ஆண்டுக்கு 650 கோடி கொள்ளை? அரசு ஊழியர் இன்சூரன்சில் மோசடி!

அரசியல் தமிழகம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை முறைக்கு அவர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் 300 முதல் 500 ரூபாய் வரையில் இன்சூரன்ஸ்-க்கு பிடிக்கப்பட்டு வந்தாலும், தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தித்தான் சிகிச்சை பெறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று  ஆதாரங்களுடன் பேசுகின்றனர் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள். தற்போது அரசு ஊழியர்கள் இதற்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

2021 இல் மாற்றப்பட்ட இன்சூரன்ஸ்

2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர்  முதல்வராக இருந்தபோது அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் உயர்தர சிகிச்சை பெறுவதற்கு, அவர்களின் ஊதியத்திலிருந்து 300 ரூபாயும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பென்ஷனிலிருந்து 500 ரூபாயும் மாதந்தோறும் பிடித்தம் செய்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான ஸ்டார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கருவூலம் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு  இந்த முறை, பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாறியது.

“கட்டணம் இல்லா சிகிச்சை முறை இன்சூரன்ஸ் ஸ்கீமில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை, இன்சூரன்ஸ் அட்டையை எடுத்துப் போனாலே வேண்டாத விருந்தாளியைப்போல் நடத்துகின்றனர்,  தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள். காரணம் கரப்ஷனும் கலெக்ஷனும் அதிகரித்து விட்டது” என்று குற்றம் சாட்டுகிறார் முன்னாள் அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கண்ணன்.

இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ஒவ்வொரு மாதமும் 55 கோடி

நம்மிடம் பேசிய கண்ணன்,

“2008 இல் திமுக ஆட்சியில் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஸ்டார் இன்சூரன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போது தனியார் காப்பீடு நிறுவனத்தை உயர்த்த பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தை அழிக்கிறார்கள் என்று பொதுத்துறைக்கு ஆதரவாகப் போராடினோம்.

2021-இல் தனியார் நிறுவனமான ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றியது அரசு.

அன்று முதல் கட்டணம் இல்லா மருத்துவத் திட்டம், கட்டணம் செலுத்தும் திட்டமாக மாறிவிட்டது.

இந்த திட்டத்தின் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதில் குடும்பத்தில் அரசு ஊழியர், அவரது மனைவி அல்லது கணவர் மற்றும் பிள்ளைகள் பயன்பெறலாம். ஆனால் தாய் தந்தை பயனடைய முடியாது.

இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியர் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் 300 ரூபாயும், பென்ஷன்தாரரிடம் இருந்து மாதந்தோறும் 500 ரூபாயும் பிடித்தம் செய்யப்பட்டு, மொத்தமாக சுமார் 55 கோடி ரூபாய் ஒவ்வொரு மாதமும் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்தப்படுகிறது. இதனால் வருடத்திற்கு சுமார் 650 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அரசு ஊழியர் ஊதியத்தில் இருந்து போகிறது. ஆனால் அதனால் அரசு ஊழியர்களுக்கு எந்த பலன்களும் இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் அவலம்

அரசு ஊழியர்கள் உடல்நிலை சரியில்லை என்று தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், இன்சூரன்ஸ் திட்டம் என்றாலே சிகிச்சை அளிக்க யோசிக்கிறார்கள். அவர்களிடம் உயிர் பிழைக்க சிகிச்சை அளிக்கச் சொன்னால் Under taking படிவத்தில் கையெழுத்து கேட்கிறார்கள்.

அந்தப் படிவத்தில்,

  • வெளிநாட்டு கருவிகள், மருந்து செலவுகள் ஆகியவற்றுக்கான தொகையை நாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
  • குளிர்சாதன அறைக்கான செலவுத் தொகையை நாங்களே பொறுப்பேற்று கொள்வோம்.
  • மருத்துவக் காப்பீடு தொகையை விட மருத்துவமனை செலவுகள் அதிகமாக இருந்தால் அந்த தொகையை நாங்களே செலுத்துகிறோம்.
  • மருத்துவமனையில் செலவு செய்யும் மொத்த தொகையில் இருந்து மருத்துவ காப்பீடு தொகையை கழித்த பிறகு வரும் பில் மூன்று மாதத்திற்கு பிறகுதான் தரப்படும்

இப்படிப்பட்ட கண்டிஷன்களோடு கையெழுத்து போட்ட பிறகுதான் உள் நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிக்க முன்வருகின்றனர்.

