்டலில் இன்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, “நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை 6 மாதங்களுக்கு முன்பே திமுக சார்பில் துவங்கி விட்டோம். தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கக்கூடிய அளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தலைவர் எங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார். எங்களது அடுத்த முக்கியமான பணி என்பது சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது தான்.
திமுக மாநாடு நடக்கிறது என்றால் அதன் எழுச்சி தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும். அதிலும் குறிப்பாக இது இளைஞரணி மாநாடாகும். சகோதரர் உதயநிதி இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு ஏராளமான இளைஞர்கள் திமுகவை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசு இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களை தீட்டி வருகிறது.
இளைய பட்டாளத்தை கட்டுக்கோப்பாகவும் திராவிட கொள்கை கொண்டவர்களாகவும் மாற்றுவதற்காக இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டார்.
2007-ஆம் ஆண்டு ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது இளைஞரணி மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. இரண்டாவது மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக நான் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன்.
காலை 9 மணிக்கு துணை பொதுச்செயலாளர் கனிமொழி திமுக கொடியை ஏற்றி வைக்கிறார். திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் மாநாட்டை திறந்து வைக்கிறார். முக்கிய தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். தலைவர் ஸ்டாலின் மாலை 6 மணிக்கு சிறப்புரையாற்றுகிறார். இளைஞரணி மாநாடு தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் முக்கியமான மாநாடாக அமைய போகிறது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு சேலம் மாநாடு அடித்தளம் அமைக்கும். 5 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
த்ரிஷா மீது மான நஷ்ட வழக்கு: மன்சூர் அலிகான்
காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடி: அன்புமணி வலியுறுத்தல்!