வீரன் என்ற பெயரைக் கேட்டதும் என்ன தோன்றுகிறது? மாபெரும் வீரச் செயல்களைப் புரிந்தவன், அசகாயமான வித்தைகள் தெரிந்தவன், எதிர்ப்பைச் சூறையாடுபவன் என்றெல்லாம் பலவாறாகத் தோன்றும்.
திரைக்கதை இலக்கணத்தைப் பொறுத்தவரை ஒருவரை வீரன் என்று சொல்ல வேண்டுமானால், அதுநாள்வரை அவரைச் சமூகம் கோழையாக நோக்கியிருக்க வேண்டும். அப்படித்தான் இருந்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை; ஆனால், அதுவே ரசிகர்களை எளிதாக ஈர்ப்பதற்கான வழி என்பதை மறந்துவிடக் கூடாது.
ஹிப்ஹாப் ஆதி, ஆதிரா ராஜ், சசி செல்வராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், வினய், பத்ரி மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ள ‘வீரன்’ படம் அப்படித்தான் அமைந்திருக்கிறதா?
மின்னல் வீரன்
மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்படும் காமிக்ஸ்களில் மின்காந்த ஆற்றலைத் தன்னகத்தே கொண்டிருக்கும் மின்னல் வீரர்கள் சிலர் கொண்டாடப்படுவது உண்டு. இந்தோனேஷிய தயாரிப்பான ‘குண்டலா’ எனும் படம் கூட அப்படியொரு கதையாக்கத்தைக் கொண்டதுதான்.
மின்னல் தாக்கி மரணம் என்று செய்திகளில் இடம்பெறுவதற்குப் பதிலாகச் சம்பந்தப்பட்ட நபர் ‘சூப்பர் பவர்’ பெறுவதுதான் இது போன்ற கதைகளின் மையம். ‘இடி விழுந்த இருளாண்டி’ என்ற பெயரை விவேக் காமெடியில் கேள்விப்பட்டிருப்போமே? அப்படியொரு நபர்தான் ‘வீரன்’ படத்தின் நாயகன்.
குமரன், செல்வி, சக்கரை மூவரும் ஒன்றாகப் பள்ளியில் பயில்பவர்கள். ஒருநாள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில், வீரன் கோயில் அருகே குமரன் மீது மின்னல் தாக்குகிறது. மருத்துவமனையில் தீவிரமாகப் பல நாட்கள் சிகிச்சையளித்தபோதும், குமரன் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. அதன் தொடர்ச்சியாக, நவீன சிகிச்சைகளைப் பெறுவதற்காகச் சிங்கப்பூரில் இருக்கும் சகோதரியின் வீட்டுக்கு அவரை அனுப்பி வைக்கின்றனர் உறவினர்கள்.
சில ஆண்டுகள் கழித்து, குமரன் (ஹிப்ஹாப் ஆதி) மீண்டும் சொந்த ஊரான வீரனூருக்கு வருகிறார். செல்வியையும் (ஆதிரா) சக்கரையையும் (சசி செல்வராஜ்) சந்திக்கிறார். அப்போது, வீரனூர் அழிந்துபோவதாகக் கண்ட கனவு உண்மையாகிவிடக் கூடாது என்று வருத்தப்படுகிறார். அதற்காக மட்டுமே ஊர் திரும்பியதாகச் சொல்கிறார். அவர்கள் இருவரும் அவர் சொல்வதை நம்பத் தயாராக இல்லை. ஆனால், குமரனிடம் உள்ள சிறப்புச் சக்திகள் அவர்களது மனதை மாற்றுகின்றன.
மின்னல் தாக்கியபிறகு, குமரனிடம் அளப்பரிய மின்காந்த ஆற்றல் குடிகொள்கிறது. அதனை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறிய காரணத்தாலேயே, அவர் வீரனூரை விட்டுச் சென்றிருக்கிறார். தற்போது அதே ஆற்றல் கொண்டு ஊருக்கு வரவிருக்கும் ஆபத்தைத் தடுத்து நிறுத்த விரும்புகிறார்.
சரி, அப்படியென்ன ஆபத்து வீரனூரைச் சூழ்ந்திருக்கிறது? லண்டனில் இருக்கும் ஒருவரால் அந்த வட்டாரத்தில் லேசர் கேபிள் வழியே மின்சாரம் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. அதில் ஆபத்துகளே அதிகம். பல கிராமங்களைக் கடந்த அந்த திட்டம், வீரன் கோயிலைத் தாண்ட முடியாமல் தேங்கி நிற்கிறது.