அதுமட்டுமல்ல இன்சூரன்ஸ் கார்டு எடுத்துக் கொண்டு போனால் குறிப்பிட்ட ஆபரேஷனுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பில் போட்டு இன்சூரன்ஸ் தொகை போக,  மீதம் 60 ஆயிரம் சொந்த பணத்தை செலுத்தச் சொல்கிறார்கள். அதுவே இன்சூரன்ஸ் கார்டு காண்பிக்காமல் நேரடியாக பணம் கொடுத்தால் 60 ஆயிரத்தில் ஆபரேஷன் செய்து நல்லபடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள்” என்றார்.

அடுக்கடுக்காய் ஆதாரங்கள்

இதற்கு ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று அவரிடம் கேட்டோம்.

”மதுரை ப்ரீத்தி தனியார் மருத்துவமனையில் under taking படிவத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். கூடுதலாக பணம் பெறுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்துள்ளோம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வீனா என்பவருக்கு சிகிச்சை பில் 10,689 அதில் இன்சூரன்ஸ் க்ளைம் 6321 ரூபாய் போக மீதி 4,368 ரூபாய் செலுத்தினார்.

கோவை மாவட்டத்தில் மகேஸ்வரி என்பவர் கோவை தனியார் மருத்துவமனையில் செய்துகொண்ட சிகிச்சைக்கு மொத்தம் பில் 30000, இன்சூரன்ஸ் க்ளைம் 4100 ரூபாய் போக, மீதி 25,900 ரூபாய் சொந்தப் பணத்தை செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டத்தில் வேலுமணி என்பவருக்கு ஆப்ரேஷனுக்கு 4,65,737 ரூபாய் பில் வந்துள்ளது. அதில் இன்சூரன்ஸ் க்ளைம் செய்யப்பட்ட தொகை 54 ஆயிரத்து 102 ரூபாய் மட்டுமே. மீதி 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 ரூபாய் தொகையை கடன் வாங்கி செலுத்திவிட்டு அவர் வீட்டுக்கு வந்தார். இதற்குப் பெயர்தான் கட்டணம் இல்லா திட்டமா, இது யாரை ஏமாற்றுவது?” என்று ஆதங்கப்பட்டு பேசினார்.

ப்ரீத்தி மருத்துவமனை மீதுள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றி கேட்க தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் ரிங் போயும் எடுக்கவில்லை.

ஊழல் மற்றும் தரமற்ற சேவை

ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டோம்.

“உண்மைதான். காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் ஸ்கீமில் செய்யப்படும் ஒவ்வொரு சிகிச்சைக்கும் அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும். இது கடந்த ஆட்சியிலிருந்து இருக்கிறது. அதனாலேயே பல மருத்துவமனைகள் இன்சூரன்ஸ் ஸ்கீமில் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. கமிஷன் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, இன்சூரன்ஸ் அதிகாரிகள், கருவூல அதிகாரிகள் முதல் ஆணையர் வரையில் பணம் போகிறது” என்ற அதிர்ச்சி தரும் தகவல்களை சொன்னார்.

தனியார் நிறுவனம்தான் கொள்ளையடிக்கிறது என்று பொதுத்துறை நிறுவனத்தை நாடினால், தனியாரை விஞ்சும் அளவிற்கு ஊழலில் திளைத்திருப்பதாலும், சர்வீஸ் தரமற்று இருப்பதாலும் மக்கள் தானாகவே தனியார் நிறுவனங்களைத் தேடிப் போகும் அளவிற்கு செயல்படுகிறார்கள் பொதுத்துறை நிறுவனத்தின் அதிகாரிகள்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெறுப்புப் பேச்சு : மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீதான குற்றப் பத்திரிகை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி!

4 கோடி ரூபாய் விவகாரம்… போலீசில் ஆஜராகும் நயினார்

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *