’பதான்’ படத்தை விமர்சித்த பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூருக்கு நடிகை ஷ்வரா பாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்திருக்கும் ’பதான்’ படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் திரைப்படத்தின் பாடல் ஒன்றில், தீபிகா படுகோன் காவி பிகினி உடை அணிந்து நடித்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர், காவி நிற உடை அணிந்து கவர்ச்சியாய் நடித்திருப்பது இந்து மதத்தைப் புண்படுத்தியிருப்பதாக பாஜக, இந்துத்வா உள்ளிட்ட அமைப்புகள் அப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இப்படத்திற்கு மத்தியப் பிரதேசத்தில் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பதான் பாடல் எதிர்ப்பு
இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் காவி நிற காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்படி நீக்காவிட்டால், படத்தை வெளியிட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்தப் படத்துக்கு எதிர்ப்பு ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் ஆதரவும் உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஷாருக்கான், “உலகம் என்ன செய்தாலும், நானும், நீங்களும் மற்றும் உலகில் உள்ள அனைத்து நேர்மையான மனிதர்களும் உயிருடன் இருக்கிறோம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. சினிமா மூலம் எதிர்கால சந்ததிக்கு புதிய உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
அவர் மட்டுமல்ல, நடிகை கஸ்தூரியும் இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நரோத்தம் மிஸ்ரா (ம.பி. உள்துறை அமைச்சர்) போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை, நடிகை தீபிகா படுகோன் ஒரு பாடலின் மூலம் 30 நொடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான நிறமாக மாற்றியுள்ளார்” என பதிவிட்டிருந்தார்.
பாடலுக்கு ஆதரவு
அதுபோல் நடிகர் பிரகாஷ் ராஜும் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை கற்பழிக்கிறார்கள். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள், வெறுப்பு பேச்சு பேசுகிறார்கள். ஆனால் காவி உடை அணிந்து திரைப்படத்தில் மட்டும் நடிக்கக் கூடாதா” என அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கிடையே பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர், ”காவி நிறத்தை தவறாக சித்தரித்துள்ள பதான் திரைப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது. அவர்களை சீக்கிரமே நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். அந்த காவி உடை காட்சிகளை மாற்றவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
காவி நிறம் என்பது நம் நாட்டின் பெருமை. தேசியக் கொடியிலும் காவி வண்ணம் உள்ளது. அதை அவமதிக்கும் செயல்களை அனுமதிக்க மாட்டோம். காவி நிறத்தை யார் அவமதித்தாலும் சட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
பாஜக எம்பிக்கு பதிலடி
இவருடைய கருத்துக்கு நடிகை ஷ்வரா பாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மக்களை ஏன் வேலையில்லாமல் அலைக்கழிக்கிறார்? போபால் மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டதா? நீங்கள் மிகவும் விசித்திரமானவராக இருக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
25 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தைச் சேர்த்து வைத்த சோஷியல் மீடியா!
நிதீஷை முதல்வராக்கியதற்காக வருத்தப்படுகிறேன்: பிரசாந்த் கிஷோர்