கோயில் பூசாரி அதற்குச் சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார். வீரனூரில் இருக்கும் சில சமூக ஆர்வலர்களும் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த நிறுவனத்தினர் அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு காரியத்தைச் சாதிக்க முயல்கின்றனர்.
இந்த நிலையில், குமரன் அந்த திட்டத்தைத் தடுத்து நிறுத்தினாரா? அதற்காக, தனது சிறப்பு ஆற்றலைப் பயன்படுத்தினாரா என்று சொல்கிறது ‘வீரன்’.
தான் செய்யும் சாகசங்களுக்கு ‘வீரன்’ எனும் நாட்டார் தெய்வத்தை நாயகன் கைகாட்டுவதாக நகர்கிறது திரைக்கதை. ஹீரோயிசம், காமெடி, திருப்புமுனை காட்சிகள் என்று நினைத்து அவ்வாறு முன்வைக்கப்பட்ட பல விஷயங்கள் கதையின் அடிப்படை நோக்கத்திற்கே ஆப்பு வைத்திருக்கிறது. அதனால், ‘தெய்வத்தை மீறி யாதொன்றுமில்லை’ என்ற கருத்தைத் தாங்கி நிற்பவர்களுக்கு இப்படம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அபாரமான வாய்ப்பு
ஹீரோ ஆதிக்கு இதில் ‘சூப்பர் ஹீரோ’ அந்தஸ்தைப் பெறும் அபாரமான வாய்ப்பு. ஆனால், வழக்கமான ஹீரோயிச காட்சிகள் அதனைச் சரித்திருக்கின்றன. பக்கத்துவீட்டுப் பையன் போலத் தோற்றமளிக்கும்போது இயல்பாகத் தெரிபவர், வீரனாகத் தோன்றும்போது ‘மாறுவேடப் போட்டியில் இருந்து பாதியில் வந்துவிட்டாரோ’ என்பது போல இருக்கிறார். கொஞ்சம் உடல்மொழியில் கம்பீரத்தையும் மிடுக்கையும் கூட்டியிருக்கலாம்.
ஆதிரா திரையில் அழகாகத் தெரிகிறார், நன்றாகச் சிரிக்கிறார்; அதைத் தாண்டி அவரை நினைவில் கொள்ளும்படியான காட்சிகள் இல்லாதது பெருங்குறை.
சக்கரையாக வரும் சசி செல்வராஜ், டிராக்டர் ஓட்டுபவராக வரும் ஜென்சன் திவாகர், முனீஸ்காந்த், காளி வெங்கட், நாயகியின் தாயாக நடித்தவர் என்று பலரும் காமெடி வசனங்களைத் தெளித்திருக்கின்றனர். போஸ் வெங்கட்டுக்குப் பெரிதாக வேலையில்லை. வில்லன்களாக வருபவர்களில் வினய்யை முந்துகிறார் பத்ரி. இவர்கள் தவிர்த்து சின்னி ஜெயந்த், ஜீவா ரவி உட்படப் பலர் இதில் வந்து போயிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் தீபக் மேனன், பின்னணி இசை அமைத்த ஹிப்ஹாப் தமிழா பங்களிப்பு சில காட்சிகளை வீரியமிக்கதாக மாற்றியுள்ளது. படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் பிரசன்னா ஜிகே, கொஞ்சம் விலாவாரியாகக் கதை சொல்ல உதவி நம்மைச் சோதித்திருக்கிறார்.
இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணனைப் பொறுத்தவரை, இது கத்தி மீது நிற்பதற்குச் சமமான ஒரு படைப்பு. ஆனால், அவர் சுதந்திரமாகச் செயல்பட்டாரா என்று கேள்வி எழுப்பும் வகையிலேயே திரைக்கதை அமைந்திருக்கிறது. ஏனென்றால், முந்தைய படமான ‘மரகத நாணயம்’ படத்தில் அதீத ஹீரோயிசமோ, தேவையற்ற காட்சிகளோ, கமர்ஷியல் பட டெம்ப்ளேட்களோ அறவே இருக்காது. இதில் அவை அனைத்தும் நிறைந்திருக்கின்றன.
கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்
ஒரு நேர்த்தியான பேண்டஸி படத்தைத் தரும்போது, அதில் கமர்ஷியல் சினிமாவுக்கான ட்ரீட்மெண்ட் கொஞ்சமும் தேவைப்படாது. அதைவிட மிக அதிகமான சாகசங்கள் திரையில் வெளிப்படும்விதமான காட்சிகளைப் பொருத்தமான இடங்களில் கோர்ப்பது அவசியம். ‘வீரன்’ படத்தில் அப்படியொரு சம்பவமே நிகழவில்லை.
ஊராட்சித் தலைவராக சின்னிஜெயந்த் செய்யும் அமர்க்களங்கள், இடைவேளைக்கு முந்தைய மோதல், போலீஸ் ஸ்டேஷனில் வீரனூர் மக்களிடம் விசாரணை, கிளைமேக்ஸ் காட்சி போன்றவற்றை ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தும்விதமாக எழுத்தில் வடித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், திரையில் அந்த மாயாஜாலம் நிகழவில்லை.
குழந்தைகளைக் குறிவைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கலாம். அதற்கேற்ப செல்லா மற்றும் அவரது மகளாக வரும் சிறுமி சம்பந்தப்பட்ட காட்சியொன்றும் உண்டு. ஆனால், அது எந்த வகையிலும் திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்கவில்லை. அதேபோல, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் இருக்கும் வன்முறையைத் தவிர்த்து காட்சியமைப்பைச் செதுக்கியிருக்கலாம்.
பேய்ப்படங்களுக்கென்று சில எழுதப்படாத இலக்கணங்கள் உண்டு; அமானுஷ்ய உணர்வை முன்னரே ரசிகர்களிடம் கடத்துவது, பேயின் செயல்பாட்டை உணர்த்துவது, முதன்முறையாக அதனைத் திரையில் காட்டுவது, அதன்பின் அதன் அட்டகாசங்கள் என்று ஒவ்வொன்றும் திரைக்கதையின் எத்தனையாவது பக்கத்தில் இடம்பெற வேண்டுமென்பதைத் திட்டமிட்டு முடிவு செய்வதே வழக்கம். சூப்பர் ஹீரோ கதைக்கும் அவை பொருந்தும்.
அதற்கு மாறாக, ‘என்கிட்ட இருக்குற பவரை கொஞ்சம் பாரேன்’ என்று ஹீரோவே விலாவாரியாகத் தனது திறமைகளை விளக்குவது ஒட்டுமொத்த ஆச்சர்யத்தையும் ஒரே அடியில் வீழ்த்திவிடுகிறது. அது போதாதென்று அவ்வப்போது அந்த சிறப்புச் சக்தியை நாயகன் பிரயோகிப்பதும், ‘அதுதான் எனக்குத் தெரியும்ல’ என்று உடனிருக்கும் நண்பர் பார்ப்பதுமாகப் பல காட்சிகள் நகர்வது சலிப்பு தட்டுகிறது. திரையில் வினய்யைப் பார்த்தவுடன், ‘டாக்டர் படத்துல கூட இப்படித்தானே காட்டுனாங்க’ என்ற எண்ணமே மேலோங்குகிறது.
அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாகப் படக்குழுவினரின் உழைப்பையோ, சிரத்தையையோ குறை சொல்லிவிட முடியாது. உப்பு, புளி, காரம் உட்பட அனைத்துச் சுவைகளையும் நிறைத்தாலும் சுவையற்றுப்போன குழம்பாகி இருக்கிறது ‘வீரன்’. இலக்கில்லாமல் பயணித்தவன் ஏதோ ஒரு இடத்தில் இளைப்பாறுவது போல படமும் சட்டென்று முடிந்துவிடுகிறது.
இதையெல்லாம் விட, இந்த படத்தில் பெருங்குறையொன்று காணக் கிடைக்கிறது. அதாகப்பட்டது, மொத்தக் கதையிலும் பெரும்பாலான திருப்பங்களை நாயகனே முடிவு செய்கிறார். ஒரு சூப்பர் ஹீரோ கதையில் வில்லன்கள் முதல் உப பாத்திரங்கள் வரை அனைத்துக்குமே முக்கியத்துவம் இருந்தாக வேண்டிய கட்டாயம் மீறப்பட்டிருக்கிறது.
அதனைச் செய்யாமல் இருந்துவிட்டு, தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படைப்பு என்று மார்தட்டிக் கொள்வது எந்த வகையில் நியாயம். அதனைச் சரிக்கட்டும் வழியாகவே முனீஸ்காந்தையும் காளி வெங்கட்டையும் இயக்குனர் முன்னிறுத்தி இருக்க வேண்டும். ஒரு சூப்பர் ஹீரோவுக்கான திரைக்கதை போரடிக்காமல் தவிர்க்க அதைக்கூட செய்யாமல் போனால் என்னவாகும்?.
உதய் பாடகலிங்கம்
கிராமிய மக்கள் வாழ்வியலை பேசும் தண்டட்டி: ட்ரெய்லர் எப்படி?
10 லட்சம் லிட்டர் ஆவின் பால் திருட்டு: பொங்கும் ராமதாஸ்